Home Blog Page 2767

பயங்கரவாதிகள் இராணுவத்தினருடன் தொடர்பில் இருந்தனர் – ஹிஸ்புல்லா வாக்குமூலம்

‘நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார்.  இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை  பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.’

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து  விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள    பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை,  உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்’ என நீங்கள் கூறியது சரியா?

பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள்  அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர். அன்றாட வாழ்க்கை அனைத்துமே  ஸ்தம்பிக்கப்பட்டு  இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி  முகத்திடலில் இடம்பெறும். இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன். இதன்போதே  நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.

கேள்வி :- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா? 

பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே  கூறினேன்.

கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?

பதில் :- ஆம் சந்தித்தேன்

கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?

பதில்:- கூறுகிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன்   அவர் எம் அனைவரையும்  சந்தித்து பேச அழைப்பு விடுத்தார். அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள்  அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும்  அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், ஏனைய பலரும் வந்தனர்.

கேள்வி:- அரசியல் வாதிகளை கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்?  அவருக்கு அனைத்து கட்சிகளை சந்திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மத தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார்.

கேள்வி:- நீங்கள்  அவரை பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?

பதில்:- அவர் பயங்கரவாதி தான் அதனை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த காலத்தில் அவர் மத தலைவர்.  இளைஞர் அனைவரும் அவருடன் இருந்தனர்.  பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன .

கேள்வி:- என்ன உடன்படிக்கை ?

பதில்:- தேர்தல்  கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப  முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும். வாக்குகளை  பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.

கேள்வி:- தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா? 

பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம். அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார்.  2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார்.

என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை  செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார். என்னுடன்  சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர். இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள்  வந்தன.

இந்தியாவில்  கேலி சித்திரம்  ஒன்றை  எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப்புத்தகதில் விமர்சனம் செய்தனர், அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார்.  என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை.  எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர்  பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு  இருந்தார்.

கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும்  இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார்.  இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை  பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து? 

பதில் :- ஆம் 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .

கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்? 

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன்

கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன? 

பதில்:- வாக்கு  பலம் தான்

கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர்  என நினைகிறீர்கள்?

பதில்:- இரண்டாயிரம் மூவாயிரம்  வாக்குகள், அப்போது நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம்  வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர்.  ஆகவே அது பலம் தான்.

இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறு வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத் அவர்களுடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது.  அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.

கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா? 

பதில்:- ஆம், சஹ்ரான்  எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம்  அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளை கொண்டு தாக்குதல்  நடத்துவார்.

கேள்வி:- அப்படிஎன்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?

பதில்:- ஆம், சகல சலுகைகளையும்  பெற்றார்.

கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும்  முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக  வெறுப்புணர்வையும்  ஏற்படுத்தினார்.  அப்படியா? 

பதில்:- ஆம், அவர்  மத ரீதியில்  தாக்குதல் நடத்துவார். 2010-11 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள்  ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் பயணித்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது இன்று காலை கடற்கண்ணி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 12ஆம் திகதி சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த புதிய தாக்குதல் வளைகுடாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுவதால் இந்த புதிய சம்பவத்தின் மூலம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் புதிய முறுகல் நிலை ஏற்படக்கூடுமென்ற அச்சம் தோன்றியுள்ளது.

இன்று தாக்குதல் நடத்தப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான கொகுகா குறாஜியஸில் இருந்து அதன் சிப்பந்திகள் 21  பேரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதல்களில் சிக்கிய ஒரு கப்பலில் பெரும் தீ பிடித்ததை ஆதாரப்படுத்தும் நிழற்படங்களை ஈரான் வெளியிட்டது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதான ஐயங்கள் நிலவுகின்றன.

கடந்த மாதம் 12ஆம் திகதி ஞாயிறன்று சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஈரானிய பின்புலத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு தாக்குதல்களில் சேதமடைந்திருந்தன.

அதன் பின்னர் சவுதி அரசிற்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி ஆயுததாரிகள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாலும் விநியோகம் சீர்குலைந்தது.

