தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அனைத்துலக கடல்சார் விதிகளை மீறிப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியாக் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணைக்கப்பல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈரான் கடற்படையினரின் சிறிய ரக கடற்படைக் கப்பல்களும், உலங்குவானூர்தியும் இந்த நடவக்கையில் ஈடுபடிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஸ்ரேனா இம்பிரோ என்ற தமது கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது உள்ளதாக சுவிற்சலாந்தைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது கப்பல் பிரித்தானியாக் கொடியுடன் பயணம் செய்தபோது காணாமல்போயுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 23 மாலுமிகளும் பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் தற்போது தோன்றியுள்ள இந்த பதற்றத்தால் எண்ணியின் விலை உலகில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் குறித்தும் கை விரிக்கிறது சிங்கள அரசு.
இப்படியான அரசுதான் இனப்படுகொலை குறித்து உள்ளக விசாரணை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் சொல்கிறது. இறுதிப் போரின் சரணடைதல் படலம், என்பது ஈழத்து மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் இன்றுவரை உலுக்கி வருகின்றது. இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும் வரை ஈழ மக்களை அது உளவியல் ரீதியாக ஒரு பெயரிடப்படாத இன அழிப்பு யுத்தமாய் அழித்துக் கொண்டிருக்கும்.
போரின் இறுதியில், போராளிகள் கையளிப்பு ஏராளமான சாட்சியங்கள் சிங்கள அரசுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திலும், சிங்கள அரசின் ஆணைக் குழு முன்பாகவும் இவை எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் நிதிப் பிரிவில் பொறுப்பாளராக இருந்த வைரமுத்து ரதீஸ்வரன் எனப்படும் சுமன் என்பவரின் மனைவி சபிதா, சிங்கள அரசின் காணாமற் போனோரை கண்டுபிடிக்கும் சனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளித்த சாட்சியம் முக்கியத்துவமானது.
அதில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான எழிலன், விமல் மாஸ்ரர், நரேன், மேனன், ஆகியோரை இராணுவத்தினர் வட்டுவாகலில் இருந்து பேருந்தில் கொண்டு செல்வதை தாம் நேரில் கண்டதாக கூறினார்.
போரின் இறுதியில் வட்டுவாகல் பகுதியில் 3 பஸ்கள் தரித்து நின்றன. அந்த பஸ்களில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த சுமார் 40 விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஏற்றப்பட்டதாகவும் தன்னை ஓமந்தைக்குச் செல்லுமாறு கூறிய கணவர், தங்களையும் அங்கு தான் கொண்டு வருவார்கள் என்றும் தன்னிடம் தெரிவித்ததாகவும் இதன்போது, முக்கிய தளபதிகள் பலரையும் அங்குதாம் கண்டிருந்ததாகவும் அவர்கள் எங்கு கொண்டுசெல்லப்பட்டனரென தெரியவில்லை எனவும் அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான திருஞானசுந்தரம் ஜனார்த்தனன் என அழைக்கப்படும் நரேன் என்பவரும் அவரது மனைவியும்வட்டுவாகல் கையளிப்பு தொடர்பில் சாட்சியம் அளித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையில் சரணடைந்தமை பற்றி தளபதி நரேனின் பெற்றோரும் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களை அனைவரையும் இராணுவத்தினர் பஸ்ஸில் ஏற்றியதுடன், மனைவிக்கு பஸ்ஸில் இடமில்லையெனக் கூறப்பட்டு, அவர் ஓமந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளார். ஆனால், நரேன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை அவரது தாயார் சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை மாதவன் மாஸ்டர் எனப் படும் விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாகவும் அவரது மனைவி சாட்சியமளித்திருந்தார். ‘கதிர்காமத்தம்பி தர்மலிங்கம்’ எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியருவரும் இவ்வாறு சரணடைந்ததாக அவரது தாயார் கூறியமை மற்றுமொரு ஆதாரமாகும்.
நடேசன், புலித்தேவன், இரமேஷ் மற்றும் சுமார் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அதே நேரத்தில் (மே 18, 2009) விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் வட்டு வாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.
இதில் சிலர் தங்களது குடும்பத்தோடு சரணடைந்தார்கள். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற போது இராணுவத்தினர் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.
