Sign in
  • முகப்பு
  • செய்திகள்
  • ஆய்வுகள்
  • நிகழ்வுகள்
  • காணொளிகள்
  • வார இதழ்கள்
  • நேர்காணல்கள்
  • ஆசிரியர் தலையங்கம்
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search

Logo

  • Home
  • About Us
  • Contact Us
  • Sitemap
  • Privacy Policy
  • English

Logo

  • முகப்பு
  • செய்திகள்
  • ஆய்வுகள்
  • நிகழ்வுகள்
  • காணொளிகள்
  • வார இதழ்கள்
  • நேர்காணல்கள்
  • ஆசிரியர் தலையங்கம்
Home Blog Page 2703

கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்குக் காரணம்?

August 18, 2019

ஒற்றுமை குறைந்தால் பலத்தை இழப்போம். என்று எச்சரித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்

“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை, விலகிப் போகின்றவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி வைக்கவும் முடியாது” – எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஒருவகையில் பார்த்தால் அவர் கூறுவது சரியாக இருந்தாலும், அப்படிப் பலரும் விலகிப் போவதற்குக் காரணம் யாது என்பதுதான் நோக்கப்பட வேண்டும். யாரையும் விலகிப் போக வேண்டும் என்று வற்புறுத்தி விலக்குகின்ற வேலை நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆள்கள் தாமாக விலகிப் போகக் கூடிய களச் சூழலை ஏற்படுத்தி,அதன்மூலம் அவர்களை வெளியேற்றவைக்கலாம். இதுதான் கூட்டமைப்பில் நடக்கின்றது என்பதைப் கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோர் உணரவேண்டும் ஒப்புக்கொள்ள வேண்டும்  ஏற்றுத் திருந்த முற்பட வேண்டும்.

ஒருவகையில் பார்த்தால் கூட்டமைப்பின் நிலைமை ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை போன்றதாகிவிட்டது. யுத்த நெருக்கடி, போரில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில், மிலேனியத்தின் ஆரம்பத்தில் துணிந்து கூட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தவர்கள் பலரும் இன்று கூட்டமைப்பில் இல்லை. இடையில் ஒண்டவந்தவர்களின் கூடாரமாகி விட்டது கூட்டமைப்பு என்பதுதான் யதார்த்தம்.

இப்படி மாறுவதற்கு இடமளித்துப் பல்லிளித்துப் பார்த்திருந்த மாவை சேனாதிராசா போன்ற பொறுப்பற்ற தலைவர்களே இந்த ஒற்றுமைச் சிதைவுக்குக் காரணம் எனலாம். யாரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுமாறு யாரும் கூறவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பலரும் தாமாகவெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்ற இக்கட்டுக்குள் தள்ளப்படும் சூழ்நிலை சில தரப்புகளால் – குறிப்பாக
கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கமான தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தன . முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது வெள்ளிடை மலை.

சுரேஷ் பிரேமச்சந்திரன், பேராசிரியர் சிற்றம்பலம், நீதியரசர் சி.வி.
விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவகரன், அருந்தவபாலன்,சிவசக்தி ஆனந்தன் என்று இந்தப் பட்டியல் நீண்டது. இன்னும் பலரும் இந்தப் பட்டியலில் புதிதாகச் சேரக்கூடிய வாய்ப்பே அதிகம் உண்டு. இதிலே, சுரேஷ் பிறேமச்சந்திரன் ,சிவசக்தி ஆனந்தன் போன்ற ஒரிருவரைத் தவிர, பிற எல்லோரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம்.

உள்கட்சி ஜனநாயகம், தகுதியானவர்களுக்கே முன்னுரிமை மற்றும் செம்பு
தூக்கிகள்,காவடிக்காரர், பந்தம் பிடிப்போர் போன்றோரை புறமொதுக்கி திறமையும், தகுதியுமுள்ளோருக்கே கட்சியில் முக்கிய இடம் போன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை தமிழ்க்கூட்டமைப்பு- குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சி – கடைப்பிடிக்குமானால் இப்படி கூட்டமைப்பை விட்டு வெளியேறுவோர் குறித்து சுமந்திரன் கவலைப்பட வேண்டியிருக்காது என நாம் நம்புகிறோம். தமிழ்க் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் இணைவு என்றால் அதை வழிநடத்துவதற்கு சில அடிப்படைகள் கட்டாயம்
பின்பற்றப்பட்டேயாக வேண்டும். முக்கிய தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்க முன்னர் கூட்டமைப்பின் வழிகாட்டல் குழு அடிக்கடி விவாதிக்க வேண்டும். கருத்தொருமைப்பாட்டைப் பேண வேண்டும்.