றியாட் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு செல்லும் 1200 கிலோமீற்றர் நீளமுள்ள குழாய்களே இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரானிய எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா தடை விதித்தால் ஹோர்மூஸ் ஜலசந்தி நீர்த்தடத்தை மூடிவிடப் போவதாக ஏற்கனவே ஈரான் எச்சரித்த நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதைய நிலவரம் மேலும் தீவிரமானால் உலக எண்ணெய் சந்தை கடும் நெருக்கடிக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் நான்கு வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு விடுக்கும் அறிக்கை

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு, அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிற்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் நாம் கருதுகின்றோம். தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகியாமையை தூண்டுவதாக அமைந்துள்ளன.

பிரதமருடன் 12.06 அன்று  இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எமது கருத்துக்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராகவும் மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம்.

சகல சமூகங்களிடையேயும்  சமாதானத்தை பேணி நிலை நிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம் பக்கபலமாக உள்ளதுடன் சமய தலைவர்கள் மற்றும் இதர சமூக தலைவர்கள் அவர்களை வழிநடத்தி, வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அனைவருக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் நம்பிக்கை அல்லது இன வேறுபாடின்றி பரஸ்பர மதிப்பு, சகிப்பு மற்றும் சமமாக நடத்தல் போன்றவற்றுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களையும் மீள உறுதி செய்யுமாறு நாம் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம்.

 

 

 

 

கண்ணால் காண்பதே மெய்

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே  உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை, நேரடியாகச் சென்று தெளிவுபடுத்தும் நோக்கில், திங்கட்கிழமை காலையில், அமைச்சர் திருகோணமலைக்குச் சென்றிருந்தார். சர்ச்சைக்குரிய புண்ணிய பூமியுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் எம்.என்.புஸ்பகுமார தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்ற விஷேட சந்திப்பில், கன்னியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த  விகாரையில், பிரதான தேரர், கன்னியா பிள்ளையார் கோவில் நிர்வாகிகள், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல, அமைச்சர் மனோ  கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், சுசந்த புஞ்சிநிலமே, சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் சிவில் அமைப்பினரும்  கலந்துகொண்டிருந்தனர்.

ஆலய பரிபாலன சபையின் குற்றச்சாட்டுப்படி, பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு பௌத்த விகாரை கட்டவுள்ளார்கள் என்பதாகவே அமைந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அதனையே சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசத்தில், புதிதாகப் பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் தொல்பொருள் திணைக்களம்,  இருந்த கோவிலைப் புனருத்தாபனம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்ற  குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த  புஞ்சிநிலமே, கடுந்தொனியில் அதனை மறுத்து, இலங்கையில் ஒரு சட்டம்தான் அனைத்து இடங்களிலும் பிரயோகிக்கப்படுவதாக வாதிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷவின் எடுபிடியான சுசந்தவின் கூற்றை இடைமறித்து, ‘நாங்கள்தான் இங்கு அரசாங்கம்.  எதை எப்படிச் செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என, அமைச்சர் மனோ  கணேசன் முற்றுவைத்தார்.

இந்தக் கலந்துரையாடலினூடாக, சில அடிப்படைப் பிரச்சினைகளை அவதானிக்க  முடிந்தது. சிறுபான்மை இனங்களாக இருப்பவர்களின் குரல்கள் நசுக்கப்படுவது  தெளிவாகத் தெரிகிறது. தொல்பொருள் திணைக்கள நிர்வாக சபையில் எந்தவொரு  சிறுபான்மை இனத்தவரும் இல்லை. 32 உறுப்பினர்களைக் கொண்ட அந்தச் சபையில், ஒரு சிறுபான்மை இனத்தவர்கூட இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நிலைமை  அப்படியிருக்கையில், உண்மையான புராதனம் பாதுகாக்கப்படுமென்பதை ஒருபோதும்  நம்ப முடியாது. image 0f126edb65 கண்ணால் காண்பதே மெய்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் மண்டவல, தொல்பொருள் சட்டங்களை விளங்கப்படுத்தினார். தொல்பொருள்  திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேதப்படுத்துவது பாரிய  குற்றச்செயலாகக் கருதப்பட்டு வழக்குத் தொடரப்படுமெனவும், அப்படிச் சேதம்  விளைவித்தவர்களுக்குப் பிணை வழங்குவதில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.  அதுமாத்திரமன்றி, கன்னியா பிரதேசத்திலுள்ள வெந்நீரூற்றுப் பிரதேசம்,  தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட 243ஜி கன்னியா  கிராம அலுவலர் பிரிவிலுள்ள வெந்நீரூற்றும் அதனைச் சூழவுள்ள எச்சங்களும்  தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனத் தெரிவித்த மண்டவல, அங்கு  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்  எச்சங்கள் அநுராதபுர யுகத்துக்குரியவை எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்கு  நேரடியாகச் சென்று பார்த்தோம். வெந்நீரூற்றுக்கும் கிரியை செய்யும் சிவன்  கோவிலுக்கும் இடையில் இருந்த பிள்ளையார் கோவில்தான்  இடிக்கப்பட்டிருக்கிறது. அக்கோவிலுக்குச் சொந்தக்காரர்கள்தான், அக்கோவிலைப்  புனருத்தாபனம் செய்வதற்காக இடித்திருக்கிறார்கள். புனருத்தாபனத்துக்கான  வேலைகள் நடைபெறும்போதுதான் பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்குக் கீழே,  பௌத்த விகாரையொன்றின் அடிப்பாகம் தென்பட்டுள்ளது.

அதனையடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டினால் பிள்ளையார்  கோவில் கட்டும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அன்றைய கூட்டத்தில்  கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டவல,  பிள்ளையார் கோவில் அமைப்பதற்கான மாற்று இடமொன்றைத் தருவதாக உறுதியளித்தார். அதுமாத்திரமன்றி, கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில், பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும் தமிழ் பௌத்த வரலாறு இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும், கன்னியா விகாரையின் தேரர்கள் உடன்பட்டனர்.

இதேவேளை, புராதன சிதைவுகளுக்குச் சேதம் ஏற்படாத வகையில், கன்னியா  வளவுக்குள் வெந்நீரூற்று விநாயகர் ஆலயத்தை அமைக்கவும், வெந்நீரூற்று சிவன் கோவிலைப் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டதுடன், கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து  சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். image b08e8e00b9 கண்ணால் காண்பதே மெய்

அமைச்சர் மனோ கணேசனின் தலையீட்டையடுத்து, பிரச்சினை ஓரளவுக்குத் தணிக்கப்பட்டிருக்கிறதே தவிர முற்றுப்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார்க் காணிகளில் தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுமாக இருந்தால், அக்காணியைத் தொல்பொருள் திணைக்களம் தம்வசப்படுத்தும். இதுதான்  சட்டம். அச்சட்டத்தின் அடிப்படையில், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலுள்ள  பிள்ளையார் கோவில் காணிக்கு உரிமைகோரும் கணேஷ் கோகிலரமணி, சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

ஆனாலும், அவரும் சில விடயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தால்,  மாற்று இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கான அனுமதியைப்  பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ‘விகாரையின்மேல் கோவில் கட்ட அனுமதியோம்’ என, பிக்குகள் சொன்னபோது, அங்குசென்ற எமக்கும் உண்மை  புரியவில்லை. நேரடியாகச் சென்று பார்த்தபோதுதான், சிதைந்துபோன விகாரை  எச்சங்களுக்கு மேலாகப் பிள்ளையார் கோவிலைக் கட்டமுடியாதென்பது தெரியவந்தது.  தொல்பொருள்களைப் பாதுகாப்பது அனைவரதும் கடமை. ஆனால், ஓர் இனத்தை மாத்திரம் மய்யப்படுத்தியதாக தொல்பொருள்களைச் சித்தக்கக்கூடாது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இராமாயணத்துடன் தொடர்புடையதெனக் கருதப்படும் கன்னியா வெந்நீரூற்றுக்குள் எவ்வாறு பௌத்த விகாரைகள் முளைத்தன என்பது கேள்விக்குறிதான்.

ஆனாலும், பிற்பட்ட காலங்களில் மேற்கொள்ளப்பட்ட  படையெடுப்புகள், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் என்பன, இன்னமும் தொல்பொருள் எச்சங்களாக இருக்கின்றன. அப்படியானதோர் எச்சமே, தற்போது கன்னியாவில் வெளிப்பட்டிருக்கிறது.