மே 18 ஆம் நாள் காலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர், குட்டி, எழிலன், கரிகாலன் போன்ற சுமார் 50 பேரை வட்டுவாகலில் வைத்துப் பேருந்து ஒன்றில் படையினர் ஏற்றிச் சென்றதாக லங்கா வெப் நியூஸ் தகவல்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியிருந்தது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் சென்ற இச்சாட்சிகள், பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் கண்டதை கூறியுள்ளார்கள். இதனை நேரடிச் சாட்சியங்களுக்கு அமைய சிறப்புத்தளபதி வேலன், புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் உள்ளிட்ட சுமார் 41 முக்கிய நபர்கள் சரணடைந்திருப்பதாகவும் லங்கா வெப் நியூஸ் ஊடகமும் தனது செய்தியில் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.
சிங்கள அரசினால் நடாத்தப்படும் எந்தவொரு விசாரணையும் நீதியை பெற்றுத் தராது என்பதற்கும் அது சிங்களப் பேரினவாத இன அழிப்பை மறைத்து வெள்ளையடிக்கும் என்பதற்கும் வட்டுவாகல் சரணடைவு தொடர்பான வழக்குகள் தக்க எடுத்துக்காட்டுக்கள் ஆகும். முல்லைத்தீவு நீதிமன்றத்திலும், வவுனியா நீதிமன்றத்திலும் பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58ஆவது கட்டளைப் பிரவுக்கு பொறுப்பு வகித்த சவேந்திர சில்வா வட்டுவாகலில் போராளிகளை தனது கைகளில் பெற்றுக் கொண்டமையை ஆதாரமாக காட்டி வழக்குகள் தொடரப்பட்டன. அவை யாவும் நீதியின்றி தூக்கி வீசப்பட்டன. சிங்கள அரசு சொல்லும் பதில்கள்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாகின.
சரணடைந்தவர்கள் எப்படி காணாமல் போக முடியும்? அவர்களை சிங்கள அரசும் படைகளும் எப்படி காணாமல் ஆக்கியது, அதை குறித்து வாய் திறக்காமல், கள்ளமாக இருக்கும் இந்த அரசை எப்படி மன்னிப்பது? ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? இதெல்லாம் ஈழ மக்களை மெல்ல மெல்ல கொல்லும் நிகழ்வுகளல்லவா?
கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லுகிற அரசு உலகில் எத்தகைய கொடிய அரசு? சரணடைந்தவர்கள் எவரும் இல்லை என்று சொல்லும் சிங்கள அரசிடம் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை நீதிமன்றங்களும் கேட்பதில்லை. சிங்கள அரசின் நீதி என்பது, சிங்கள இனப்படுகொலையின் அநீதியே.
அது சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கானது. எனவே சர்வதேச விசாரணையே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். அதற்கான அர்ப்பணிப்பு மிக்க போராட்டமே எமக்கு இல்லாமல் இருக்கிறது. அதுவே அவசியமாக இருக்கிறது.
சிங்கள அரசின் உயிர்களை மையமாக கொண்ட இந்த இனப் படுகொலை ஆட்டத்திற்கு, கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தல் என்பது, சிங்கள அரசின் அநீதிக்கு துணைபோதலாகும். சர்வதேசம் இன்று இலங்கையின் ஆட்சி தமக்கு சாதகமாகியதை அடுத்து, இந்த விடயங்களை நீர்த்துப் போகும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற கொடூரச் செயல்களுக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் காட்டும் மௌனமும் எமது தலைமை கொடுக்கும் விட்டுக் கொடுப்புமே, சிங்கள அரசின் பெயரிடப்படாத தொடரும் இன அழிப்புக்கு வழி வகுக்கிறது. இனப்படு கொலைக்கான நீதியில் இருந்து சிங்கள அரசை தப்பவைக்கும் ஓட்டையை ஏற்படுத்துகின்றது.
தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்களை போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என சிறீலங்கா அரசின் இனஅழிப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இலக்கு இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஜுலை 18 ஆம் நாள் முதல் 26 ஆம் நாள் வரையில் சிறீலங்காவில் தங்கியிருக்கும் கிளெமென்ட் அவர்கள் தனது அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளார்.