பலகட்சிகளையும் சேர்ந்தோர் கூட்டமைப்பின் பெயரால் கூட்மைப்பின் பட்டியலால் – நாடாளுமன்றத்துக்குத்தெரிவு செய்யப்படக்கூடும். ஆனால் அந்த எம்.பிக்களின் மொத்தக் கூட்டுத்தான் கூட்டமைப்பு என்ற கருத்தியலில் இருந்து சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் வெளியே வரவேண்டும். அந்த எம்.பிக்களை கைகளில் வைத்துக் கொண்டு கூட்டமைப்பின் பெயரில் எதையும் நாங்கள் தீர்மானித்து முன்னெடுக்கலாம் என்ற திமிர்த்தனத்திலிருந்து கூட்டமைப்பின் தலமை முதலில் வெளியே வரவேண்டும்.

கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டு அந்தக் கட்சிகளின் ஒத்திசைவில் கூட்டமைப்பு இயங்கவேண்டுமே ஒழிய, அந்தக் கட்சிகளின் எம்.பிக்களின் ஒத்திசைவோடு மட்டும் கூட்டமைப்பை இயக்கிவிடலாம், நினைத்ததை செய்யலாம் என்ற மிதப்போடு கூட்டமைப்பின் தலைவர்கள் என்றுகூறிக் கொள்வோர் இயங்கக் கூடாது. கூட்டமைப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும், புதிய தரப்புகளையும் உள்ளீர்த்து அதனை வலுவான சக்தியாக்க வேண்டுமானால், வெளியில் நிற்கும் தகுதி,
திறமையுடையவர்களை அரவணைக்க கூட்டமைப்பு தலைமை தயாராக வேண்டும்.

மாவை சேனாதிராசா போன்ற தலைவர்களுக்கு அந்தபண்பியல்பில்தான் அதிகம் குறைபாடுகளுண்டு. அவர்களால் கூட்டமைப்பை பலப்படுத்துவது என்பது கேள்விக்குறியே.

யாழ். மக்களின் காணிகளை வழங்க 1200 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்

August 18, 2019

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒருபகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபா தேவை எனவும் அரசாங்கம் அதனை வழங்கவில்லை எனவும் இராணுவத்தினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளனர்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 16.08 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இராணுவத்தினர் இத்தகவலை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலாலி வீதியின் கிழக்குப் புறமாக உள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன், குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அதனை வலியுறுத்தியுள்ளதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராம சேவகர்கள் பிரிவுகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் இராணுவத்தின் இந்த நடவடிக்கை பொருளாதார மேம்பாட்டிற்கு தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்திடம் கோரியிருந்தோம் ஆனால் அந்த நிதியை அரசாங்கம் தரவில்லை என்றார்.

வவுனியா அகதி முகாமில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்

August 18, 2019

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் அவர்கள் நேற்று (17) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உயிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் பேரில் நீர்கொழும்பு திரும்பிச் சென்றுள்ள நிலையில் ஒரு பகுதியினர் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அவர்களது தற்போதையநிலை, தீ விரவாத தா க்குதலின் பின்னரான நிலமைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

UN 2019 2 வவுனியா அகதி முகாமில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. முன்னதாக வவுனியா, குருமன்காடு கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் வவுனியா மாவட்ட மதநல்லிணக்க குழுவினரை சந்தித்து தீ விரவாத தா க்குதலின் பின்னர் மத நல்லிணக்கம் குறித்தும், தற்போது மத நிலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடிருந்தார். குறித்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் கருத்து கூற மறுத்திருந்தனர்.

