Home Blog Page 2739

ஈழத் தமிழர் பிரச்சினை – தீர்வை வலியுறுத்தும் இந்தியா

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி திரும்பவும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி 13ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது  தொடர்பான உறுதியான நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.

தமிழ் மக்களின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கன்னியா வெந்நீரூற்றில் மீண்டும் புத்த விகாரை

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்வதாக தென்கைலை ஆதீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதீன முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி புத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும். அது தொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைவாகவே விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

திருமலையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தானும் பங்குபற்றியதாகவும், அதில் விகாரை அமைப்பதற்கான எந்தவித அனுமதியும் எவராலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்திலும் இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.

வற்றாப்பளை ஆலய முன்றலில் 5G கோபுரம் பதட்டத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,  புதுக்குடியிருப்பு மற்றும் வற்றாப்பளை ஆலய முன்றலில் புதிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய அலைவரிசை கோபுரமான 5 G கோபுரங்களாக இருக்குமோ என சந்தேகம் கொள்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையார்கட்டு பாடசாலைக்கு அருகில் ஒரு கோபுரமும், புதுக்குடியிருப்பு புதிய குடியிருப்பு பகுதியில் ஒரு கோபுரமும், வற்றாப்பளை அம்மன் ஆலய முன்றலில் ஒரு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆறுமாத காலங்களுக்கும் மேலாக இருக்கின்றன எனவும் இவற்றில் தற்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கோபுரம் பொருத்தப்படுவதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, இந்தக் கோபுரங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். இக் கோபுரங்கள் தனியார் காணிகளிலும், கோயில் காணியிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தமும் பெறப்பட்டுள்ளது.

 

முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த தமிழ் மாணவி மரணம்

கடந்த ஏப்பிரல் மாதம் மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் மாணவி மரணம் அடைந்துள்ளார்.

முஸ்லீம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்லில் காயமடைந்த கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி கருணாகரன் உமாசங்கரி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (11) மரணமடைந்துள்ளார்.

குண்டுத்தாக்குதலில் பெருமளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், தமிழ் மக்களே பெருமளவில் காயமடைந்துமிருந்தனர். இந்த நிலையில் சிறீலங்கா அரசு படுகாயமடைந்த தமிழ் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதை புறக்கணித்து வந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படையினரிடமே எமது உறவுகளைக் கையளித்தோம்; காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அவர்களே பொறுப்பு – ஆ. லீலாதேவி

எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்கவேண்டும் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த சங்கத்தின்  முக்கிய உறுப்பினரான ஆ. லீலாதேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘காணாமல் போன உறவுகள் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் எனவும் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நகைச்சுவையை வேறு எந்த ஒரு நாட்டிலும் கேட்க முடியாது. இராணுவம் வேறு அரசாங்கம் வேறு என்று கூறக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் யுத்த காலத்தில் முன்னரங்கில் நின்றது அரசாங்கத்தின் இராணுவமே. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தது இராணுவத்திடமே.

இவ்வாறான நிலையில் இராணுவ அதிகாரி தங்களிடம் சரணடையவில்லை என கூறுவது கேலிக்குரியது மட்டுமல்ல இலங்கை மக்களை முட்டாளாக எண்ணி கூறிய கருத்தாகும்.

இவ்வாறான கருத்தை எமது மக்கள் பிரதிநிதிகளோ அல்லது எமக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களோ கேள்விக்குட்படுத்தவுமில்லை கண்டிக்கவுமில்லை.

நாம் இராணுவத்திடமே பிள்ளைகளை கையளித்தோம். எனவே இராணுவமே இதற்கு பதில் சொல்லவேண்டும். அத்துடன் இந்த அரசாங்கமும் நாட்டுத்தலைவரும் எமக்கான பதிலை தரவேண்டும். அவர்கள் பதில் தராத பட்சத்திலேயே தற்போது நாம் சர்வதேசத்தின் உதவியை நாடி நீதியை கோருகின்றோம்.

ஆகவே சர்வதேசமும் இவ்வாறான விடயங்களில் கண்டும் காணாமல் இருப்பதை விடுத்து இதில் தலையிட்டு தீர்வினை வழங்க முன்வரவேண்டும். எமது போராட்டத்திற்கு உதவுவதாக பல அமைப்புக்களும் வேறு பலரும் கூறிக்கொண்டாலும் எமது போராட்டம் தனித்துவமானது எந்த கட்சியும் சாராதது.

நாமாக முடிவெடுத்து நாம் போராடிக்கொண்டிருகின்றோம். இறுதியாக ஒரு தாய் இருக்கும் வரை எமது போராட்டம் தொடரும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு செல்லும்வரை தொடரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எழுத்துமூல வாக்குறுதி கொடுத்தே ஆதரவு பெற்றார் – ஜே.வி.பி

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து  மூலம் சம்பந்தன்  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.  ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும்.

ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்த  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு  இணக்கம்  தெரிவித்திருந்தார்.

எழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணையின்உள்ளவை நூறுவீதம் உண்மையாகும்; ஆனாலும் அரசுக்கு ஆதரவாய் வாக்களித்தோம் – ரிஷாத்

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளக்கங்கள் நூறுவீதம் உண்மையாகும். என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சி என் மீது முன்வைத்திருக்கும் பத்து குற்றச்சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்தால் நான் எனது அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக்கேட்க முட்டாள்கள் அல்ல. எமக்கிடையே இருக்கும் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம்.

அத்துடன் அவர் ஷாபி வைத்தியர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவர் எதிர்பார்க்கும் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு;கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்ததுடன் 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று (10) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு:

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்த சபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்த சபை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும், பின்னர் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதற்காக அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.

இதுவரை காலமும் இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்துவந்த கட்சிகளும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர் என்று சுயவிமர்சனம் செய்து இந்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி அமைத்தனர். இதன் பயனாக சர்வதேச சமுதாயத்திடமும் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிட்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.

ஆனால் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கம் எமது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களைக் காப்பதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதிலேயுமே இன்னமும் குறியாக இருக்கின்றது.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பெற்றுக்கொண்ட மக்களின் ஆணைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அதனைப் போன்றே புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. நாளாந்த பிரச்சினை தொடக்கம் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி அதுவும் மக்களின் ஆணையை மீறியுள்ளது.

சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்;ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பிரதமரும் அதனை தனது செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். நாம் குறிப்பிட்ட எந்த விடயத்தையும் பிரதமர் நிறைவேற்றாததுடன், தனது பதவி காப்பாற்றப்பட்டதன் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் புத்தர்சிலையை வைத்து அதனை வலுக்கட்டாயமாக பௌத்தசமய வழிபாட்டிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், காணிகளை விடுவித்தல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியபோது தான் ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவித அணுகுமுறையையும் தனது பாதுகாப்புத்தரப்பினர் விடயத்தில் ஒரு அணுகுமுறையையும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. முன்னர் குற்றமிழைத்தவர்கள் எத்தகைய பதவிநிலையில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று கூறியவர்கள் பின்னர் ஒரு சிப்பாயைக்கூட சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவருகின்றனர். அதனையே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். எனவே எமது மக்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காது என்பது தற்பொழுது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்திலும் இதய சுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிங்கள நாடு என்றும் ஏனையவர்கள் அவர்கள் தயவில் தங்கியிருக்க வேண்டியவர்கள் என்றும் பௌத்தபிக்குகள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு இன்றுவரை இந்த அரசாங்கம் பதில் வழங்கவில்லை.

வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த சில நல்ல திட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்தமுறை பிரதமரை ஆதரிப்பதற்காக நானும் எனது கட்சியின் தலைவரும் முன்வைத்த நிபந்தனையின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிய ஆதரவினாலேயே இன்றைய அரசாங்கம் இன்னமும் பதவியில் தொடரமுடிகிறது.

ஆனால் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது வலுக்கட்டாயமான பௌத்தமயமாக்கலையோ அல்லது அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களையோ தடுக்க முடியாதவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எமது பிரதிநிதிகளின் ஆதரவைப்பெற்றுவிட்டு எமது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசாங்கத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நல்லாட்சியூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்களையும் படையினரையும் காப்பாற்றிவிட்ட திருப்தியில் நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று இந்த நாட்டில் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் புறக்கணிக்க முயல்கின்றீர்கள்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் எமது வாக்கினை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாட்டைப் பற்றியும் விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனம் பற்றியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் பதவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றே. இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்பதை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும்.

சிறிலங்கா பாதுகாப்பு: ஆராய வருகிறார் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்

சிறிலங்கா மற்றும் மாலைதீவு நாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆலோசனைகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ் வருகை தரவுள்ளார் என சிறிலங்காவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 11 முதல் ஜுலை 16ஆம் திகதி வரை சிறிலங்கா,  மாலைதீவு ஆகிய இடங்களிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் இவர் தங்கியிருக்கும் போது, அரச உயர் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திப்பார். இவர் 2007இலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

ஐரோப்பிய சட்டம் தொடர்பாக லுவெய்ன் கத்தோலிக்க பல்கலைக்கழகம், பிறஸ்லெஸ் இலவச பல்கலைக்கழகம் மற்றும் பிறலஸ் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐரோப்பிய சட்டங்கள், மனத உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக பல கட்டுரைகளை , புத்தகங்களையும் எழுதியுள்ளார்.