அநுராதபுர யுகத்துக்குரிய தொல்பொருள் எச்சங்கள் என  உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவற்றைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமானதுதான்.  ஆனாலும், ஏற்கெனவே இருந்த ஆலயங்களை செயலிழக்கச் செய்வது அப்பட்டமான உரிமை  மீறலாகவே பார்க்கப்படவேண்டும். மண்டவல கூறுவதுபோல், 1956ஆம் ஆண்டு  அநுராதபுரத்தின் புராதன எச்சங்களைத் தொல்பொருள் திணைக்களம் பாரமெடுத்தபோது,  அங்கிருந்த கட்டடங்கள் யாவும் அகற்றப்பட்டு, புதிய நகருக்குக் கொண்டு  செல்லப்பட்டிருக்கிறது. அப்படியான நிலையொன்றை கன்னியாவும் எதிர்கொள்ளலாம். அப்படியொரு நிலை வருமாக இருந்தால், புதிதாக அப்பகுதியில்  உருவாக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரைக்கும் இவ்விதி பொதுவானதாக இருக்க  வேண்டும். இந்நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க  வேண்டும். தொல்பொருள் திணைக்களம் என்பதும் அனைவருக்கும் உள்ள உரிமைகளை  மதித்து நடக்கும் திணைக்களமாக இருக்க வேண்டும்.

நீராவியடி பிள்ளையார் கோவில்

அத்துமீறிய ஆக்கிரமிப்பும் புராதன எச்சங்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும், நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தாராளமாகவே இடம்பெறுகின்றன. கன்னியா விஜயத்தைத் தொடர்ந்து, முல்லைத்தீவு – செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காகச் சென்றிருந்தோம்.

கன்னியா விவகாரம் போன்றல்லாது, அடாத்தான முறையில் பௌத்த விகாரையை அமைத்து, சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் பௌத்த துறவியின் ஈனச்செயலை, அங்கு நேரடியாகக் காணக்கிடைத்தது.

இந்த மதகுரு, உண்மையிலேயே பௌத்த துறவியா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனெனின், இத்துறவின் இரண்டு பிள்ளைகள், இங்கிலாந்தில் கல்வி கற்கிறார்களாம். எந்த வருடத்தில் தான் துறவியானார் என்பதைக்கூடத் தெளிவாகக் கூறுகிறாரில்லை.

அப்படிப்பட்ட ஒரு தனிநபரின் சுயவிருப்புக்கு, இன ஒற்றுமை  சின்னாபின்னமாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீராவியடிப் பிள்ளையார் கோவில் அமைந்திருந்த பகுதியில், தொல்பொருள் எச்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை, ஏற்கெனவே தொல்பொருள் திணைக்களம்  அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தும் அடாத்தான முறையில் அப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் அந்த பௌத்த பிக்கு. இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடலையும், அமைச்சர் மனோ கணேசன் மேற்கொண்டிருந்தார். image 1d055153c7 கண்ணால் காண்பதே மெய்

எந்தவிதமான அடிப்படையும் இன்றி, ஓரிடத்தை அடாத்தாக ஆக்கிரமித்து, அதற்கு உரிமைப் பத்திரங்களைச் சமர்ப்பித்துப் போராடிக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குவின் கோரமுகத்தை, இக்கூட்டத்தில் காணமுடிந்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளை இஞ்சித்தேனும் கணக்கெடுக்காத பொடுபோக்குத்  தனத்தையும் அவதானிக்க முடிந்தது.

அந்த பிக்குவைப் பொறுத்தவரையில், ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வென்ற  எண்ணத்துடன் கருத்துகளை முன்வைத்தார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், குறித்த பகுதியில் எந்தவிதக் கட்டுமானங்களையும் செய்யக்கூடாது என்பதுதான் கட்டளை. நீதிமன்றத் தீர்ப்பைக்கூடத் துச்சமென மதித்து, தனது பிடிவாதத்தைத் தமிழர்கள் மீது காட்டும் பிக்குவை அடக்கி வைப்பதற்கு, எவருக்கும் துணிவில்லாமலிருப்பது கவலைக்குரிய விடயம்தான்.

இராணுவம்,  பொலிஸைத் தவிர, சுற்றி எந்தவொரு சிங்களவரும் இல்லாத இடத்தில், தன்  சுயநலத்துக்காக விகாரை அமைத்து, சண்டித்தனம் காட்டிவரும் பௌத்த பிக்குவைத் தண்டிப்பதற்கு எந்தவொரு முதுகெலும்புமுள்ள பொலிஸாரும் இல்லாமலிருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சைக்கூடக் கணக்கெடுக்காமல், தன் முழுப்  பலத்தையும் பிரயோகித்துவரும் இதுபோன்ற பௌத்த பேரினவாதிகளை, தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகளும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் மீது  பிரயோகிக்கப்படும் கெடுபிடிகளில் ஒரு துளியையாவது பிரயோகித்தால், இந்த இனவாதச் சக்திகளை அடக்கியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல்  இருப்பது கேவலமானது.

