Home Blog Page 2713

ஜப்பானில் பறக்கும் கார்கள்

ஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் பொருட்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030ஆம் ஆண்டிற்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், தலைநகர் டோக்கியோவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கின்ற இந்த நிறுவனம் 4பேர் பயணம் செய்யும் வகையில் பட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்து பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்திற்கும் மேலாகப் பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறிய என்.இ.சி.நிறுவனம், முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார்.

காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் விவகாரத்தில் எங்களிற்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக எந்தளவிற்கு செல்வதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஸ்மீரிற்கான விசேட அந்தஸ்த்தை நீக்கும் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி இந்தியாவில் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என கருதுகின்றது என  இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் – சீனா

நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதா இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், அதை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெருப்புடன் விளையாடுவோருக்கு அதிலேயே தான் அழிவு என கலகக் காரர்களை சீன அரசின் ஹாங்காங் மற்றும் மக்கவ் விவகாரத்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

சூழலை தவறாக கணித்து அரசு கட்டுப்பாட்டோடு இருப்பதை பலவீனம் எனக் கருதி தப்புக்கணக்கு போட வேண்டாம் என்று போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது. முன்னதாக ஹாங்காங்கில் வன்முறையை தூண்டிவிட்டு, சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் கள்ளத்தனமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறியிருந்தது. இதே போல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஹாங்காங் போலீசாருக்கு எதிர்காலத்தில் ஆயுதங்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். ஹாங்காங்கில் மக்கள் மீது அதிக படையை சீனா பயன்படுத்துவதாகாவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடு: இம்ரான்கான்

பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் அரசு இநதிய தூதரான அஜய் பிசாரியாவை நேரில் அழைத்து கண்டனத்தை தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் அமளியில் முடிந்ததால் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவையில் பேசினார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் இப்பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக கூறினார். பாஜகவின் சித்தாந்தத்தால் இந்தியாவின் சிறுபான்மை மக்கள் இனவெறிக்கு ஆளாக்கப்படுவதை சர்வதேச சமுகத்திற்கு முன் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சிறீலங்கா அரசு பொறுப்பேற்றுள்ளது – அரசு பதவி விலகுமா?

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு பொறுப்பு ஏற்பதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் பொறுப்பாளிகள். அரசின் தவறுகளே தாக்குதலுக்கு காரணம். பல இடங்களில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் தோல்வி கண்டுள்ளோம்.

எங்கு தவறு நடந்தது என்ற விசாரணைகளில் இருந்து அரசு தப்ப முடியாது. ஐ.எஸ் இன் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு அறிக்கைகள் கிடைத்தன, சிரியாவில் போரிடும் சிறீலங்கா முஸ்லீம்கள் தொடர்பிலும் எம்மிடம் புலனாய்வுத் தகவல்கள் இருந்தன.

சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் எமக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு நான் அழைக்கப்படவில்லை. இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே அதில் நான் பங்குபற்றியிருந்தேன். அதன் பின்னர் காவல்துறை மாஅதிபரும் அதற்கு அழைக்கப்படவில்லை. பின்னர் தான் எனக்கு தெரிந்தது பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது என.

பல நாடுகளில் இருந்தும் புலனாயவுத் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு சிறீலங்கா அரசும் அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் அனைவரும் பதவி விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிறீலங்கா போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாடுகளில் அவ்வாறு நிகழாது என தெரிவிக்கப்படுகின்றது.

இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை – வேல் தர்மா

ஈரானிய புள்ளி விபர நிலையத்தின் தகவல்களின்படி 2018-ம் ஆண்டு ஈரானின் இடுக்கண்சுட்டி  (misery index) 19.4% ஆக இருந்தது, இப்போதுஅது 39% ஆக உயர்ந்துவிட்டது. ஈரானில் உள்ள சமையற்காரர்களின் தகவல்களின்படி ஈரானில் உணவு பொருட்களின் விலை 2019இல் ஐம்பது முதல் நூறு விழுக்காடு அதிகரித்துள்ளது. ஈரானியப் பொருளாதாரம் 2019 இல் 6% வீழ்ச்சியடையும் என பன்னாட்டு நாணய நிதியம்  (IMF) மதிப்பிட்டுள்ளது. இவையாவற்றிற்கும் காரணம் ஈரானுடன் ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் செய்து கொண்ட யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தலையாக இரத்து செய்து ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தமையே.

மற்ற நாடுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகள் வைத்திருந்தால் அவற்றின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற மிரட்டலையும் அமெரிக்கா விடுத்தது. இதை ஈரான் மீதான உச்ச அழுத்தம் என்றார் டிரம்ப்.

அமெரிக்காவின் உச்ச அழுத்தத்திற்கு ஈரானின் பதிலடிகள் 1. தனது யூரேனியப்பதப்படுத்தலை அதிகரித்தது 2.அமெரிக்காவின் ஒரு ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 3. பிரித்தானியக் கொடியுடன் பயணித்த இரண்டு எரிபொருள் தாங்கிக்கப் பல்களை தடுத்து வைத்தது. 4.அமெரிக்க உளவாளிகளை ஈரானில் கைது செய்தது. 5. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் ஹ¨தி போராளிகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் குழாய்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் செய்யத்தூபமிட்டது. 7.சியாபோராளிகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாகியது.Iran’s seizure of UK tanker in Gulf e1563610386222 இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை - வேல் தர்மா

இவை அமெரிக்காவிற்கு மிகச்சிறிய பாதிப்புக்க ளையே ஏற்படுத்தின. ஆனால் டிரம்பின் உச்ச அழுத்தத்தால் ஈரான் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கும் நிதி பெருமளவில் குறைந்துள்ளமை டிரம்பிற்கு கிடைத்த வெற்றி என அவரது எதிரிகளே ஒத்துக்கொண்டுள்ளனர். ஈரானின் பூகோள அமைப்பே ஒரு படைக்கலனாகும்.

பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய், ஹோமஸ் நீரிணை, மலாக்கா நீரிணை, பொஸ்ஃபரஸ் நீரிணை ஆகியவை முக்கிய கடல்வழி திருகுப் புள்ளிகளாகும். அதிக கடற்போக்குவரத்துள்ள இரு பெரிய கடல்களை அகலம் குறைந்த நீர்ப்பரப்பால் இணைக்கப்படும் இடங்கள் கடல்வழித் திருகுப் புள்ளிகள் எனப்படும். ஹோமஸ் நீரிணை எரிபொருள் வாணிபத்தில் மிகவும்  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகுப் புள்ளியாகும் ஒரு பாரசீக வளை குடாவையும் ஓமான் வளை குடாவையும் இணைக்கும் ஹோமஸ் நீரிணை ஒரு வளைந்த நீரிணையாகும். ஹோமஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஈரானிக் கடற்கரை ஒரு பிறை வடிவத்தில் உள்ளது.Strait of Hormuz map இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை - வேல் தர்மா

அப்பிறையின் உட்பகுதியில் ஹோமஸ் நீரிணை இருப்பதால் ஈரானின் அதிக நிலைகளில் இருந்து ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் கடற்கலன்கள் மீது இலகுவாக தாக்குதல் நடத்தலாம். ஈரான், ஈராக், குவைத், சவுதிஅரேபியா, பாஹ்ரேன், கட்டார். ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்களில் பெரும் பகுதி ஹோமஸ் நீரிணையூடாகச் செல்வதால் அந்த நீரிணையில் கடற்கண்ணிகளை இடுவதாலும் ஏவுகணை வீச்சிக்களாலும் கடற்படைத் தாக்குதல்களாலும் அந்த நீரிணையூடாக செல்லும் கப்பல்களை ஈரான் தடுக்கலாம்.

