Home Blog Page 2736

வாக்களிக்கும் வயதெல்லையை குறைப்பதற்கு மலேசியா திட்டம்

தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 18 ஆக குறைப்பதற்கு மலேசியா அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 வயதானவர்கள் வாக்களிப்பதுடன், அவர்கள் தேர்தலிலும் நிற்பதங்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறப்போவதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வாக்களிக்கும் வயதெல்லை தற்போது 21 ஆக உள்ளது. ஆனால் பல நாடுகளில் அதன் எல்லை குறைவானது. இந்தோனேசியாவில் வாக்களிக்கும் வயது 17, ஒஸ்ரியாவில் 16 வயது.

உலகில் உள்ள 27 நாடுகளில் வாக்களிக்கும் வயது எல்லை 18 ஆக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தலைமுறைகளுக்கு இடையிலான பலமானவர்களை கொண்டுவரும் நடவடிக்கையாகும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சயிட் சத்திக் அப்துல் ரகுமான் அல்ஜசீரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

26 வயதான அவர் மலேசியா நாடாளுமன்றத்தில் உள்ள இளம் அமைச்சார் ஆவார். மலேசியாவின் தற்போதைய அரச தலைவரும் இளையோர்களின் வாக்குகளினால் பதவியை கைப்பற்றியிருந்தார்.

ரணிலே, தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு : காணாமல் போன உறவுகள் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமரின் யாழ். நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது :

“ரணிலே , எங்கள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு”

“எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை”

“உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் எறியுங்கள்”

போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

Protest ranil 2019 2 ரணிலே, தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு : காணாமல் போன உறவுகள் போராட்டம்

சிறீலங்காவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழு ஆய்வு

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சிறீலங்காவுக்கு தமது உதவிகளை வழங்கி வருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவத்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் இணைப்பாளர் கிலிஸ் டி கேர்ச்சோவ் தலைமையிலான குழு சிறீலங்காவில் 11 ஆம் நாளில் இருந்து 16 ஆம் நாள் வரை தங்கியுள்ளது.

இந்த குழுவினர் ஆயுத நடவடிக்கை, தீவிரவாதம், மதவாதம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தமது ஆலோசனைகளை சிறீலங்காவுக்கு வழங்கி வருகின்றனர்.

சிறீலங்காவுடன் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம், நாடுகடத்துதல் மற்றும் தகவல்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

நால்வர் அடங்கிய இந்த குழுவினர் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மரபனாவின் அழைப்பினைத் தொடர்ந்தே சிறீலங்கா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

சிறீலங்காவில் இருந்து அதிக தேயிலையை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் 70 விகிதத்தை கொள்வனவு செய்து வருகின்றது.

இந்த நிலையில் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிக தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டுவருவதாக சிறீலங்காவின் பெரும்தோட்டத்துறை மற்றும் தொழில்துறை செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கன்னியாவுக்காகத் திரள்வீர்

தமிழர் மரபுவழி தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு முழுவதுமே தொன்ம எச்சங்கள் மிதமாகக் காணப்படுகின்றன. கலாசார படைகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கை மண்ணுக்கு அடுத்த நிலையிலேயே தமிழர்களுக்கான கலாசார கூறுகள் தென்படத்தொடங்கிவிடுகின்றன.

ஆனால் இங்கு தொல்லியல் திணைக்களமும், வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களும் அகழ்வாய்வுகளை நடத்துவதில்லை. மாறாக மேலாய்வின் அடிப்படையில் பௌத்தத்தின் எச்சங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறார்கள். அதைவைத்துக்கொண்டு அவ்விடம் பௌத்திற்குரியது எனக் கூறி பௌத்த விகாரையை மீளநடுவதிலும், அந்நிலத்தை அபகரித்து சிங்களமயப்படுத்துவதிலும் அக்கறையெடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு தெற்கின் எதிர்தேசமாகவே சிங்கள பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வட, கிழக்கு பகுதிகளில் அனேக இடங்களில் பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு அப்பகுதியை நிர்வகித்த தமிழ் குறுநிலத்தவர்கள், வணிகர்கள் கொடைகள் வழங்கியமை பற்றிய கல்வெட்டுக்கள் கூட உண்டு. அவை தமிழ் பௌத்ததிற்குரியவை. இன்று வளர்ச்சிபெற்றிருக்கும் சிங்கள தேராவாத பௌத்திற்குரியனவல்ல. வடக்கு கிழக்கு பகுதிகளில் மேலோங்கியிருக்கும் சைவத்துக்கு நிகராக ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி நகர்ந்துவிட்ட தமிழ் பௌத்த்தின் எச்சங்களைத் தான் இலங்கை தொல்லியல் திணைக்களம் சிங்கள பௌத்த மேலான்மைவாத அரசியலுக்குப் பயன்படுத்துகின்றது.

இதேநிலையைத் தான் கன்னியாவும் எட்டியிருக்கிறது. கன்னியாவுக்கு அயல் பகுதிகளில் (ராஜராஜ பெரும்பள்ளியை வெல்கம் விகார -சைத்திய என்கிறார்கள்) உள்ள ‘பௌத்த எச்சங்களை’க் கொண்டு அப்பகுதி முழுவதுமே சிங்கள தொல்லியல் திணைக்களத்துக்குரியது என மார்தட்டுகிறது அத்திணைக்களம். அத்திணைக்களத்துக்குச் சார்பாக நாட்டின் உயரதிகாரம் கொண்ட அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு நிற்கின்றனர்.