மக்கள் பிரதிநிதிகளும் தம்மால் முடிவதில்லை என்பதற்காக, ஒதுங்கியிருந்துவிட முடியாது. வெறுமனே அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும்  சாடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க, இவ்வாறான இனவாதிகளின் ஈனச்செயல்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்ததாக  அறியமுடியவில்லை. சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் வைராக்கியம் வன்முறையாக வெடிப்பதற்கு, நீண்டகாலம் செல்லாது.

ஆகையால், தமக்கிருக்கும் அதிகார பலத்தை மக்கள்  பிரதிநிதிகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எதிர்ப்பு அரசியல் செய்வது  தங்களின் அரசியலோடு மாத்திரம் வைத்துக்கொள்ளலாம். அதைவிடுத்து, இவ்வாறான  புற அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவாவது ஒற்றுமைப்பட வேண்டிய கட்டாயத்தைத்  தமிழர் பிரதிநிதிகள் உணரவேண்டும்.   – நன்றி – தமிழ் மிரர் (A.P.Mathan)

கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசிய மில்லை.எம்மை நாமே ஆள்வதற்கான உரிமையே வேண்டும்” என்று முழங்கினர்.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் “எமக்கு அபிவிருத்தி முக்கியமல்ல.

நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். எமக்கு உள்ள சுயநிர்ணய உரிமை உரித்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை நான் எனக்கு உள்ள வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி நிதியைப் பெற்று மேற்கொள்வேன். ஆனால் நாம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை கூர்ந்து அவதானிக்கிறது. கடந்த அரசாங்கம் எமக்குச் செய்த கொடுமைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்  தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சர்வதேச சமூகத்தின் அந்த தார்மீக கடமையை வலியுறுத்துவதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்ற செய்தியை நீங்கள் உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அந்தக் கருமத்தை நிறைவேற்ற முடியும். அதற்கான ஆணையை வழங்கும்படிதான் நான் உங்களிடம் வினயமாகக் கேட்கிறேன். அபிவிருத்தியை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” என்று தொடர்ந்து கூறிவந்தார்.WW கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

தமிழரசுக் கட்சியின் ஆரம்ப நாட்களிலும் சரி அது தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சி என்று பல பரிணாமங்களை அடைந்தபோதும் சரி அது ஒருபோதும் அபிவிருத்தி அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறவில்லை. ஆனால் இன்று தனது கையாலாகாத்தனத்தையும் தன்னுடைய அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் மூடிமறைப்பதற்காக இணக்க அரசியல் அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைகளைப் போர்த்திக்கொண்டு மக்கள் முன் உலாவர முயற்சிக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் முதல் மூன்றாண்டுகள் அதாவது 2012ஆம் ஆண்டுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்சவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதுபோல் நடித்தது. அந்த நாடகம் திருவாளர் சுமந்திரன் மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியதுடன் அம்பலமானது. இலங்கையின் தேசியக் கொடி இலங்கையர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்று கூறி தந்தை செல்வாவே ஏற்க மறுத்த அந்தக் கொடியை 2012ஆம் ஆண்டின் மேதினத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டதன் மூலம் ரணிலின் மூலமாக தென்னிலங்கை அரசியல் சமூகத்துடன் ஒரு இணக்க அரசியலுக்குச் செல்வதற்கு தயாராகிவிட்டதையும் தமிழ்த் தேசிய இனத்தை தனது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எதுவித நிபந்தனையும் விதிக்காமல் உழைத்து 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் மைத்திரியை சனாதிபதியாக்கி ரணிலை பிரதமராக்கி அழகு பார்த்தார் திருவாளர் சம்பந்தன். தமிழர்களை அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடுவதற்கும் மீண்டும் மீண்டும் அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்வதற்குமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுமத்திற்கு அவ்வப்போது அரசாங்கத்தால் சன்மானம் வழங்கப்பட்டு அவர்களின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

வாங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவோ அல்லது சன்மானத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவோ தமிழரசுக் கட்சியும் நிபந்தனை அற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு அதன் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் வழங்கி வருகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் வெற்றியடைவதற்கு உறுதிபூண்டு செயற்பட்டிருந்தது.

