சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது? என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.