தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிராந்திய துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் இன்று (08) தெரிவித்துள்ளது.
இந்த வாரம் 6 ஆம் நாள் பயணத்;தை மேற்கொண்டுள்ள அவர் எதிர்வரும் 16 ஆம் நாள் வரையிலும் சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அரச அதிகாரிகள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்தியாவில் காஸ்மீர் விவகாரம் அனைத்துலகத்தின் கவனத்தை பெற்றுள்ள நிலையில் அமெரிக்க அதிகாரியின் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ரஜபக்சா தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கோத்தபயாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா இன்று (08) தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோத்தபயா கடும் போக்காளர் அல்ல ஆனால் அவரை அவ்வாறு சித்தரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் முற்படுகின்றன. எதிர்வரும் 11 ஆம் நாள் இடம்பெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் நாம் அரச தலைவர் வேட்பாளரை அறிவிக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது? என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் குழு மாத்தள விமான நிலையத்திற்கு ஆய்வுக்காக செல்கின்றது.
குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் கட்டடத்தின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
குறித்த மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும், அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளுமே இந்த ஆய்வுக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அண்மையில் கிளிநொச்சியில் நடந்த இரட்டைக் கொலை கிளிநொச்சியை மாத்திரமல்ல, முழு ஈழத்தீவையுமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போருக்குப் பிறகு, கிளிநொச்சி குறித்தும் வடக்கு கிழக்கு குறித்தும் அவ்வப்போது இத்தகைய செய்திகள் வெளியாகின்றன.
2009இற்கு முன்னரான காலத்தில், அதாவது விடுதலைப் புலிகளின் காலத்தில் வீரத்தையும் சாதனைகளையும் எடுத்தியம்பிய இம் மண்ணில் இன்று இத்தகைய செய்திகள் வெளி வருகின்றமை எதேச்சையானதா?
2009 உடன் போர் முடிந்துவிட்டது என்றே சொல்லப்படுகின்றது.
இப்போதுதான் வடக்கு கிழக்கில் அமைதி நிலவுகின்றது என்று ஆளும் சிங்கள அரசுகள் கூறி வருகின்றன. இப்போதுதான் வடக்கு கிழக்கில் போக்குவரத்துக்கள் இயல்பாக நடப்பதாகவும் சொல்லுகின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் இயல்பாக சட்டவிரோத போதைப் பொருட்களும் வந்து சேருகின்றது என்பதை இலங்கை அதிபர்கள் சொல்லுவதில்லை. போருக்குப் பிறகும் வடக்கு கிழக்கில் உயிரிழப்புக்கள் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சில வருடங்களின் முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் காவல்துறையினர் இவ்வாறு படுகொலை செய்திருந்தனர்.
ஆவாக் குழு என்பது ஆமிக்குழுவே. அது அரசியல் காரணங்களுக்காக சிங்கள அரசால், குறிப்பாக கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட குழு.
வடக்கு கிழக்கில் வன்முறை நிலவுகின்றது. வன்முறை இளைஞர் குழுக்கள் உள்ளன. எனவே இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லுவதற்காக சிங்கள அரசும் இராணுவமும் உருவாக்கியதே ஆவாக் குழு.
அதற்கு ஊடகங்களும் கவனத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. உலகின் மிகச் சிறந்த விடுதலை இயக்கத்தை, வீரமான ஒரு அமைப்பை அழித்த சிங்கள அரசுக்கு ஏன் ஆவாக் குழுவை அடக்க முடியவில்லை? விடுதலைப் புலிகள் மீள உயிர்க்கிறார்கள் என்று கதைவிட்டு, ஈழத் தமிழ் இளைஞர்களை அழிக்கிற, ஒடுக்கிற அரசுக்கு இதனை ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா? கிளிநொச்சியில் இரட்டைக் கொலை செய்தவர், கஞ்சா போதைப் பொருளை உட்கொண்டிருந்தார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இன்றைக்கு கஞ்சாவும் கத்தியும் வருவதற்கும் அந்தக் கலாசாரம் மேலோங்குவதற்கும் யார் காரணம்? வடக்கு, குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று கஞ்சா கைமாற்றப்படும் பகுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் பேருந்துகளிலிருந்து கஞ்சா கொண்டு செல்லப்படுகின்றது. இதில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.
ஈழத்தைப் பொறுத்த வரையில், இன்றைக்கு சட்டவிரோத போதைப் பொருட்கள் மையம் கொள்ளுவதற்கு சிங்கள இராணுவமும் காவல்துறையுமே காரணம்.