ஆனால், அந்தக் கன்னியா பகுதியில் இதிகாசங்களும், மரபுவழிக் கதைகளும், நம்பிக்கைளும், சடங்குசார் வழிபாட்டம்சங்களும் நிறைந்த உயரிய பண்பாடொன்றின் எச்சக்கூறுகள் மறைந்துகிடக்கின்றன. அவை 2002 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் திணைக்களத்தினால் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கின்றன. மிச்சமாயிருந்த – தனியார் காணியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தின் இடிபாடுகளையும் அழிக்கும் வேலைகள் வேகமாக இடம்பெறுகின்றன. இது ஒரு விதத்தில் உத்தியோகபூர்வமான முறையில் நடக்கும் பண்பாட்டு இனப்படுகொலைதான். ஜனநாயகத்தை மீட்பதற்கான மனிதாபிமானப் போர்போல.

இந்த அழிப்பை தடுத்து நிறுத்த நம்மிடையே முதுகெலும்புள்ள, அதிகாரமிக்க அரசியல் தலைமைகள் எதுவுமில்லை. நீதிசார் பொறிமுறைகள் நியாயத்தை வெளிப்படுத்துவனவாக இல்லை. எனவேதான கூட்டாக நம் எதிர்ப்புக்குரலையாவது காட்டவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். எனவே நாளைய தினம் (16-07-2019, காலை 11 மணிக்கு)பண்பாடு சார்ந்த அதிக அலுவல்களைக் கொண்டிருப்பினும், அப்பண்பாடு உங்கள் சந்ததி கடந்து நிலைக்கவேண்டுமெனில் கன்னியாவைக் காப்பாற்றும் போராட்டத்துக்கு திரள்வீர் மக்களே..!

-ஜெரா தம்பி

வவுனியாவில் கைதி தப்பியோட்டம் தேடுதலில் பொலிஸார்

வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில்  சிறைச்சாலைக்கு வெளியே சென்ற  நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்த அப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.

வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக  திரும்பாததால் சிறைக் காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந் துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை மேற்கொண்டு வருகின் றனர்.எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு ள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் உடல் நல்லடக்கம்

தமிழ் மக்கள் மீதானா இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு தாயகத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்   கணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்

தாயகத்திலே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை ஆற்றிவந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் முல்லைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மக்களின் அஞ்சலிக்காக மாங்குளம் புனித அக்கினேஸ் தேவாலயத்தில் வைக்கப்  பட்டிருந்தது.

இரங்கல் வழிபாடு இடம்பெற்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அன்னாரின் உடல், நேற்றும் இன்றும் மக்களின் அஞ்சலிக்காக யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது.

இதன்போது அருட்தந்தையின் பூத உடலுக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து மாத்திரமன்றி தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களும் அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என மேலும் பலர் அன்னாரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

pathinathar 2 ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் உடல் நல்லடக்கம்இதனையடுத்து இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆன்ம இளைப்பாற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் அடிகளாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை ஜேம்ஸ் பத்திநாதன் குரல் கொடுத்திருந்தார்.

 

 

முகமாலையில் குண்டு வெடிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது.  வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் இரும்புத் துண்டுகள் பொறுக்கச் சென்றவர்,

அங்கு காணப்பட்ட வெடிப் பொருளை எடுத்து வந்து அதனுள் காணப்பட்ட வெடி மருந்தை அகற்ற முற்பட்ட போது வெடிபொருள் வெடித்துள்ளது இதன் போது அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப் படவேண்டும் என்று கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 07 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும், நடுநிலையாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அதன்படி 03 மேலதிக வாக்குகளால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேசசபை அமர்வு இன்று (15) திங்கட்கிழமை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி கே. ஜெயராணி குறித்த பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

அதனை சபையில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் த. மோகனதாஸ் முன்மொழிய ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் வழிமொழிந்தார்.

பின்னர் சபையில் கருத்துகளுக்கு பிரேரணை விடப்பட்டது. சகல உறுப்பினர்களும் கருத்துக்களைக் கூறினார்கள்.

தவிசாளர் உள்ளிட்ட 07 தமிழ் உறுப்பினர்களையும் 05 முஸ்லிம் உறுப்பினர்களையும் கொண்ட காரைதீவு பிரதேச சபையில் இப்பிரேரணை விரிவாக பலராலும் ஆராயப்பட்டு அவரவர் சமுகம் சார்ந்து நியாயங்களை முன்வைத்து கருத்துரைக்கப்பட்டது.

இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தவிசாளர் கி. ஜெயசிறில் திருமதி கே. ஜெயராணித.மோகனதாஸ், ச.நேசராசா, மு.காண்டீபன், இ.மோகன், ஆ. பூபாலரெத்தினம், ஆகிய 07 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக உபதவிசாளர் எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம். இஸ்மாயில், ஏ. ஜலீல், எம். றனீஸ் ஆகியோர் வாக்களித்தனர்.

மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ. பஸ்மீர் நடுநிலை வகித்தார்.

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லீம் தரப்பு இணக்கம்

முஸ்லிம்களின் திருமண விவாகரத்து சட்டத்தில் அத்தியவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் எம்.பிகள் தெரிவித்தனர். இதற்கமைய, குறித்த யோசனையை விரைவில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிற்கு சமர்ப்பிக்க இருப்பதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இது அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல், திருமண பதிவின் போது மணப்பெண் கையெப்பமிடுவதை கட்டாயமாக்குதல், காதி நீதிமன்றத்திற்கு பெண்களையும் நியமித்தல் அடங்கலான யோசனைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்திருந்தார்.இது தொடர்பில் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் நீதியரசர் சலீம்மர்சூப் தலைமையில் ஒருகுழுவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஒரு குழுவும் இரு வேறு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.இது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்ட நிலையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எம்.பிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.