ஈழத் தமிழர் பிரச்சினை – தீர்வை வலியுறுத்தும் இந்தியா

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி திரும்பவும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி 13ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது  தொடர்பான உறுதியான நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.

தமிழ் மக்களின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.