கிளிநொச்சியில் ஒருமுறை சிறுவன் ஒருவன் போதைப் பொருளுடன் மக்களால் பிடிக்கப்பட்டான். போரில் தாய் தந்தையை இழந்த அவன், இராணுவ முகாம் ஒன்றுக்கு போதைப் பொருளை கடத்திச் செல்லுகையில், வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடவும் முற்படுகையில் மக்களால் பிடிக்கப்பட்டான். போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களின் பாடசாலைக் கல்வி குழப்பட்டு, அவர்கள் போதைப் பொருள் சுமக்கும் சிறுவர் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள், கல்வி கற்கவும் தமது ஆளுமையை வளர்க்கவும் சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம் என சிறுவர் இல்லங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்தன. காந்தரூபன் அறிவுச்சோலை முதலாவது ஆண்டு நிறைவில் கலந்து கொண்ட, தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மண்ணின் செடிகள், கல்வி, ஆளுமை, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுச்சோலையை உருவாக்கியதாக கூறுகின்றார்.
சிறுவர்களை பாதுகாத்து, அவர்களை நெறிமுறை பிறழாமல் ஈழ மண்ணின் ஆளுமைகளாக, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக உருவாக்கிய அத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்கிய விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறி, சர்வதேச ஆதரவுடன் அழித்தொழித்த சிங்கள அரசு, இன்று ஈழ மண்ணில் தாம் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாக அதிகரிக்கும் ஒரு சூழலைதான் சிங்கள அரசு உருவாக்கியுள்ளது. இதனைத்தான் போருக்குப் பிந்தைய அழகிய காலம் என்றும் சிங்கள அரசு சொல்கின்றது.
இந்த விசித்திரத்தில்தான் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதைப் பொருளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த முனைகின்றார். குளவிகளைக் கொல்லவும், யானைகளை கொல்லவும், நாய்களைக் கொல்லவும் தடையுள்ள நாட்டில், ஈழத் தமிழர்கள் மாத்திரம் கொல்லப்பட்டலாம். போரின் இறுதியில் சரணடைந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்று சிங்கள அரசு வாய் மூடி இருக்கிறது.
அதிபர் சிறிசேன வாய் திறக்கிறார் இல்லை. லட்சம் பேரை அழித்து, பல ஆயிரம் பேரை காணாமல் ஆக்கிய அரசில் அதிபராகவும் பிரதமராகவும் இருப்பவர்களுக்கு தானே முதலில் மரண தண்டனை விதிக்க வேண்டும்.அண்மையில் சிறிசேனவின் மரண தண்டனைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 18 மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதில் பதினாறு பேர் தமிழ் பேசுபவர்கள். நான்கு பேர் சிங்களவர்கள். ஆறு தமிழர்களும் ஆறு முஸ்லீம்களுமாய் 16 தமிழ்பேசுவோர். தமிழர்கள் சிறுபான்மையராக உள்ள நாட்டில் சிறிசேனவின் மரண தண்டனைப் பட்டியலில் மாத்திரம் தமிழர்களுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியில், அரசியலில் மிகவும் குறைந்த இடமே உள்ள ஈழத் தமிழர்களுக்கு மரண தண்டனைப் பட்டியலில் மாத்திரமே அதிக இடம். இதுதான் சிங்களம்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தி, அவர்கள் சிறுவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வேலைகளை செய்துவிட்டு, அதே இராணுவம் போதை இறங்க விழிகளுடன் வந்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து வகுப்பு எடுக்கின்றனர். எமது தலைமைகளும் இது தொடர்பில் மௌனம் காக்கின்றன.
அரசியல் தலைமை, நிர்வாகம், சமூகம் என அனைத்து மட்டத்திலும் விழிப்பும் அர்த்தபூர்வமான செயற்பாடுகளுமே எமக்கு அவசியம் ஆகும். யுத்தம் என்பது சத்தத்துடன் மாத்திரம் நிகழ்வதல்ல, கத்தியின்றி, இரத்த மின்றியும் நிகழும் என்பதற்கு ஈழம்தான் எடுத்துக்காட்டு. ஒரு புறம் போதைப் பொருளுக்கு எதிராக பேசிக் கொண்டு, மனித விரோத செயல்களை செய்துவிட்டு, மரண தண்டனை பற்றிப் பேசிக் கொண்டு, அதே போதைப் பொருளால் வடக்கு கிழக்கில் இன அழிப்பு யுத்தம் செய்கின்றது சிங்கள அரசு. போராளிகளின் ஈகத்தால் பெருமை பெற்ற மண்ணின் வரலாற்றை மாற்றத் துடிக்கின்ற வரலாற்று ரீதியான, இன ரீதியான அழிப்புக்கான நுண் செயற்பாடுகளே இவை.