 

வானிலையாளர்கள் புதிய ஏலியன் சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர்

August 17, 2019

தற்பொழுது வானிலையாளர்கள் புதிய எட்டு ஏலியன் சிக்னல்களை கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் இருந்து வெளிவரும் உயர் ஆற்றல் வானொலி சிக்னல் ஒன்றை கண்டுபிடித்திருந்தனர்.

சரியான அடையாளம் இல்லாமல் விண்வெளியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வானொலி சிக்னல்களை ஏலியன் சிக்னல் என தீர்மானித்துக் கொண்டனர். பின்னர் இந்த சிக்னல் பற்றி விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.

டசின் கணக்கான FRB  எனப்படும் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (Fast radio bursts) சிக்னல்களை கண்டறிந்துள்ளனர். இவை விண்வெளியில் கண்டறியப்பட்டுள்ள ஏலியன் சிக்னல்களாகும்.

ஒருமுறை இந்த சிக்னல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரே அண்டில் இரண்டு முறை இந்த ஏலியன் சிக்னல்களை வானிலையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எவ்வித காரணமின்றி விண்வெளியில் சுற்றித் திரியும் இந்த வானொலி சிக்னல்கள் அந்நிய கிரகத்தின் ஏலியன் செய்தியாக இருக்கலாம் என்று ஊகிக்கத் தொடங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவாக, தற்போது எட்டு புதிய FRB ஏலியன் சிக்னல்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய FRB ஏலியன் சிக்னல்கள் ஒருமுறை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஏழாவதாக கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் மூன்று முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் சுமார் 10முறை தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஏலியன் சிக்னல்களுக்கு பின்னால் உள்ள செய்திகளைக் கண்டறியும் புதிய முயற்சியில் தற்போது வானியலாளர்கள், மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். எட்டு FRB சிக்னல்கள் பற்றிய உண்மை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா சிறிலங்காவின் இராணுவத்தளபதியா?

August 17, 2019

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்ற குழப்பத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இருந்திருந்தார்.

எனினும் கோத்தபாயவுடனான சந்திப்பின் பின்னராக புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, அவர் ஓய்வுபெறும் வயதை எட்டியிருந்த போதும், சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக- இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே அவர்களாவர்.கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர்  ஜெனரல் சவேந்திர சில்வாவை,  இராணுவத் தளபதியாக நியமிக்க கோத்தபாய சிபார்சு செய்துள்ளதனையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

 

13’ஐ கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க விடமாட்டாராம் தேரர் கொந்தழிப்பு

August 17, 2019

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்க போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று கூறுகிறார்கள். இலங்கை எங்களது என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

நாம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகப்பெரிய தலையிடியாக அமைந்தது. இனவாத,மதவாத சட்டங்களை கொண்டு வந்தனர். பெரஹெரவில் யானை பிரச்சினைகளை ஏற்படுத்தினர். சோஃபா ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசியலமைப்பொன்றை வைத்துள்ளனர்.

தற்போது எங்களை பாதுகாக்க பார்க்கின்றனர். எங்களை எப்போதோ பௌத்தர்கள் பாதுகாத்து விட்டனர். எனினும் நாங்கள் இவ்வாறுதான் என அடுத்ததாக வர முயற்சி செய்யும் நபர்கள் எமது முன்னிலையில் உறுதிமொழி ஒன்றை வழங்க வேண்டும்.

கோத்தாபய எமது நண்பர். அவர் நாட்டை பாதுகாப்பதாக தெளிவாக கூற வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை உடனடியாக வௌியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள் வெட்டு

August 17, 2019

யாழ்.வல்வெட்டித்துறை  ஊாக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாரிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.

இதனிடையே சிறீலங்கா அரசினதும் அதன் படைகளினதும் ஆதரவுடன் வடபகுதியில் மட்டும் இயங்கிவரும் ஆவா குழு என்ற ஆயுதக்குழு வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும் சிறீலங்கா படையினரின் பிரசன்னத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமாக இயங்கி வருகின்றது. எனவே சிறீலங்கா படையினர் மீதான இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

August 17, 2019

நவதாராளவாதம் – ஒரு சுருக்கமான வரையறை 

சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான ஒரு சித்தாந்தத்தின் கீழ் வாழ்கிறோம் அதற்கு பெயர் என்ன என்று தெரியாமலே நம்மில் பலர் வாழ்கிறோம். நவதாராளவாதம் என்று சொன்னால் பலர் அதை கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். கேள்விப்பட்டவர்களுக்கும் அது பற்றி மேலதிகமாக எதுவும் தெரிவதில்லை.

