Home Blog Page 2729

தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம்

தமிழ் தலைமைகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை காணப்படுவதால், தமிழர்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை அவசியம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ரணில் விக்கிரமசிங்கவிடம் சரணடைந்து விட்டதாகவும், வடக்கிலுள்ள தமிழ் தலைமைகள் தங்களுக்குள் அடிபடுவதை தென்னிலங்கையிலுள்ள சில சிங்கள கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திரனுக்கு செல்லும் முதல் பெண்

2024 ஆம் ஆண்டு நிலாவிற்கு முதன்முதலாக பெண் ஒருவரை அனுப்ப அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு “ஆர்ட்டிமிஸ்“ என்று பெயரிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் ”ஆர்ட்டிமிஸ் 1 ” விண்கலம் நாசாவின் ஒரியன் ரொக்கட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என்று நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார்.

கறுப்பு யூலை இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது -ஆர்த்திகன்

பிரித்தானியாவிடம் இருந்து சிறீலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள மக்களும் அதன் அரசுகளும் மேற்கொண்டு வரும் தொடர் இனஅழிப்புக்களில் மிகப்பெருமளவில் வெளிப்படையாக அரசின் ஆதரவுடன் உலகம் அறிய சிறீலங்காவின் தலைநகர் தொடக்கம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டதே

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலை.

அன்று பல ஆயிரம் தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவான தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர், தமிழ் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. சிங்கள அரசின் பாதுகாப்பில் சிறையில் இருந்தவர்களும் சிறைக்காவலர்கள் மற்றும் சிங்களக் காவல்துறையின் உதவியுடன் படுகொலைசெய்யப்பட்டனர்.

அதனை கலவரமாக சித்தரித்தது சிறீலங்கா அரசு. உலகநாடுகள் அனுதாபம் தெரிவித்தன. அகதிகளாக ஓடிய தமிழ் மக்களுக்கு புகலிடத் தஞ்சம் வழங்கின, ஆனால் இனப் படுகொலையாளிகள் தண்டிக்கப் படவில்லை.

தாம் வெளிப்படையாக மேற்கொண்ட இனப் படுகொலையை கூட உலகம் கேட்கத் தவறியது சிங்கள அரசுகளுக்கு புதிய உற்சாகத்தையும், சிங்களக் காடையர்களுக்கு அதிக துணிச்சலையும் வழங்கியது. எந்த உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்ற தத்துவத்துடன் துறவறம் புகுந்து கௌதம புத்தரின் வழியை பின்பற்றிய பௌத்த துறவிகளும் எதற்கும் துணிந்த காடையர்களாக மாறினார்கள். இனப்படுகொலைகள் தொடர்ந்தன, வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும், வயோதிபர்களையும் பயங்கரவாதிகள் என சிங்கள அரசு கூறியதை அனைத்துலக சமூகமும், ஐ.நாவும் கேட்டு அமைதியாக இருந்தன.

அதனால் சிறீலங்கா அரசின் இனப்படுகொலை மூழு வீச்சுடன் தொடர்ந்தது. அது முள்ளிவாய்க்கால் அவலம் வரை சென்றது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, அங்கு இடம்பெற்ற இனப்படுகொலையை சாட்சியப்படுத்தக் கூட ஐ.நா விரும்பவில்லை. சிங்கள அரசின் சொற்படி மக்களை கொலைக் களத்திற்குள் தள்ளிவிட்டு ஐ.நா வெளியேறியது. தம்மை விட்டுவிட்டு செல்லவேண்டாம் என ஐ.நாவிடம் உயிர்ப்பிச்சை கேட்ட அப்பாவி மக்களில் ஆயிரக்கணக்கானோர் தற்போது உயிருடன் இல்லை. அவர்களுக்கான நீதியும் வழங்கப்படவில்லை. 36 ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜுலை இனப்படுகொலைக்கான நீதி இன்றுவரை கிட்டவில்லை. 10 ஆண்டுகள் சென்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி கிட்டவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலையை தமது பூகோள மற்றும் வர்த்தக நலன்கருதி புறக்கணித்த மேற்குலகமும் அனைத்துலக சமூகமும், அவர்களுக்கு சார்பாக இயங்கும் ஐ.நாவும்தான் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்கள் மீது அழுத்தங்களை பிரேயோகிக்கத் தவறிய தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அதில் பங்குகள் உண்டு. ஒரு இனஅழிப்பை தடுக்கத் தவறிய அல்லது அதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனையை வழங்கத் தவறிய இவர்களால் தான் சிங்கள அரசு இன்றும் தனது இனப்படுகொலையை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

