Home செய்திகள் பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடலொன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமானப் படைத் தளத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விமான நிலையப் புனரமைப்பு பணிகளையும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிலையில் பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்றும் ​சேவைகள் ஆரம்பிப்பது தொடர்பில் நடைபெற்ற உயர் மட்டக் கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைய பலாலி விமான நிலையத்தையும் புனரமைத்து வருகின்றது. இதற்கான பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு விரைவில் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய விமான நிலையப் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அதற்கான அலுவலகங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியளவில் விமான வேவைகளையும் ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலைய புனரமைப்பில் பொது மக்களின் எந்தவிதமான காணிகளும் சுவீகரிக்கப்பட மாட்டாது.

ஆனாலும் பாதை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த பாதையையும் பாவனைக்கு எப்படிக் கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆராயப்பட்டது. அதே நேரத்தில் இதற்கான மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ப்பட்டுள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.​