எதிர்க்கட்சியில் இருப்பதால் எதிர்ப்பதுபோல் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து இறுதியில் அவற்றை ஆதரித்து வாக்களித்து அரசாங்கத்திற்கும் மக்கள் விரோத வரவு-செலவுத் திட்டத்திற்கும் தமது ஆதரவினை வழங்கி தமிழ் மக்களின் ஆணையைப் புறந்தள்ளியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற தனது பரிபூரண ஆதரவினை வழங்கியிருந்தது.

ஒருபுறம் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோசமிட்டுக்கொண்டு மறுபுறம் அந்த இராணுவம் வடக்கில் நிலைகொள்வதற்கு இடமளிக்கும் வகையில் பாதுகாப்புச் செலவினங்களுக்குக் கூடுதல் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமைக்கு ஆதரவையும் வழங்கி வந்துள்ளது. யுத்தம் இல்லாத ஒரு சூழலில் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பயன்படுத்தி பாதுகாப்பிற்கான நிதியொதுக்கீட்டை குறைப்பதற்குக்கூட அழுத்தம் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் தீர்வு வரப்போகிறது. அதற்கு இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும். அரசாங்கம் கொண்டு வருகின்ற பிரேரணைகள் அனைத்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைய வேண்டும். அப்பொழுதுதான் எமது பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவரும் புதிய அரசியல் யாப்பும் வெற்றி பெறும் என்று குழந்தைத் தனமான காரணத்தைச் சொல்லியிருந்தார்.

அதற்காகவே அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவினையும் வழங்கியிருந்தார்.

ஆனால் இன்று நாளாந்த பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காத நிலைமையிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

2016ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கையில் புதிய அரசாங்கம் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் தீர்வு வரைபு விரைவில் வரவுள்ளது என்றும் தெரிவித்து ஆதரவளிக்கப்பட்டது.231ws1 கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நிதியொதுக்கப்பட்டமையைக் காரணம் காட்டியது. இந்த நேரத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நெருங்கியதால் தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆதரித்தவர்களுக்கும் சிறப்பு நிதியொதுக்கீடாக இரண்டரை கோடியைப் பெற்றுக்கொடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளச் செய்து மிகவும் மோசமான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவினைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் முரண்டுபிடித்துக்கொண்டிருந்த நிலையில் நாட்டில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் அரசாங்கத்தைக் காப்பதற்காக ரணிலுடன் கைகோர்த்து

வரவு-செலவு திட்டத்தை இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கைமாறாக கம்பரெலிய என்னும் கிராம எழுச்சித் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 40 கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன்மொழிவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியை முறையாகச் செலவழிக்கத் தெரியாமல் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழி பிதுங்கி நின்றதைக் காணமுடிந்தது.

தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானியரிடம் இழந்துபோன எமது தேசிய இறைமையை மீண்டும் வென்றெடுக்கப் போகிறோம் என்று புறப்பட்டு அதற்காகவே கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்துவிட்டு இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசு வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு ஓடும் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?mail கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

அண்மையில் இடம்பெற்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் ரணிலின் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் சனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கிவிடாமல் தடுப்பதற்கும் வடக்கு-கிழக்கிற்கான சிறப்பு நிதியொதுக்கீடு என்ற போர்வையில் பனை அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் சுமார் ஐநூறுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் முதற்பகுதியாக திறைசேரியினூடாக 250கோடி ரூபாய் திரு சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டதாக படம் காட்டப்பட்டது.

அபிவிருத்திக்காக வாங்கிய பணத்தை குறைந்தபட்சம் ஒரு சிறப்பு அனுமதியினூடாக சில தொழிற்சாலைகளை நிறுவுவதற்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் அரசாங்கம் போடவேண்டிய வீதிகளைப் புனரமைப்பதற்கும் சில பொதுநோக்கு மண்டபங்களையும் நூலகங்களை நிர்மாணிப்பதற்கும் விளையாட்டுக் கழகங்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதியை அவரவர் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக வழங்கியுள்ளனர்.

மாகாணத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்த மாகாண அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு உழைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே ஐ.தே.கவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் வடக்கு-கிழக்கில் தமது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மேற்கொண்ட அதே அபிவிருத்திப் பணிகளை தேசிய இன விடுதலையை வென்றெடுப்பதாகக் கூறித்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளாலேயே தமிழ் மக்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சர்வதேச மயப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்கவைத்து இன விடுதலையை மலினப்படுத்திவிட்டார் திருவாளர் சம்பந்தன்.