genocide ranil கறுப்பு யூலை இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது -ஆர்த்திகன்வடிவங்கள் மாற்றமடைந்துள்ளதே தவிர சிங்கள அரசின் இனவிரோதமும், இனஅழிப்புச் சிந்தனையும் மாற்றமடையவில்லை. எனவே தான் தமது காலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்காக அமைதியான வழிகளில் போராடிய தமிழ் மக்கள் மீது கொதிநீரை ஊற்றுகின்றனர் பெரும்பான்மை சிங்கள மக்கள். அதனை ஊக்குவிக்கின்றனர் பௌத்த மதகுருக்கள். இன்று கறுப்பு யூலை இனப்படுகொலையயின் 36 ஆவது ஆண்டை நினைவுகூரும் தமிழ் இனம் தற்போதும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது.

சுயலாப அரசியலை கைவிடுவாரா சம்பந்தன்? – தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கேள்வி

தமிழ் மக்களின் தலைமகன் என்று மார்பு தட்டும் சம்பந்தனின் கோட்டைக்குள் ளேயே சிங்கள, பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்ற நிலையிலாவது அவர் சுயலாப அரசியலை கைவிடுவாரா என்று தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விடயம் குறித்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழ் மக்களின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் நிறைந்த கன்னியா பகுதியை வில்கம் விகாரை வஹாராதிபதி அமபிட்டிய சீல வன்ச திஸ்ஸ ஸ்திர தேரர் திட்டமிட்ட வகையில் ஆக்கிமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நகர்வுகளைச் செய்து வருகின்றார். இவ்வளவு நாளும் அரசல்புரசலாக சென்றுகொண்டிருந்த இந்த விடயம் தொடர்பாக உரிய கவனத்தினை திருமலை மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சம்பந்தன் செலுத்தியிருந்தால் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கையில் வைத்திருந்த தருணத்திலோ அல்லது அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்டங்களிலும், நெருக்கடிகளிலும் அரசை பாதுகாக்கின்றபோதோ தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குங்கள் என்று நிபந்தனை விதிப்பதற்கு திராணியற்றிருந்தாலும் ஆகக்குறைந்தது தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துங்கள் என்றாவது நிபந்தனை விதித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம். ஆனால் சம்பந்தன் அதனைச் செய்திருக்கவில்லை.

கன்னியா பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட முக்கிய தமிழர்களின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் 8 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரியான கோகில ரமணி அம்மா குறித்த விகாராதிபதியின் திட்டத்தில் அவ்விடத்தினை தொல்பொருள் திணைக்களம் சுவீகரித்துள்ளது என்பது உள்ளிட்ட விடயங்களை எத்தனையோ தடவைகள் சம்பந்தனைச் சந்தித்தும் தொலைபேசியிலும் கூறியபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்பிரதேசத்தில் சுனாமியின் பின்னர் பிள்ளையார் ஆலயத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லை சம்பந்தன் நாட்டிய போதும் ஆலயத்திற்கான மேடை மட்டுமே அமைக்கப்பட்டது. அதற்கு அப்பால் நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தன் உதவியிருக்கவில்லை. தற்போது அவர் அடிக்கல் நாட்டி அமைக்கப்பட்ட மேடையும் அழிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க, கடந்த 11ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக வந்த நம்பிக்கையில்லாத பிரேரணையைத் தோற்கடித்து மீண்டும் அரசாங்கத்தினை கூட்டமைப்பு காப்பாற்றிவிட்டு மூச்சுவிடுவதற்குள் கல்லாவில் பெரும்பான்மை இனத்தவரும், தேரர்களும் இணைந்து கைவைத்து விட்டார்கள்.

