தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

நவதாராளவாதம் ஒரு சுருக்கமான வரையறை 

சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான ஒரு சித்தாந்தத்தின் கீழ் வாழ்கிறோம் அதற்கு பெயர் என்ன என்று தெரியாமலே நம்மில் பலர் வாழ்கிறோம். நவதாராளவாதம் என்று சொன்னால் பலர் அதை கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். கேள்விப்பட்டவர்களுக்கும் அது பற்றி மேலதிகமாக எதுவும் தெரிவதில்லை.

நவதாராளவாதம் ஒரு சில பொருளாதார கொள்கைகளை உள்ளடக்குகிறது. கடந்த 35 வருடங்களாக இது மிகப்பரவலாக எங்கும் கையாளப்பட்டு வருகிறது. இச்சொல் பரவலாக உபயோகிக்கப்படாவிட்டாலும், அதன் விளைவுகளை உலகம் எங்கும் காணலாம். பணமுள்ளவர்கள் அருவருக்கத்தக்க செல்வந்தர்களாகவும் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் மாறிவருவது நவதாராளவாதத்தின் பெயரில் உலகெங்கும் நடக்கிறது.

‘தாராளவாதம்’ லிபரலிசம் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம். இச்சொல்லை அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும், சமய கொள்கைகளுக்கும் கூட சொல்லலாம். இக்கட்டுரையில் பேசப்படுவது பொருளாதார தாராளவாதம். நவதாராளவாதம் இதன் ஒரு அம்சமே.economic ruin தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) - ந.மாலதி

‘நவ’ என்பதால் ஒரு புதிய தாராளவாதத்தை பற்றி பேசுகிறோம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படியானால் பழைய தாராளவாதம் என்ன? அடம் சிமித் என்ற பொருளாதார நிபுணர் 1776 இல் ஐரோப்பாவில், ‘நாடுகளின் செல்வம்’ என்ற ஒரு பொருளாதார நூலை வெளியிட்டார். பொருளாதார விடயங்களில் அரசின் தலையீடுகளை, உற்பத்தி, விற்பனை, வரி போன்றவற்றை, குறைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வர்த்தக சுதந்திரம் (Free Trade) நாட்டின் பொருளாதாரத்ததை வளர்க்க சிறந்த வழி என்றார். இவ்வாறான கொள்கைகள் ‘தாராளவாதம்’ அதாவது கட்டுபாடுகள் அற்றவை எனப்பட்டது. பொருளாதார தாராளவாதத்தின் அம்சங்களாக தனிமனித சுதந்திரம், வர்த்தக சுதந்திரம், போட்டி என்பன வளர்க்கப்பட்டன. இதன் வளர்ச்சி முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டவும் வழிசெய்தது.

தொடர்ந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவில் பொருளாதார தாராளவாதம் கோலோச்சியது. 1930களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து கெயின்ஸ் என்பவர் பொருளாதார தாராளவாதமே முதலாளித்துவத்திற்கு சிறந்த கொள்கை என்ற அடம் சிமித்தின் கருத்தை மறுத்தார். எல்லோரும் வேலையில் ஈடுபடுவது முதலாளித்துவத்திற்கு அவசியம் என்பதால் அரசும் மத்திய வங்கியும் தலையிட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றார். இக்கருத்து அன்றைய சனாதிபதி ரூஸ்வெல்ட் இனது ஆட்சியில் தாக்கம் செலுத்தியது. இதனால் பலரின் வாழ்க்கையில் மேம்பாடுகள் உருவாகின. அரசு பொது நன்மையை முன்வைத்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் பிரபலமானது.

ஆனால் தொடர்ந்த 25 வருடகால முதலாளித்துவத்தின் பிரச்சனைகளும் அதனோடு சேர்ந்த சுருங்கி வரும் இலாபமும் கார்பரேட் முதலாளிகளை தராளவாதத்திற்கு புத்துயிர் கொடுக்க செய்தன. இதனாலேயே இதற்கு ‘நவ’ என்ற அடைமொழி சேர்கிறது. முதாலாளித்துவ பொருளாதாரம் உலமயமாக்கப்பட்ட இக்காலத்தில் நவதாராளவாதத்தை உலகளாவிய ரீதியில் இப்போது பார்க்கிறோம்.