இலங்கை அரசாங்கம் ஐ.நாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை அதனால் அதனை எமது கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவதற்காக நாம் இலங்கையில் முகாமிடப்போகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக சர்வதேச சமூகங்கள் இலங்கையில் மத அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்து மகாசமுத்திரம் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கடற்பாதுகாப்பு பாதிப்படைந்துள்ளது என்ற காரணங்களை முன்வைத்து இலங்கையில் முகாமிட்டுள்ளன. இதன் மூலம் அவை தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கைவிடத் தீர்மானித்துள்ளனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.

திருவாளர் சம்பந்தன் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் ஆலோசனைகளும்கூட காரணமாக இருந்தன. சர்வதேச சமூகம் சொல்லியபடியெல்லாம் ஆடிய சம்பந்தன் இப்பொழுதாவது அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கோரவேண்டும். இது அவரது தார்மீக கடமையாகும்.

இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருப்பதில் பயனில்லை.

எனவே காலம் தாழ்த்தாமல் மக்களின் நாளாந்த பிரச்சினைகளையாவது முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவை மக்களை அணிதிரட்டி மக்களுக்கு அரசியல் விழிப்பு ணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டுவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் நிர்க்கதியாக்கப்படுவார்கள் என்பதும் இந்த நாட்டில் அவர்கள் சம அந்தஸ்துடைய பிரசைகளாக வாழ முடியாத நிலை ஏற்படுவதுடன் தமது அடையாளத்தையும் தொலைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முற்படுவதாகக் கருதியே அதற்கும் சர்வதேச சமூகத்தின் கடமையையும் பொறுப்பையும் நினைவு படுத்துவதற்குமே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றதாக அதன் ஆரம்ப நிகழ்வுகளில் கூறப்பட்டது.

இதற்காகவே வடக்கிலும்-கிழக்கிலும் எழுக தமிழ் என்னும் பெயரில் பாரிய மக்கள் பேரணிகளும் நடாத்தப்பட்டன. அதனால் தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான கொள்கை அடிப்படையிலும் சர்வதேச ரீதியில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அதனடிப்படையில் உறவுகளைத் தீர்மானிக்கிற சக்திகளையும் ஓரணியில் திரட்டி தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பொறுப்பிலிருந்து இனியும் பேரவை விலகியிருக்க முடியாது.

 

தமிழ் மக்கள் பேரவை முகவர் அமைப்பாகவே செயற்படுகிறது – கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டங்களை நாங்களே தான் தயாரித்தோம். வேறு எவரும் தயாரிக்கவில்லை. இவ்வாறெல்லாம் நாங்கள் செய்த பின்னர் தமிழ் மக்கள் பேரவையை விட்டு விலக எங்களுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த பல விடயங்கள் இருக்கத்தக்கதாக வேறு எவரும் வந்து உரிமை கோர இடமளிக்க முடியாது. ஆனாலும், நாங்கள் வெளியேறவில்லை. இருந்தும் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தியிருக்கின்றோம்.

இப் பேரவையானது அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான விக்கினேஸ்வரனின் கட்சிக்காக ஒரு முகவர் அமைப்பாக மாற்றப்படுவதாலே நாம் அதில் இருந்து விலகியிருந்தோம். அப் பேரவையில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு கட்சியின் முகவர் அமைப்பாக அது மாற்றப்படுகிறது. பல கட்சி உறுப்பினர்கள் பேரவையில் தமது பெயர்களைப் பதிவுசெய்து பங்களிப்பை செய்து வந்தனர். அதில் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் தான் அதிகமாக இருந்தனர்.

அவ்வாறான நிலையில், எங்கள் உறுப்பினர்களைக் கூட தன்னுடைய கட்சியில் வந்து சேருங்கள் எனக் கேட்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அப் பேரவை தற்போது முழுக்க முழுக்க விக்னேஸ்வரனின் கட்சியைப் பலப்படுத்தி மற்றவர்களைப் பலவீனப்படுத்த மற்றத் தரப்புக்களை உடைப்பதற்கான ஒரு செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. ஆகவே, இணைத்தலைவர் என்ற பெயரில் இயங்கக் கூடிய ஒருவரின் பொருத்தமான செயற்பாடாக அதனை நாங்கள் பார்க்க முடியாது.