உலக் எரிபொருள் விநியோகத்தின் 20% ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் 75% ஈரானால் தடுக்க முடியும். ஹோமஸ் நீரிணையில் செய்யப்படும் சிறிய குழப்பம் உலக எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யும். ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருளைத் தடை செய்வதன் மூலம் தன்மீதான பொருளாதாரத் தடையை நீக்க ஈரான் முயல்வதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

ஹோமஸ் மீது அதிக கவனம் செலுத்தும் அமெரிக்கா ஈரானின் பூகோள இருப்பு உலக எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமெரிக்கக் கடற்படை ஹோமஸ் நீரிணையை கண்காணித்து வருகின்றது.

பாஹ்ரேனில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைப் பிரிவு USS Abraham Lincoln (CVN-72) என்ற விமானம் தாங்கிக் கப்பலையும் உள்ளடக்கியது. ஈரானின் ஐநூறு சிறு விசைப்படகுகளில் இருந்து ஒரேயடியாக ஒரு இலக்கை நோக்கி வீசப்படும் 400 ஏவுகணைகளில் 100 ஏவுகணைகள் அந்த இலக்கைத் தாக்கினாலே கடும் சேதத்தை ஏற்படுத்த முடியும் USS Abraham Lincoln (CVN-72) விமானம் தாங்கிக் கப்பலே செயலிழக்கச் செய்யப்படலாம்.

ஆனால் அதற்கு எதிராக ஈரானைச் சுற்றி வரவுள்ள அமெரிக்கப் படைநிலைகள் பலவற்றில் இருந்து வீசப்படும் ஏவுகணைகள் ஈரானில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை ஈரான் நன்கு அறியும். ஈரான் மீது அமெரிக்கா முன் கூட்டியதாக்குதலைச் செய்தால் ஈரானின் பதிலடி அதனது ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புக்கள் மூலம் அமெரிக்காவினதும் அதனது நட்பு நாடுகளினதும் நிலைகள் மீது தாக்குதல் செய்யலாம். ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுறவியலாளர் ஹோமஸ் நீரிணையில் போர் மூண்டால் பாதிக்கப்படுவது அமெரிக்கா அல்ல எமது நாடுகளே என்றார். மேற்கு நாடுகளுக்கு ஹோமஸ்நீரிணையூடாக மிகவும் சொற்ப அளவு எரிபொருளே செல்கின்றது. அதில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியா விற்கும் எதுவும் செல்லவதில்லை.

அமெரிக்கா அழிக! இஸ்ரேல் ஒழிக! 1979ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் ஈரானின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் அமெரிக்காவிற்கு அழிவு வரவேண்டும் என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் பகிரங்கமாக அடிக்கடி சொல்லும் வாசகங்களாகும். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ இலகுவில் விட்டு வைக்க மாட்டாது. ஈரானிய ஆட்சியாளர்கள் ஈராக், சிரியா, லெபனான், எகிப்து, அல்ஜீரியா, லிபியா ஆகியவற்றை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து தாம் ஒரு பிராந்தியவல்லரசாக வேண்டும் என்ற கனவுடன்செயற்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன;

மிகச் சிறந்த நாவன்மையுடன் விவாதங்களை முன்வைக்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹமட் ஜவார்ஜரீஃப் மீது அமெரிக்கா பொரு ளாதாரத் தடை விதித்துள்ளது. அதே வேளை ஈரானுடன் இணைந்து விரைவில் ஒரு வளைகுடாவில் ஒரு கடற்போர் ஒத்திகை செய்வதற்கான குறிப்பேட்டில் ஈரானும் இரசியாவும் கையப்பமிட்டுள்ளன. சிரியாவில் இரசியாவின் தலையீடு அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் பஷார் அசாத்தை அசைக்க முடியாமற்போனதோ அதேபோல் ஈரானும் பாதுகாக்கப்படலாம்.

தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி

யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய சிந்தனையை நெஞ்சில் நிறுத்தி தமிழர் கல்வி மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றி தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை தீவிலும் தனக்கென்று தடம் பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முதற்பகுதி வருமாறு,

கேள்வி:- 5ஜி எனப்படும் ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் குறித்த உங்களின் நிலைப்பாட்டினைக் கூறுங்கள்?

பதில்:- 5ஜி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையசேவை வழங்கப்ப டுகின்றபோது அது ஒரு ஜி.பி வரையிலான வேகத்தினையும் அதிகரித்ததாக காணப்படும். இந்த வேகமானது அதியுயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைக்கற்றைகளால் வலையமைக்கப்படவுள்ளது. இந்த தொழில் நுட்பமானது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. ஏன் என்றால் குறித்த கம்பங்களை நிறுகின்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கடந்த மாதம் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் நாங்கள்  5ஜி தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதற்கான உட்கட்டுமான வசதிகளை நிறுவி வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே குறித்த கம்பங்கள் ஊடாக 5ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்வுள்ளது வெளிப்படை

கேள்வி:- நவீன தொழில் நுட்பம் உள்வாங்கப்படுவதில் என்ன தவறிருக் கின்றது?

பதில்:- உலகின் ஒரு வெற்றிகரமான நாட்டை மக்களுடன் ஆலோசிக்காமல் உருவாக்க முடியாது என்று சிங்கப்பூர் நாட்டைக் கட்டியெழுப்பிய அதன் முன்னாள் பிரதமர் அமரர் லிகுவான் யூ கூறியிருந்தார்.  அப்படியிருக்க, பல நாடுகளில் பரிசோதனை அளவில் இருக்கின்ற இத்தொழில்நுட்பத்தின் தேவை தற்போதைய நிலையில் யாழ்.மாநகர சபைக்கு தேவையானதா? என்ற கேள்வி எழுகின்றது.

உலக நாடுகள் தொழிநுட்பதுறையில் முன்னேறும் போது அதற்கு ஈடு இணையாக எமது மாநகரமும் முன்னேற வேண்டும் என்பதில் எமக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் யாழ்.மாநகரத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் கூட பூர்த்தி செய்யாத நிலையில் சிமாட் சிற்றிகளுக்கே உரித்தான் இவ்வாறான தொழில் நுட்பம் தற்போது எமக்கு தேவை தானா? அத்துடன் இத்தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்படும் கதிர் வீச்சினை அளப்பதற்குரிய எந்த பொறிமுறையும் இல்லாத நிலையில் அது பற்றிய எந்த விபரங்களும் தரப்படாத இடத்தில் இந்த 5ஜினை யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அறிமுகப்படுத்துவதானது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் ஆரோக்கியத்திற்கும் பாரிய பரிசோதனையாக அமைக்கின்றது.

கேள்வி:- உயிரினங்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- ஜெருசலமின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த வைத்தியர் யேல் ஸ்டீன் பெடரல் கம்னியூகேசன்ஸ் கமிசனுக்கு கடிதமொன்றை அண்மையில் எழுதியிருந்தார். 5ஜி எம்.எம்.வி பற்றிய முக்கிய விடயங்களை குறிப்பிட்டு அதுகுறித்த கவலைகளையும் அதனால் மனித சருமம் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டியிருந்தார். மனித சருமமானது நுண்ணலைக் கதிர்வீச்சில் 90சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் தலையிலிருந்து கால்விரல்கள் வரையில் முக்கியமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல காரணிகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி மனித உடலில் உள்ள வலி ஏற்பிகளை உடலினுள்ளேயே வெடிக்கச் செய்யலாம். கண்கள் பாதிக்கப்படுவதோடு உயிரணு வளர்ச்சியை கணிசமாக கட்டுப்படுத்துவதோடு நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் மண்டலத்தினையும் பூரணமாக சிதைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றது. jjj தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)

ஆக 5ஜி தொழில்நுட்பமானது உள்வாங்கப்படுவதால் ஆரோக்கியத்தினை பாதிப்பதோடு  தமிழினத்தினை ஒட்டுமொத்தமாக கருவறுக்கும் செயற்பா டொன்றுக்கே வழிவகுக்கும். இதனைவிடவும் இதற்காக அமைக்கப்படும் கோபுரங்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் இல்லை.