நவதாராளவாதம் ஒரு சில பொருளாதார கொள்கைகளை உள்ளடக்குகிறது. கடந்த 35 வருடங்களாக இது மிகப்பரவலாக எங்கும் கையாளப்பட்டு வருகிறது. இச்சொல் பரவலாக உபயோகிக்கப்படாவிட்டாலும், அதன் விளைவுகளை உலகம் எங்கும் காணலாம். பணமுள்ளவர்கள் அருவருக்கத்தக்க செல்வந்தர்களாகவும் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் மாறிவருவது நவதாராளவாதத்தின் பெயரில் உலகெங்கும் நடக்கிறது.

‘தாராளவாதம்’ லிபரலிசம் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம். இச்சொல்லை அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும், சமய கொள்கைகளுக்கும் கூட சொல்லலாம். இக்கட்டுரையில் பேசப்படுவது பொருளாதார தாராளவாதம். நவதாராளவாதம் இதன் ஒரு அம்சமே.economic ruin தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) - ந.மாலதி

‘நவ’ என்பதால் ஒரு புதிய தாராளவாதத்தை பற்றி பேசுகிறோம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படியானால் பழைய தாராளவாதம் என்ன? அடம் சிமித் என்ற பொருளாதார நிபுணர் 1776 இல் ஐரோப்பாவில், ‘நாடுகளின் செல்வம்’ என்ற ஒரு பொருளாதார நூலை வெளியிட்டார். பொருளாதார விடயங்களில் அரசின் தலையீடுகளை, உற்பத்தி, விற்பனை, வரி போன்றவற்றை, குறைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வர்த்தக சுதந்திரம் (Free Trade) நாட்டின் பொருளாதாரத்ததை வளர்க்க சிறந்த வழி என்றார். இவ்வாறான கொள்கைகள் ‘தாராளவாதம்’ அதாவது கட்டுபாடுகள் அற்றவை எனப்பட்டது. பொருளாதார தாராளவாதத்தின் அம்சங்களாக தனிமனித சுதந்திரம், வர்த்தக சுதந்திரம், போட்டி என்பன வளர்க்கப்பட்டன. இதன் வளர்ச்சி முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டவும் வழிசெய்தது.

தொடர்ந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவில் பொருளாதார தாராளவாதம் கோலோச்சியது. 1930களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து கெயின்ஸ் என்பவர் பொருளாதார தாராளவாதமே முதலாளித்துவத்திற்கு சிறந்த கொள்கை என்ற அடம் சிமித்தின் கருத்தை மறுத்தார். எல்லோரும் வேலையில் ஈடுபடுவது முதலாளித்துவத்திற்கு அவசியம் என்பதால் அரசும் மத்திய வங்கியும் தலையிட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றார். இக்கருத்து அன்றைய சனாதிபதி ரூஸ்வெல்ட் இனது ஆட்சியில் தாக்கம் செலுத்தியது. இதனால் பலரின் வாழ்க்கையில் மேம்பாடுகள் உருவாகின. அரசு பொது நன்மையை முன்வைத்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் பிரபலமானது.

ஆனால் தொடர்ந்த 25 வருடகால முதலாளித்துவத்தின் பிரச்சனைகளும் அதனோடு சேர்ந்த சுருங்கி வரும் இலாபமும் கார்பரேட் முதலாளிகளை தராளவாதத்திற்கு புத்துயிர் கொடுக்க செய்தன. இதனாலேயே இதற்கு ‘நவ’ என்ற அடைமொழி சேர்கிறது. முதாலாளித்துவ பொருளாதாரம் உலமயமாக்கப்பட்ட இக்காலத்தில் நவதாராளவாதத்தை உலகளாவிய ரீதியில் இப்போது பார்க்கிறோம்.