இவ்வாறான பல பிரச்சினைகள் பேரவைக்குள் இருக்கின்றன. அந்தந்த நேரங்களில் அவற்றை நாங்கள் வெளிப்படுத்துவோம். பேரவை விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாக மாற்றப்படுவதால், அதிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம். அதே நேரம் பேரவையில் மிகவும் மதிக்கக்கூடிய பலர் இருக்கின்றனர். அவர்களுடைய பெயரையும் பங்களிப்பையும் உதாசீனம் செய்யும் வகையில் தான் இச் செயற்பாடுகள் அமைகின்றன. அதனை அந்தந்த நபர்கள் விளங்கிக் கொண்டு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அல்லது பேரவை செயலில்லாத இன்னுமொரு முகவர் அமைப்பாக மாற்றப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

தமிழர்கள் சுயமாக முன்னேற எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டபின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “முப்பது வருடமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தமானது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசாங்கத்தின் ஊடாகவும், வெளிநாடுகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம்.

இவ்வாறான விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பல முறை பேசி வந்திருக்கிறேன். ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போன்றே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் நடத்தியுள்ளன. நிலையில் சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்துநிறுத்தவும் பின்னிற்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடர்பில் அவர்களிடமிருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் – சிறிலங்கா அரசு முடிவு

ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீரம்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் சிறிலங்கா வந்து சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தையும், மதவன்முறையையும் முழுப் பலத்துடன் எதிர்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக ஐ.நா. சபை தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலில் 258பேர் உயிரிழந்தனர். சிறிலங்காவில் செயற்பட்டு வந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, மதவாத அமைப்புகள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் போது, சிறிலங்கா அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவிற்கு ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறும் போது, ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். அது மட்டுமன்றி ஒருங்கிணைந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக உள்ளது.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்திய இராணுவ அதிகாரிகள் மகேஷ் சேனநாயக்க சந்திப்பு

இந்திய இராணுவ உயரதிகாரிகள் ‘Army-to-Army Staff Talks’ (AAST) எனும் தலைப்பில் ஐவரை உள்ளடக்கிய குழுவினர்கள் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இந்திய இராணுவ உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் சுசிந்ரா குமார், கேர்ணல் நிஷ்சிட் ரஞ்சன், லெப்டினன்ட் கேர்ணல் சிறிநாத் சந்திப்பா ரெட்டி, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதினாரிகளான கப்டன் அசோக் ரேவ், லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஷ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இராணுவ தளபதி அவர்கள் இந்திய இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இந்தியாவில் இளம் இராணுவ அதிகாரிகளுக்கான பாடநெறி பயிற்சிகளுக்கு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விளையாட்டு துறையை மேம்படுத்துவது, உளவுத்துறை, சிமுலேட்டர் அமைப்புகள், குறுகிய ஆயுதம் போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு இராணுவ தளபதி இந்த இந்திய உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இராணுவ தளபதியின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகள் இலங்கை இராணுவத்திற்கு வழங்குவதாக இராணுவ தளபதிக்கு உறுதியளித்தார். அத்துடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு நிலைபேறான தன்மை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடினார்.
கடந்த (11), இராணுவ தலைமையக கலந்துரையாடல் மண்டபத்தில் ஏஏஎஸ் அமர்வுகள் இடம்பெற்றன. இதன் போது பயிற்சி மாதிரிகள், உள்கட்டமைப்பு முன்னேற்றம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நலத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களுடனும் இந்திய இராணுவத்தின் மூத்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார் அவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது சாத்தியமான விளையாட்டு பரிமாற்ற திட்டங்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட மூலோபாய அணுகுமுறைகளை உள்ளடக்கிய எதிர்கால பயிற்சி தொகுதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த இந்திய உயரதிகாரிகளின் சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவபடுத்தி இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா, இராணுவ விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க, இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, காலாட் பணியகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் தேசபிரிய குணவர்தன, இராணுவ பயிற்சி பணியகத்தைச் சேர்ந்த கேர்ணல் கே.ஏ.என் ரஷிக குமார, இராணுவ செயலகத்தைச் சேர்ந்த கேர்ணல் பி.கே.எஸ் நந்தன போன்றோர் இணைந்து கொண்டனர் 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் இராணுவ தள பணிக்கான பேச்சுவார்த்தைகளில் இந்திய-இலங்கை இராணுவம் (ஆர்எஸ்எஸ்) இரு படைகளுக்குமிடையே நல்ல உறவை வளர்ப்பதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுடன் இந்திய இராணுவம் இதே போன்ற கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க