இந்திய அரசின் தொடர் உதவி பாராட்டுக்குறியது: அமைச்சர் ஆனந்த விஜயபால

இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் இந்தியா காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இலங்கை  காவல்துறைப் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் திங்கட்கிழமை (25) ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை பொலிஸ் பாவனைக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த 134 கெப் ரக வாகனங்களின் அன்பளிப்புக்காக, இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியா மற்றும் இலங்கை நீண்டகாலமாக நேரடி நட்பு ரீதியான உறவுகளைப் பேணி வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக, இலங்கை காவல்துறையின் மேம்பாட்டுக்காகவும், பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்கவும் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகின்றது.

இந்த வாகனங்களை வழங்குவதன் மூலம், இலங்கை மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எமது காவல்துறைக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றன.

இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் அவர் காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம். இது ஒரு நீண்டகால கூட்டுப் பயணத்தின் வெளிப்பாடாகும் என்றார்.