வற்றாப்பளை ஆலய முன்றலில் 5G கோபுரம் பதட்டத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,  புதுக்குடியிருப்பு மற்றும் வற்றாப்பளை ஆலய முன்றலில் புதிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய அலைவரிசை கோபுரமான 5 G கோபுரங்களாக இருக்குமோ என சந்தேகம் கொள்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையார்கட்டு பாடசாலைக்கு அருகில் ஒரு கோபுரமும், புதுக்குடியிருப்பு புதிய குடியிருப்பு பகுதியில் ஒரு கோபுரமும், வற்றாப்பளை அம்மன் ஆலய முன்றலில் ஒரு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆறுமாத காலங்களுக்கும் மேலாக இருக்கின்றன எனவும் இவற்றில் தற்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கோபுரம் பொருத்தப்படுவதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, இந்தக் கோபுரங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். இக் கோபுரங்கள் தனியார் காணிகளிலும், கோயில் காணியிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தமும் பெறப்பட்டுள்ளது.