நவதாராளவாதத்தின் முக்கிய அம்சங்களில் பின்வருவன அடங்கும்:

  1. சந்தையின் ஆட்சி: தனியார் தொழில் முயற்சிகளை சுதந்திரமாக எவ்விதமான அரசாங்க தடங்கல்களுமின்றி நடத்துவது. இதனால் எவ்வளவு மோசமான சமூக இழப்புக்கள் ஏற்பட்டாலும் அரசு தலையிடக்கூடாது.globalization தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) - ந.மாலதி

பின் வருவன இவற்றில் அடங்கும்: சர்வதேச அளவில் சந்தையை திறப்பதும், சர்வதேச நிதியை முதலீடு செய்வதில் உள்ள தடங்கல்களை ஒழிப்பதும், பல வருட போராட்டங்களால் பெற்றுக்கொண்ட தொழிலாளர் ஊதியத்தை குறைப்பதும், தொழிலாளர் உரிமைகளை ஒழிப்பதும், மற்றும் சந்தையில் விலையை கட்டுப்படுத்தாமல் விடுவதும். ஆக, முதலீடுகளும், பொருட்களும், சேவைகளும் முழுச்சுதந்திரத்துடன் இயங்குவது. இதுவே எமக்கு நன்மை தரும் என்று எங்களை நம்பச் செய்வதற்காக அவர்கள் ‘கட்டுப்படுத்தாத சந்தையே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த வழி. இதுவே இறுதியில் எல்லோருக்கும் நன்மை தரும்’ என்பார்கள்.

2. சமூக சேவைகளுக்கு செலவு செய்வதை குறைத்தல்: கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுக்கான செலவை குறைத்தல். வறியவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய சேவைகளை குறைத்தல். பொதுச்சேவைககளான வீதிகள், பாலங்கள், தண்ணீர் விநியோகம் போன்றவற்றை குறைத்தல். சொல்லப் போனால் அரசாங்கத்தின் பங்கை எங்கும் குறைத்தல் என்ற நோக்கில் செயற்படுதல். இருந்தாலும் வர்த்தகத்திற்கு சாதகமாக அரசு உதவுவதையும் வரிவிலக்குகள் கொடுப்பதையும் இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.

3.கட்டுப்பாடுகள் களைதல்: இலாபத்தை குறைக்கக் கூடிய அரச கட்டுப்பாடுகள் யாவற்றையும், சூழல் பாதுகாப்பு, தொழில் சூழலில் தொழிலாளர் பாதுகாப்பு உட்பட, குறைத்தல்.

4.தனியார்மயமாக்கல்: அரச சேவைகள், சொத்துக்கள், தொழில்கள் யாவற்றையும் தனியாருக்கு விற்றல். இதில்: வங்கிகள், முக்கியமான உற்பத்திகள், ரயில் பாதைகள், வீதிகளில் செலுத்தக்கூடிய சுங்கவரிகள், மின்சாரம், பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தண்ணீரும் கூட அடங்கும். திறமையாக செயற்பட இவை தேவை என்ற நோக்கில் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. திறமையாக செயற்படுவது தேவைதான். ஆனால் தனியார் மயமாக்கல் செல்வத்தை ஒருசிலரிடம் குவித்து பொதுமக்கள் தமது அடிப்டை தேவைகளையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

5.பொது நன்மை மற்றும் சமூகம் என்ற கோட்பாடுகளையே அழித்தல்: பதிலாக ‘தனிமனிதருடைய பொறுப்பு’ என்ற கோட்பாட்டை விதைத்தல். சமூகத்தில் மிகவும் வறிய மக்களை சுகாதாரம், கல்வி போன்றவற்றிகான தேவைகளை தாமாகவே தேட வேண்டும் என்று சொல்லுதல். அவர்களால் இது முடியாத போது அவர்களை சோம்பறிகள் என்று குற்றம் சுமத்துதல்.