நவதாராளவாதத்தின் முக்கிய அம்சங்களில் பின்வருவன அடங்கும்:

  1. சந்தையின் ஆட்சி: தனியார் தொழில் முயற்சிகளை சுதந்திரமாக எவ்விதமான அரசாங்க தடங்கல்களுமின்றி நடத்துவது. இதனால் எவ்வளவு மோசமான சமூக இழப்புக்கள் ஏற்பட்டாலும் அரசு தலையிடக்கூடாது.globalization தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) - ந.மாலதி

பின் வருவன இவற்றில் அடங்கும்: சர்வதேச அளவில் சந்தையை திறப்பதும், சர்வதேச நிதியை முதலீடு செய்வதில் உள்ள தடங்கல்களை ஒழிப்பதும், பல வருட போராட்டங்களால் பெற்றுக்கொண்ட தொழிலாளர் ஊதியத்தை குறைப்பதும், தொழிலாளர் உரிமைகளை ஒழிப்பதும், மற்றும் சந்தையில் விலையை கட்டுப்படுத்தாமல் விடுவதும். ஆக, முதலீடுகளும், பொருட்களும், சேவைகளும் முழுச்சுதந்திரத்துடன் இயங்குவது. இதுவே எமக்கு நன்மை தரும் என்று எங்களை நம்பச் செய்வதற்காக அவர்கள் ‘கட்டுப்படுத்தாத சந்தையே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த வழி. இதுவே இறுதியில் எல்லோருக்கும் நன்மை தரும்’ என்பார்கள்.

2. சமூக சேவைகளுக்கு செலவு செய்வதை குறைத்தல்: கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுக்கான செலவை குறைத்தல். வறியவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய சேவைகளை குறைத்தல். பொதுச்சேவைககளான வீதிகள், பாலங்கள், தண்ணீர் விநியோகம் போன்றவற்றை குறைத்தல். சொல்லப் போனால் அரசாங்கத்தின் பங்கை எங்கும் குறைத்தல் என்ற நோக்கில் செயற்படுதல். இருந்தாலும் வர்த்தகத்திற்கு சாதகமாக அரசு உதவுவதையும் வரிவிலக்குகள் கொடுப்பதையும் இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.

3.கட்டுப்பாடுகள் களைதல்: இலாபத்தை குறைக்கக் கூடிய அரச கட்டுப்பாடுகள் யாவற்றையும், சூழல் பாதுகாப்பு, தொழில் சூழலில் தொழிலாளர் பாதுகாப்பு உட்பட, குறைத்தல்.

4.தனியார்மயமாக்கல்: அரச சேவைகள், சொத்துக்கள், தொழில்கள் யாவற்றையும் தனியாருக்கு விற்றல். இதில்: வங்கிகள், முக்கியமான உற்பத்திகள், ரயில் பாதைகள், வீதிகளில் செலுத்தக்கூடிய சுங்கவரிகள், மின்சாரம், பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தண்ணீரும் கூட அடங்கும். திறமையாக செயற்பட இவை தேவை என்ற நோக்கில் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. திறமையாக செயற்படுவது தேவைதான். ஆனால் தனியார் மயமாக்கல் செல்வத்தை ஒருசிலரிடம் குவித்து பொதுமக்கள் தமது அடிப்டை தேவைகளையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

5.பொது நன்மை மற்றும் சமூகம் என்ற கோட்பாடுகளையே அழித்தல்: பதிலாக ‘தனிமனிதருடைய பொறுப்பு’ என்ற கோட்பாட்டை விதைத்தல். சமூகத்தில் மிகவும் வறிய மக்களை சுகாதாரம், கல்வி போன்றவற்றிகான தேவைகளை தாமாகவே தேட வேண்டும் என்று சொல்லுதல். அவர்களால் இது முடியாத போது அவர்களை சோம்பறிகள் என்று குற்றம் சுமத்துதல்.

உலகம் எங்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற, சக்திவாய்ந்த நிதி நிறுவனங்கள் நவதாராளவாதத்தை நாடுகள் மேல் திணிக்கின்றன. நவதாராளவாதத்தின் முதல் கட்டம் சிலி நாட்டில் 1973இல் சிஐஏ உதவியுடன் இடதுசாரி அலண்டே அரசை கவிழ்த்த பின்னர் ஆரம்பமாகியது. பின்னர் ஏனைய நாடுகளிலும் திணிக்கப்பட்டது. மெக்சிகோ நாட்டில் இதன் விளைவாக ஊதியம் 40-50 குறைந்தது. அதே நேரத்தில் விலைவாசி 80 வீதம் அதிகரித்தது. 20,000 சிறிய வர்த்தகங்கள் முடின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. இதையே ஒரு ஆய்வாளர் ‘நவதாராளவாதம் நவகாலனித்துவம்’ என்று விபரித்தார்.

தொடரும் ………

http://www.corpwatch.org/article.php?id=376

ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொழியாக்கம்