எனவே சிறீலங்காவில் தமது உரிமைகளுக்காக சிறுபான்மை இனம் அமைதியாக ஒன்று கூடுவதற்குரிய சுதந்திரம் உள்ளதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஊடாக அவருக்கு அறிக்கை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அமைதியாக தமிழ் மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் குவிக்கப்படுவதும், தமிழ் மக்களை அச்சுறுத்துவதும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
அமைதியாக ஒன்று கூடிய தமிழ் மக்கள் மீது சிங்கள மதகுருக்களும், சிங்களவர்களும் கொதிநீரை ஊற்றுக்கிறனர், தமிழ் மக்கள் செல்லும் பேரூந்துகளின் சக்கரங்களில் இருந்து காற்று பிடுங்கப்படுகின்றது, தமிழ் மக்கள் கூடுவதை தடை செய்யும் சிங்கள நீதி மன்றங்கள் அதே இடத்தில் சிங்களவர்கள் கூடுவதை அனுமதிக்கின்றது.
இவ்வாறான சம்பவங்களை அறிக்கை மூலமாக தயார் செய்து ஐ.நா அதிகாரியிடம் கையழிக்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. சிறீலங்காவுக்கு பயணம் செய்யும் ஐ.நா அதிகாரிகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக தரப்பினரை சந்திக்க வைப்பதும், தனக்கு சாதகமான அறிக்கைகளை அவர்களிடம் கையளிப்பதும் காலம் காலமாக நடந்தேறி வருகின்றது.
எனவே அமைதியாக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் ஒன்று கூடல்களை சிறீலங்கா அரசு எவ்வாறு தனது படையினர் மூலம் அச்சுறுத்தி வருகின்றது என்பது தொடர்பான அறிக்கை ஒன்று பாதிக்கப்பட்ட மக்களின் ஊடாக ஆதாரங்களுடன் அவரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை தாயகத்தில் உள்ள தேசிய நலன் சார்ந்த அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது .
தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடம் என தொல்பொருள் திணைக்களம் இதனை அடையாளப்படுத்தியுள்ளபோதிலும் இங்கே தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகைகள் எதனையும் காணக் கிடைக்கவில்லை அத்தோடு சிதைவடைந்து செல்லும் கோட்டையின் எச்சங்களை பாதுகாப்பதற்கோ தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
பௌத்த இடங்கள் என தமிழ் மக்களின் புராதன ஆலயங்களையும் வரலாற்று இடங்களையும் முல்லைத்தீவில் அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் தொல்லியல் திணைக்களம் பல நூற்றாண்டு கால தமிழர் வீர வரலாற்றை கூறும் இடங்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் .
தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தில் 1715 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இந்த கோட்டை அமைக்கப்பட்டது . இதன்பின்னர் இலங்கையை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை 1795 இல் கைப்பற்றி மீளுருவாக்கம் செய்தார்கள் . அத்தோடு ஆங்கிலேயர்களின் படைத்தலைமையகமாகவும் இந்த கோட்டை விளங்கியது . ஆங்கிலேயருடன் போர் புரிந்த வன்னி மண்ணின் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இந்த கோட்டையை கைப்பற்றி இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிபெற்றான் என வரலாறு கூறுகின்கிறது .
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் நுட்பமாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது . ஆனால் அவர்களின் மௌனிப்புக்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரால் 2009 இல் இந்த கோட்டை அழிக்கப்பட்டிருந்தது .
அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய வளாகத்தின் கட்டுமானப்பணிகளின் போதும் மிக மோசமாக அழிக்கப்பட்டிருந்தது . தற்போது இந்த கோட்டையின் ஒருபகுதியை இராணுவத்தினர் அபகரித்து முகாம் அமைத்துள்ள நிலையில் எஞ்சிய எச்ச பகுதிகள் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளாலும் இயற்கையாலும் சிதைவடைந்து செல்கின்றது . விரைவில் முற்றாக அழிவடைய கூடிய சூழலும் தோன்றியுள்ளது. எனவே உரியவர்கள் இந்த வரலாற்று பொக்கிஷத்தின் எச்சங்களையாவது பாதுக்காக்க முன்வர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட பொதுஅமைப்புக்கள் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு திரைமறைவில் துணை போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
அதாவது, மணலுக்கான எந்தவிதமான அனுமதிகளும் வழங்கப்படாத வன்னேரிக்குளத்தின் உட்பகுதி கல்லாறு உமையாள்புரம் தட்டுவன்கொட்டி கிளை ஊரியான் கோரக்கன்கட்டு அக்கராயன் பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்தெடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
குறிப்பாக, கண்டாவளைப்பிரதேசத்திற்குட்பட்ட கல்லாறு பெரியகுளம் ஊரியான் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களிலும் ஆறுகளிலும் அனுமதியற்ற முறையில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 11ஆம் திகதி கண்டவாளைப்பிரதேச செயலர்பிரிவிற்கு உட்பட்ட கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிராத மணல் அகழ்வு கிராம அலுவலர் உத்தியோகத்தர்கள் சென்று மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினையும் அங்கு குவிக்கப்பட்டிருந்த 50 கியுப்பிற்கும் அதிக மணலையும் விடேச அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்தபோதும் தற்போது அப்பகுதியில் இன்றும் மணல் மணல் அகழ்வுகள் தொடர்வதாகவும் இதற்கு பொலிஸார் முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டத்தரணிகள் முன்வராத காரணத்தால் தன்னுடைய வழக்கை தானே வாதாடிய குறித்த கைதி, வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் குறித்த தொழில்நுட்ப வசதி எமது பிரதேசத்திற்கு தேவை இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2ஜி, 3ஜி வசதிகளையே தாம் தடுத்ததாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், குறித்த தொழில்நுட்பத்தினால் விவசாயத்திற்கு உதவும் பூச்சிகள், பறவைகள் என பலவும் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்தே அவற்றை தாம் தடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
நேற்று (19) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இராணுவ மேஜர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இhணுவத்தினர் சென்ற பிக்கப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதிய பின்னர் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ரம்பேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றவர்களும் காயமடைந்ததுள்ளனர். பிக்கப் வாகன சாரதியின் பொறுப்பற்ற தன்மையே விபத்துக்கு காரணம் என அதன் சாரதியை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாக சிறீலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவற்று சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மகிந்த ராஜபக்சாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகிந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸ் இன் தேசிய தின கொண்டட்டங்களில் கலந்துகொண்டதற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள் உறுதியாகக் காணப்படுமானால் பல முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்போக்குவரத்து பாதையில் உள்ளது. அது முதலீட்டுக்கு சிறந்த இடமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமது அரசு அமையும்போது முதலீட்டுக்கான வழிகளை தான் ஏற்படுத்துவதாக மகிந்தா தெரிவித்துள்ளார்.
2009 விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் நன்கு அறிவர். இந்த வகையில், இன்னுமொரு தமிழ்க் கிராமம் சிங்களவர்களின் குடியிருப்பாக மாறிவருகின்றது. அது மணலாறு கொக்குத்தொடுவாயில் உள்ள கோட்டகைக்கேணி கிராமமாகும்.
1984 நவம்பர் மாதம், விடுதலைப் புலிகள் ஊடுருவியதாக அறிவித்து, அரசாங்கம் அந்தப் பகுதி மக்களை வெளியேற்றியிருந்தது. இவர்கள் அளம்பில், வற்றாப்பளை, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் குடியேறியிருந்தனர். தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களாவர். மீண்டும் 1991ஆம் ஆண்டு திரும்பி வந்த போது, விடுதலைப் புலிகள், இன்னும் பிரச்சினை தீரவில்லை. வரவேண்டாம் என மறுத்தனர். அதை பொருட்படுத்தாது குடியேறி சிறிது காலத்தின் பின் அதே ஆண்டு மீண்டும் இடம்பெயர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. மீண்டும் இடம் பெயர்ந்து முன்னர் இருந்த இடங்களுக்கு சென்று பின்னர், 2012 இல் இந்தக் கிராமங்களுக்கு திரும்பியிருந்தனர்.
தமிழர்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1997இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில், மகாவலி அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குடியிருப்பை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்தக் குடியிருப்பை முற்றுகையிட்டு, இங்கு குடியேறிய சிங்களவர்களை விரட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் மணலாறு மோதலில் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டை அங்கு குடியேற்றப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு காவலாக போடப்பட்ட இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்டதாகும்.
இந்தக் கிராமவாசிகள் தற்போது அவர்களின் இடங்களைப் பார்ப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அந்தப் பகுதிக்குச் சென்ற போது, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன. அதை அந்த மக்களே தெரிவிக்கின்றனர்.