கேள்வி:- யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் 18 சிமாட் லாம் போல்கள் தான் நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சிமாட் லாம் போல் என்ற பெயரில் தான் இவை யாழ்.மாநாகரச சபை எல்லைக்குள் அறிமுகமாகின்றன. 18 சிமாட் லாம் போல்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிமாட் லாம் தூண்கள் நாட்டப்பட்டு அதில் அன்டனாக்கள் சிறிதான அளவில் பொருத்தப்படும். அவை அளவில் சிறிதாக காணப்பட்டாலும், அவற்றின் அதிர்வெண் மிகவும் அதிகமானது. இத்தகைய அதியுயர்ந்த அதிர்வெண் அலைவரிசைகள் எமது மக்களின் உடலுக்குள் புகுந்து கலங்களைச் செயலிழக்கச் செய்துவிடும். இதனால் நோய் எதிர்ப்பு கலங்கள் இலகுவில் செயலிழக்கச் செய்யப்பட்டு புற்றுநோய், கருச்சிதைவு என்பன அதிகம் ஏற்பட்டுவிடுகின்றன. பூமிக்கு வரும் கதிர்வீச்சினை தடுப்பதற்காகவே ஓசோன் படலம் இயற்கையாகவே காணப்படுகின்றது. அவ்வாறிருக்க, இத்தகைய அன்டனாக்கள் மூலம் வெளியாகும் கதிர்வீச்சினை தடுப்பதற்கு எமது மக்களின் உடல்களைச் சுற்றி எவ்வகையான பாதுகாப்பு உள்ளது என்பதை ஒருகணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆகவே இயற்கையாகவோ செயற்கையாகவோ0 எம் உடல்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாதவிடத்து எம்மை நாமே தான் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதனைவிடவும் இந்த சிமாட் லாம் போல்கள் அனைத்திலும் கமராக்கள் பூட்டப்படுகின்றன.

சிமாட் லாம் போல்களில் கமராக்கள் அத்தியாவசியமான விடயம் என்பது ஒருவாதமாக இருந்தாலும், அவற்றுக்கான தூண்கள் சுமார் 20மீற்றர் உயரத்தில் சன நெருக்கடி மற்றும் குடியிருப்புக்கள் நிறைந்த இடங்களில் அமைக்கப் படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சி அடுத்தவாரம்……………..

கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்கள்

அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை அமைக்க தேவையான அடிப்படையாக வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுவதை வடபகுதி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பயிர் நிலங்களாக இருந்த கோட்டைகேணி, குஞ்சிக்கால்வேலி, தீமுந்தல், வெள்ளைகல்லடி ஆகிய பிரதேசங்களை உள்ளிடக்கி, பாதுகாக்கப்பட்ட வானப்பகுதியாக அறிவித்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் தமது காணிகளுக்கு சென்று பயிர் செய்கையில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பயிர்செய்கைக்காக பயன்படுத்திய பழைய கிணறுகளும் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

தமிழ் மக்களின் காணிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கம், தமிழ் மக்களின் பயிர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் கடும் வெறுப்பில் இருந்து வருவதாகவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பகாமத்தில் படையினர் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி இன்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவுடன் டக்ளஸ்,வரதராஜ பெருமாள் சந்திப்பு

சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கணேசனிடம் இது தொடர்பாக வினவியபோது அவர் கீழ்வருமாறு விபரமளித்தார்,

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

டக்ளஸ் தேவானந்தா,வரதராஜ பெருமாள் , ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே , அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன்,பி.உதயராசா,  உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.