அதன் பின்னர் கடந்த 16ஆம் திகதி இன, மத, பிரதேச பேதமின்றி மக்கள் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்தபோது ஆகக் குறைந்தது அந்ததொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்றாவது சம்பந்தன் சமூகமளிப்பதை விரும்பி யிருக்கவில்லை. மேலும் தனது மாவட்ட முகவராக செயற்படுவதற்காகவே தேசியப் பட்டியல் ஆசனத்தில் உள்ளீர்க்கப்பட்ட துரை ரட்ணசிங்கமும் குறித்த பகுதிக்கு சமூக மளித்திருக்கவில்லை.

இதன் பின்னர் நிலைமைகள் மோசமடையவும்,  சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு முண்டு கொடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு பங்காளிக்கட்சி தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் இந்தவியடம் தொடர்பில் சனாதிபதியுடன் சந்தித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்தபோது கூட சம்பந்தனோ அல்லது வேறு கூட்டமைப்பு உறுப்பினர்களோ பங்கேற்றிருக் கவில்லை.

இவ்வாறான செயற்பாடு, தமிழ் மக்களுக்கு என்ன அநீதிகள் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தினை நோகாது பாதுகாப்பதே தமது நிலைப்பாடு என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். சம்பந்தன் உட்பட அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் கன்னியா உட்பட எந்தவிடமாக இருந்தாலும் அதனைப்பயன்படுத்தி அடுத்த தேர்தலில் தமது வாக்குவங்கியை நிரப்புவதை மட்டுமே மையப்படுத்தி செயற்படுகின்றார்களே தவிரவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பவில்லை.

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கொள்கைகளை, கோட்பாடுகளை அணுகு முறைகளை என அனைத்தையுமே கைவிட்டு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ள நிலையில் கன்னியா விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றுள்ளது.

மற்றும் ஓர் பௌத்த விகாரை சர்ச்சை

நுவரெலியா கந்தப்பளை – கோட் லொஜ் முனுசாமி ஆலய முன்றலில் பௌத்த விகாரை அமைப்பதற்காக பௌத்த மதகுரு ஒருவர் பௌத்த கொடியை நாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கன்னியா மற்றும் நீராவியடி விவகாரத்துடன் இந்த விவகாரமும் பேசப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு தடை விதிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் இது தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கந்தப்பளை பொலிசார் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.

இலங்கையின் புதிய வரைபடம் வெளியானது

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். இறுதியாக 1995ஆம் ஆண்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது.  அதன் பின்னர் புதிய வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய வரைபடமே வெளியாகியுள்ளது.  இந்த வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹந்த நீர்த்தேக்கம் ஆகியவை புதிதாக சேர்க்கப்ட்டுள்ளன.

இந்த வரைபட தயாரிப்பு வேலைகள் மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வரைபடத்தில் துறைமுக நகரம் உட்பட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் காட்டப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரைபட மாற்றம் மேற்கொள்ளப்படும்.

நல்லூர் கந்தன் மகோற்சவம் வழமை போல் நடைபெறும்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் வழமை போலவே இந்த ஆண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான தேர் உற்சவம் தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை என்றும், வழமை போன்றே தேர் திருவிழா நடைபெறும் என்றும், ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வந்த செய்திகளில் நல்லூர் கந்தன் தேர் திருவிழாவின் போது தேர் வெளி வீதி உலா வராது என்றும், உள்வீதியிலேயே தேர் உலா வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டு. மாவட்ட பணிமனை திறப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை  கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நீதியரசருமான  முன்னாள் வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நிர்வாக உபசெயலாளர் எஸ் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழ உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்ட விவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிமலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிறிபரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா. மêரதன், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம்.சதீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

vicky east 2 தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டு. மாவட்ட பணிமனை திறப்பு

 

சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென்பது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனினும் தேர்தல் திகதியை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் இந்த திகதிக்கு அப்பால் தேர்தலை தள்ளிப்போட முடியாது என்றும் தெரிவித்தார்.

 

இலக்கு 35 21-07-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 35 21-07-2019