சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதி

2009 விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் நன்கு அறிவர். இந்த வகையில், இன்னுமொரு தமிழ்க் கிராமம் சிங்களவர்களின் குடியிருப்பாக மாறிவருகின்றது. அது மணலாறு கொக்குத்தொடுவாயில் உள்ள கோட்டகைக்கேணி கிராமமாகும்.

1984 நவம்பர் மாதம், விடுதலைப் புலிகள் ஊடுருவியதாக அறிவித்து, அரசாங்கம் அந்தப் பகுதி மக்களை வெளியேற்றியிருந்தது. இவர்கள் அளம்பில், வற்றாப்பளை, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் குடியேறியிருந்தனர்.  தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களாவர். மீண்டும் 1991ஆம் ஆண்டு திரும்பி வந்த போது, விடுதலைப் புலிகள், இன்னும் பிரச்சினை தீரவில்லை. வரவேண்டாம் என மறுத்தனர். அதை பொருட்படுத்தாது குடியேறி சிறிது காலத்தின் பின் அதே ஆண்டு மீண்டும் இடம்பெயர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. மீண்டும் இடம் பெயர்ந்து முன்னர் இருந்த இடங்களுக்கு சென்று பின்னர், 2012 இல் இந்தக் கிராமங்களுக்கு திரும்பியிருந்தனர்.

தமிழர்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1997இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில், மகாவலி அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடியிருப்பை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்தக் குடியிருப்பை முற்றுகையிட்டு, இங்கு குடியேறிய சிங்களவர்களை விரட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் மணலாறு மோதலில் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டை அங்கு குடியேற்றப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு காவலாக போடப்பட்ட இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்டதாகும்.

இந்தக் கிராமவாசிகள் தற்போது அவர்களின் இடங்களைப் பார்ப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அந்தப் பகுதிக்குச் சென்ற போது, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன. அதை அந்த மக்களே தெரிவிக்கின்றனர்.

இங்கு அமைந்துள்ள கோட்டகைக்கேணி பிள்ளையார் ஆலய சூழலில் ஓர் புத்தர் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றகும். சிங்களமயமாக்கலை ஏற்படுத்தும் ஆரம்ப கட்டமே இதுவாகும். இந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வனவளத் திணைக்களம் கற்களை நிறுவி காணிகளை அபகரித்துள்ளது.

சாம்பல் மோட்டை என்ற பகுதியை வனவளத் திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்ததுடன்,  இப்பகுதி அரச காணிகள் என குறிப்பிடுகின்றனர். இவை தமக்கு சொந்தமான காணிகள் என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

mannar 3 சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதிகுத்துக்கால்வெளி,  வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, முந்திரிகைக்குளம், அடையக்கறுத்தான், ஆமையன்குளம், சாம்பாங்குளம், மணற்கேணி, குறுஞ்சாடி, அக்கரைவெளி போன்ற இடங்கள் இன்னும் விடுபடவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆமையன்குளப் பகுதிக்கே ஜுன் மாத நடுப்பகுதியில்   சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொண்டு, மகாவலி அபிவிருத்தி L வலய திட்டத்திற்கு இக்குளத்தினை பயன்படுத்தப் போவதாக அறிவித்ததுடன்     ஆமையன் குளத்திற்கு “கிரி இப்பவெவ“ என பெயரும் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காணிகள் பெரும்பான்மையின வர்த்தகர்களுக்கு பண்ணைச் செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளாவர்.

தற்போது அரசாங்கம் பண்ணை அமைத்துள்ள காணிகளில் வேலை செய்வதற்காக இப்பகுதி கிராம மக்களை அழைத்துச் செல்வதாகவும், தமது பகுதி நிலத்திலேயே தாம் கூலிகளாக வேலை செய்து, சிறியளவு சம்பளத்தை பெறுவதை நினைத்து அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.

இந்தக் காணிகளில் குடியிருந்த மக்கள், தங்களுக்கு குடியிருப்பதற்கு இடம் இல்லை என்ற காரணத்தினால், மீண்டும் இங்கு வரவில்லை என்றும் அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமது விவசாய நிலங்கள் மீண்டும் தரப்படவில்லை. 1973ஆம் ஆண்டு காலப்பகுதியில், படித்த வாலிபர் குடியேற்றம் என்ற திட்டத்தின் கீழ் 2ஏக்கர் வீதம் இந்தக் காணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் மரக்கறி வகைகள்,  சிறு தானியங்கள் போன்றவை பயிரிடப்பட்டு வந்தது. படித்த வாலிபர் குடியிருப்பு என்பது கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த காணிகளாகும்.

மற்றும் குஞ்சுக்குளம் என்ற பிரதேசத்தில் சாம்பல்மோட்டை, குஞ்சுக்குளம் என்ற இரண்டு பகுதிகள் இருந்தன. இவை அப்போதைய பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்ற போது வழங்கப்பட்டவையாகும். விவசாயத்திற்குத் தேவையான உதவிப் பொருட்களும் அப்போது வழங்கப்பட்டன. உள்ளுர் உற்பத்தியை பெருக்கும் நோக்குடனேயே அப்போதைய அரசாங்கம் இந்த உதவிகளை மேற்கொண்டது.

இந்தக் காலப்பகுதியில், கிராம மக்களாக இருந்தாலும், தாங்கள் எந்தக் குறையும்  இல்லாது செல்வந்தர்களாக வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் அந்தக் காலப்பகுதியை நினைவு கூர்ந்தனர்.

கொக்குத்தொடுவாய், கர்நாட்டகேணி, மணலாறு, மக்களின் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. குடியேறியும் 8 வருடங்களாக தமது காணிகள் தமக்கு கிடைக்காத நிலையில், மீண்டும் அக்காணிகள் கிடைக்குமா? கிடைக்காதா? தாங்கள் மீண்டும் இடம்பெயரும் சூழல் வருமா என்ற ஏக்கத்துடனேயே இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். ஏனெனில், தமக்காக குரல் கொடுக்க ஒரு சரியான தமிழ் தலைமை இல்லை என்பதே இவர்களின் ஏக்கமாகும்.