ஐதேக அமைக்கும் மெகா கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும். ரணில் – சஜித் மோதல் இதில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. நெருக்கடி மோசமடைந்து – தான் களமிறங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டால், கரு ஜயசூரியவை களமிறக்கிவிட்டு, தான் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திட்டத்துடன் ரணில் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்கள் நிகழ்கின்றன. அடுத்ததாக என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாத நிலை உருவாகியிருக்கின்றது. ரணில் – சஜித் மோதல் குறித்து கடந்த வாரமும் இந்தப் பகுதியில் பார்த்தோம். இரு தரப்பினருமே விட்டுக்கொடுப்பதில்லை என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள். கட்சியின் பாராளுமன்றக்குழு கடந்த வாரம் கூடியபோதும் இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டிருந்தது. கட்சியின் செயற்குழு கடந்த திங்கட்கிழமை கூடியபோதும் இதே பிரச்சினைதான் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
கட்சிக்குள் சஜித்துக்கான ஆதரவு அதிகரித்திருப்பதை அவதானித்த ரணில், நிலைமைகளைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவதற்கு மற்றொரு உபாயத்தைக் கையாண்டார்.
சனாதிபதி வேட்பாளர் தெரிவை ஐ.தே.க. மேற்கொள்ளாது, அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய முன்னணி மூலம் அந்தத் தெரிவை மேற்கொள்ளலாம் என்பதுதான் அவரது திட்டம். ஐ.தே.மு.வில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் இணைந்துகொள்ளும். அவை தன்னை ஆதரிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த உபாயத்தை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் முன்வைத்தார்.
புதிய கூட்டணியில் தனக்கு இசைவான நிலையை ஏற்படுத்தும் வகையில் அதன் யாப்பு விதிகளையும் தயாரிக்க ரணில் முயன்றதாகச் சொல்லப்படுகின்றது. இப்போது கட்சியில் புயலை ஏற்படுத்தியிருப்பது அதுதான். புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்கு கட்சியின் செயற்குழு அங்கீகாரமளித்திருக்கின்றது. ஆனால், அதற்காக ரணிலால் தயாரிக்கப்பட்டிருக்கும் யாப்பு விதிகளைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என சஜித் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ரணிலின் திட்டத்தின்படி பத்து உறுப்பினர்களைக் கொண்ட தலைமைத்துவச் சபை ஒன்று அமைக்கப்படும். கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அதில் இடம்பெறுவார்கள். ஐ.தே.க.வில் இல்லையென்றாலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜிதவும் தலைமைத்துவக் குழுவில் இடம்பெறுவார்.
கூட்டணியின் செயலாளர் பதவியை தன்னுடைய விசுவாசியான ராஜிதவுக்குக் கொடுப்பதுதான் ரணிலின் திட்டம். கூட்டணியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்த தலைமைத்துவக் குழுவுக்கே இருக்கும். சஜித், கரு யாரும் இதில் இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்தத் தலைமைத்துவக் குழுவை அமைப்பதற்கு ரணில் முற்பட்டிருக்கும் நிலையிலேயே சஜித் தரப்பு கொதித்தெழுந்திருக்கின்றது.
ரணிலின் இந்த முயற்சிக்கு சஜித் தரப்பு ஒரேயடியாக ஆப்பு வைத்துவிட்டது. “சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ‘கூட்டணி’ ஒன்றை அமைப்பதற்கு நாம் ஆதரவளிப்போம். ஆனால், சனாதிபதி வேட்பாளர் தெரிவை அதற்கு முன்னர் நாம் முன்னதாக மேற்கொள்வோம்” என சஜித் தரப்பு தெரிவித்தது. அத்துடன், கூட்டணியின் செயலாளர் பதவியும் ஐ.தே.க.வின் வசமே இருக்க வேண்டும் என்பதையும் சஜித் தரப்பு உறுதியாக இருந்தது. ரணில் தன்னைப் பலப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாகவே இதனைச் செய்வதாகவும் அவர்கள் கருதினார்கள். இதனால்தான் செயலாளர் பதவியைத் தனக்குத் தரவேண்டும் என சஜித் பகிரங்கமாகவே கோரினார்.
இது குறித்து மனோ கணேசனுடன் பேசிய போது, சஜித் இவ்வாறு கூறியிருக்கின்றார். “நான் ஒருபோதும் கூட்டணிக்கு எதிரானவன் அல்ல. அப்படி ஒரு தவறான கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உண்மையில் கூட்டணி இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் தனித்து வெல்ல முடியாது என எனக்கு மிக நன்றாக தெரியும். ஜனநாயக தேசிய கூட்டணியின் உத்தேச யாப்பின் சில சரத்துகளை திருத்த வேண்டுமெனவே நான் கூறுகிறேன். உண்மையில் ஐதேகவும், உங்களது தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய கூட்டணியின் பொது செயலாளராக பணியாற்றக்கூட நான் தயாராக இருக்கிறேன்.”