உலகம் எங்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற, சக்திவாய்ந்த நிதி நிறுவனங்கள் நவதாராளவாதத்தை நாடுகள் மேல் திணிக்கின்றன. நவதாராளவாதத்தின் முதல் கட்டம் சிலி நாட்டில் 1973இல் சிஐஏ உதவியுடன் இடதுசாரி அலண்டே அரசை கவிழ்த்த பின்னர் ஆரம்பமாகியது. பின்னர் ஏனைய நாடுகளிலும் திணிக்கப்பட்டது. மெக்சிகோ நாட்டில் இதன் விளைவாக ஊதியம் 40-50 குறைந்தது. அதே நேரத்தில் விலைவாசி 80 வீதம் அதிகரித்தது. 20,000 சிறிய வர்த்தகங்கள் முடின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. இதையே ஒரு ஆய்வாளர் ‘நவதாராளவாதம் நவகாலனித்துவம்’ என்று விபரித்தார்.

தொடரும் ………

http://www.corpwatch.org/article.php?id=376

ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொழியாக்கம்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு -ரிசாத் பதியுதீன்

August 17, 2019

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த ரிசாத் பதியுதீன், யாழ்ப்பாணத்தில் 1,500 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதும், அவர்களில் 200 குடும்பங்களிற்கு மட்டுமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காணி உள்ளவர்களிற்கு காணிகளில் வீடமைப்பதுடன், காணியற்றவர்களிற்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை அமைக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள் கருத்து தெரிவித்தபோது, 1,500 பேர் மீளக்குடியமர பதிவு மேற்கொண்டிருந்தபோதும், அவர்களில் 507 பேர் மட்டுமே மீளக்குடியமர்ந்ததாக தெரிவித்தனர்.

அவர்களில் 207 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியவர்களிற்கு காணியில்லாததால் வீடு வழங்கவில்லையென்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ரிசாத், யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஏழரை ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்து, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வழங்கியுள்ளதாகவும், அதில் அடுக்குமாடி குடியிருப்பை அமைக்கலாம் என்றார். அதற்கு தனக்கு, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற அமைச்சே பணம் ஒதுக்கும் என்றும் தெரிவித்தார்.

எனினும், யாழ் முதல்வர் அதை சூசகமாக ஆட்சேபித்தார். அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைதான அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், யாழ் நகர மையத்தில் சுற்றுலா தேவைகளிற்காக நிலம் தேவையென்றார்.

இதேவேளை, நேற்று இரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது முகப்புத்தகத்தில், அடுக்கு மாடி குடியிருப்பிற்கு அபிவிருத்தி கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த வருடம் பிரதமர் ரணில் யாழ் வந்த சமயத்தில், இந்த வீட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ரிசாத் பதியுதீனுடன் முஸ்லிம் மக்களை சந்தித்த யாழ் முதல்வர் ஆர்னல்ட், அதில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

பொம்மைவெளியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, ரிசாத் பதியுதீனின் பின்னணியில் கொள்வனவு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. அந்த காணி, உறுதியில் சிக்கலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கும் அந்த காணி உரியது, வேறு சிலருக்கும் காணியில் பங்குண்டு என தெரிவித்து அண்மையில் அந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

August 17, 2019

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடலொன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமானப் படைத் தளத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விமான நிலையப் புனரமைப்பு பணிகளையும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிலையில் பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்றும் ​சேவைகள் ஆரம்பிப்பது தொடர்பில் நடைபெற்ற உயர் மட்டக் கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைய பலாலி விமான நிலையத்தையும் புனரமைத்து வருகின்றது. இதற்கான பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு விரைவில் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய விமான நிலையப் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதற்கான அலுவலகங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியளவில் விமான வேவைகளையும் ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலைய புனரமைப்பில் பொது மக்களின் எந்தவிதமான காணிகளும் சுவீகரிக்கப்பட மாட்டாது.

ஆனாலும் பாதை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த பாதையையும் பாவனைக்கு எப்படிக் கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆராயப்பட்டது. அதே நேரத்தில் இதற்கான மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ப்பட்டுள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.​

1...2,7022,7032,704...2,829Page 2,703 of 2,829
  • முகப்பு
  • செய்திகள்
  • ஆய்வுகள்
  • நிகழ்வுகள்
  • காணொளிகள்
  • வார இதழ்கள்
  • நேர்காணல்கள்
  • ஆசிரியர் தலையங்கம்
©
Go to mobile version