இங்கு அமைந்துள்ள கோட்டகைக்கேணி பிள்ளையார் ஆலய சூழலில் ஓர் புத்தர் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றகும். சிங்களமயமாக்கலை ஏற்படுத்தும் ஆரம்ப கட்டமே இதுவாகும். இந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வனவளத் திணைக்களம் கற்களை நிறுவி காணிகளை அபகரித்துள்ளது.
சாம்பல் மோட்டை என்ற பகுதியை வனவளத் திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்ததுடன், இப்பகுதி அரச காணிகள் என குறிப்பிடுகின்றனர். இவை தமக்கு சொந்தமான காணிகள் என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குத்துக்கால்வெளி, வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, முந்திரிகைக்குளம், அடையக்கறுத்தான், ஆமையன்குளம், சாம்பாங்குளம், மணற்கேணி, குறுஞ்சாடி, அக்கரைவெளி போன்ற இடங்கள் இன்னும் விடுபடவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆமையன்குளப் பகுதிக்கே ஜுன் மாத நடுப்பகுதியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொண்டு, மகாவலி அபிவிருத்தி L வலய திட்டத்திற்கு இக்குளத்தினை பயன்படுத்தப் போவதாக அறிவித்ததுடன் ஆமையன் குளத்திற்கு “கிரி இப்பவெவ“ என பெயரும் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் காணிகள் பெரும்பான்மையின வர்த்தகர்களுக்கு பண்ணைச் செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளாவர்.
தற்போது அரசாங்கம் பண்ணை அமைத்துள்ள காணிகளில் வேலை செய்வதற்காக இப்பகுதி கிராம மக்களை அழைத்துச் செல்வதாகவும், தமது பகுதி நிலத்திலேயே தாம் கூலிகளாக வேலை செய்து, சிறியளவு சம்பளத்தை பெறுவதை நினைத்து அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.
இந்தக் காணிகளில் குடியிருந்த மக்கள், தங்களுக்கு குடியிருப்பதற்கு இடம் இல்லை என்ற காரணத்தினால், மீண்டும் இங்கு வரவில்லை என்றும் அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தமது விவசாய நிலங்கள் மீண்டும் தரப்படவில்லை. 1973ஆம் ஆண்டு காலப்பகுதியில், படித்த வாலிபர் குடியேற்றம் என்ற திட்டத்தின் கீழ் 2ஏக்கர் வீதம் இந்தக் காணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் மரக்கறி வகைகள், சிறு தானியங்கள் போன்றவை பயிரிடப்பட்டு வந்தது. படித்த வாலிபர் குடியிருப்பு என்பது கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த காணிகளாகும்.
மற்றும் குஞ்சுக்குளம் என்ற பிரதேசத்தில் சாம்பல்மோட்டை, குஞ்சுக்குளம் என்ற இரண்டு பகுதிகள் இருந்தன. இவை அப்போதைய பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்ற போது வழங்கப்பட்டவையாகும். விவசாயத்திற்குத் தேவையான உதவிப் பொருட்களும் அப்போது வழங்கப்பட்டன. உள்ளுர் உற்பத்தியை பெருக்கும் நோக்குடனேயே அப்போதைய அரசாங்கம் இந்த உதவிகளை மேற்கொண்டது.
இந்தக் காலப்பகுதியில், கிராம மக்களாக இருந்தாலும், தாங்கள் எந்தக் குறையும் இல்லாது செல்வந்தர்களாக வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் அந்தக் காலப்பகுதியை நினைவு கூர்ந்தனர்.
கொக்குத்தொடுவாய், கர்நாட்டகேணி, மணலாறு, மக்களின் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. குடியேறியும் 8 வருடங்களாக தமது காணிகள் தமக்கு கிடைக்காத நிலையில், மீண்டும் அக்காணிகள் கிடைக்குமா? கிடைக்காதா? தாங்கள் மீண்டும் இடம்பெயரும் சூழல் வருமா என்ற ஏக்கத்துடனேயே இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். ஏனெனில், தமக்காக குரல் கொடுக்க ஒரு சரியான தமிழ் தலைமை இல்லை என்பதே இவர்களின் ஏக்கமாகும்.