கூட்டணியின் சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைத் தன்னிடம் வைத்திருக்கவேண்டும் என்பதில் சஜித் அக்கறையாக இருப்பதை இது உணர்த்துகின்றது. கூட்டணியில் இணையும் கட்சிகளில் பெரும்பாலானவை ரணிலை ஆதரிக்கலாம் என்ற நிலையிலேயே, சனாதிபதி வேட்பாளரை முதலில் தெரிவு செய்வோம். கூட்டணி உடன்படிக்கையில் பின்னர் கையப்பமிடுவோம் என சஜித் அணி பிடிவாதமாக இருந்தது. கட்சிக்குள் சஜித்துக்கு அதிகளவு ஆதரவு இருப்பதும் தெரிந்தது. வேட்பாளரைத் தெரிவதற்கு செயற்குழுவில் வாக்கெடுப்பு எனப் போனால், தனக்கு ஆபத்தாகிவிடலாம் என ரணில் அஞ்சினார்.
இந்தப் பின்னணியிலேயே வியாழக்கிழமை இரவு கரு ஜயசூரியவை அலரி மாளிகைக்கு அழைத்த ரணில் அவருடன் நீண்ட நேரம் தனிமையில் உரையாடியதாகச் சொல்லப்படுகின்றது. அதன்போதே கருவை சனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கான தனது விருப்பத்தை ரணில் வெளியிட்டதாகச் சொல்லப்படுகின்றது. நிறைவேற்று அதிகார சனாதிபதிப் பதவியை இல்லாதொழிப்பது என்பது அரசியலில் நீண்டகாலமாகச் சொல்லப்படும் வாக்குறுதி. அதனைச் செய்வதன் மூலம், அதிகாரமிக்க பிரதமராக தான் தொடர்ந்தும் இருப்பதுதான் ரணிலின் திட்டம். சஜித் தரப்பு கருவை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவில்லை.
அத்துடன், கூட்டணிக்கான யாப்பைத் திருத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். இரு தரப்பினரும் வாழ்வா? சாவா? என்ற வகையில் மோதலில் குதித்திருக்கும் நிலையில், திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பின்போடப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நெருக்கடி ஐ.தே.க.வில் பாரிய பிளவு ஒன்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உருவாகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உண்டு.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவ்வாறு கோத்தபாய களமிறக்கப்பட்டால் அவர் போர் வெற்றியை முன்னிலைப்படுத்தித்தான் தேர்தல் பிரசாரம் செய்வார்.
இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய முழுத் தகுதி சரத் பொன்சேகாவுக்கே உண்டு. ஏனெனில், போரை வழிநடத்திய தளபதி அவரே. அவரை மீறிப் போர் வெற்றிக்கு கோத்தபாய உரிமை கோர முடியாது.
அதேவேளை, சர்வதேச அரங்கில் பல குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ள கோத்தபாயவின் முகத்திரையைக் கிழிக்கக்கூடிய சகல வல்லமையும் பொன்சேகாவுக்கே உண்டு.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சரத் பொன்சேகாவைக் களமிறக்கவேண்டும். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவைத் தவிர வேறொருவர் அறிவிக்கப்பட்டால் அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும்.
அதைவிடுத்து கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புண்டு” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிகந்த பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில், வெலிகந்தையிலிருந்து வடமுனைக்கு செல்லும் போது கிழக்கே 8கிலோமீற்றர் தொலைவில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் ஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ் ஆலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
1900 ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மருத மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வழிபட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
1925ஆம் ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொது மக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலயத்திற்குரிய மண்டபம், மடம் அமைத்து 1929ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்திற்கு நிரந்தரமாக அர்ச்சகரை நியமித்து தினசரி புசையுடன் விசேட புசைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, தம்மங்கடவை, முத்துக்கல் போன்ற பல பகுதிகளிலுள்ள பொது மக்கள் சேர்ந்து ஆலயத்திற்கு வருடாந்த அலங்கார உற்சவத்தை ஆடி மாதத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
எமது புராதன பொக்கிசங்களையும் தமிழினம் வாழ்ந்த இடங்களையும் மீளவும் பொறுப்பேற்று இடிபாடுகளை திருத்தி பாதுகாக்க வேண்டியது தலையாய கடமை என சமூக ஆர்வலர்களும் நலன் விரும்பிகளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றமும் இவ்வாலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புனரமைத்து வழிபாட்டிற்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து பொது மக்களிடமிருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று 06.08 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றதாக அறியமுடிகின்றது.
06.08 அன்று மாலை 7.30 வரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுவதாக அறியமுடிகின்றது.
ஐ.தே.கவுக்குள் கூட்டணி அமைப்பது, மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான குழப்பங்கள் தொடர்பாக பேசப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி வெற்றியீட்டுவது என்பது தொடர்பில் சிங்களக் கட்சிகள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.