கன்னியாவுக்காகத் திரள்வீர்

தமிழர் மரபுவழி தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு முழுவதுமே தொன்ம எச்சங்கள் மிதமாகக் காணப்படுகின்றன. கலாசார படைகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கை மண்ணுக்கு அடுத்த நிலையிலேயே தமிழர்களுக்கான கலாசார கூறுகள் தென்படத்தொடங்கிவிடுகின்றன.

ஆனால் இங்கு தொல்லியல் திணைக்களமும், வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களும் அகழ்வாய்வுகளை நடத்துவதில்லை. மாறாக மேலாய்வின் அடிப்படையில் பௌத்தத்தின் எச்சங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறார்கள். அதைவைத்துக்கொண்டு அவ்விடம் பௌத்திற்குரியது எனக் கூறி பௌத்த விகாரையை மீளநடுவதிலும், அந்நிலத்தை அபகரித்து சிங்களமயப்படுத்துவதிலும் அக்கறையெடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு தெற்கின் எதிர்தேசமாகவே சிங்கள பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வட, கிழக்கு பகுதிகளில் அனேக இடங்களில் பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு அப்பகுதியை நிர்வகித்த தமிழ் குறுநிலத்தவர்கள், வணிகர்கள் கொடைகள் வழங்கியமை பற்றிய கல்வெட்டுக்கள் கூட உண்டு. அவை தமிழ் பௌத்ததிற்குரியவை. இன்று வளர்ச்சிபெற்றிருக்கும் சிங்கள தேராவாத பௌத்திற்குரியனவல்ல. வடக்கு கிழக்கு பகுதிகளில் மேலோங்கியிருக்கும் சைவத்துக்கு நிகராக ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி நகர்ந்துவிட்ட தமிழ் பௌத்த்தின் எச்சங்களைத் தான் இலங்கை தொல்லியல் திணைக்களம் சிங்கள பௌத்த மேலான்மைவாத அரசியலுக்குப் பயன்படுத்துகின்றது.

இதேநிலையைத் தான் கன்னியாவும் எட்டியிருக்கிறது. கன்னியாவுக்கு அயல் பகுதிகளில் (ராஜராஜ பெரும்பள்ளியை வெல்கம் விகார -சைத்திய என்கிறார்கள்) உள்ள ‘பௌத்த எச்சங்களை’க் கொண்டு அப்பகுதி முழுவதுமே சிங்கள தொல்லியல் திணைக்களத்துக்குரியது என மார்தட்டுகிறது அத்திணைக்களம். அத்திணைக்களத்துக்குச் சார்பாக நாட்டின் உயரதிகாரம் கொண்ட அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு நிற்கின்றனர்.

ஆனால், அந்தக் கன்னியா பகுதியில் இதிகாசங்களும், மரபுவழிக் கதைகளும், நம்பிக்கைளும், சடங்குசார் வழிபாட்டம்சங்களும் நிறைந்த உயரிய பண்பாடொன்றின் எச்சக்கூறுகள் மறைந்துகிடக்கின்றன. அவை 2002 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் திணைக்களத்தினால் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கின்றன. மிச்சமாயிருந்த – தனியார் காணியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தின் இடிபாடுகளையும் அழிக்கும் வேலைகள் வேகமாக இடம்பெறுகின்றன. இது ஒரு விதத்தில் உத்தியோகபூர்வமான முறையில் நடக்கும் பண்பாட்டு இனப்படுகொலைதான். ஜனநாயகத்தை மீட்பதற்கான மனிதாபிமானப் போர்போல.

இந்த அழிப்பை தடுத்து நிறுத்த நம்மிடையே முதுகெலும்புள்ள, அதிகாரமிக்க அரசியல் தலைமைகள் எதுவுமில்லை. நீதிசார் பொறிமுறைகள் நியாயத்தை வெளிப்படுத்துவனவாக இல்லை. எனவேதான கூட்டாக நம் எதிர்ப்புக்குரலையாவது காட்டவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். எனவே நாளைய தினம் (16-07-2019, காலை 11 மணிக்கு)பண்பாடு சார்ந்த அதிக அலுவல்களைக் கொண்டிருப்பினும், அப்பண்பாடு உங்கள் சந்ததி கடந்து நிலைக்கவேண்டுமெனில் கன்னியாவைக் காப்பாற்றும் போராட்டத்துக்கு திரள்வீர் மக்களே..!

-ஜெரா தம்பி