Home Blog Page 26

உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் விசாரணை 7 ஆண்டுகளின் பின்னர் விழித்துள்ளதாக ஸ்ரீநேசன் சாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மைத்திரியின் அறியாமை, கோட்டாபயவின் தனித்தேவை மற்றும் ரணிலின் அதிகார இருப்புத்தேவை போன்றவற்றால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான உண்மைகள் கண்டறியப்படவில்லை” என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும் சுரேஷ் சாலேயின் நம்பிக்கையாளராகவும் இருந்த அஸாத் மௌலானா, நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் சனல்-4 இற்கு (Channel 4) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களை அளித்துள்ளார்.

அதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

அவை தொடர்பாக அக்கால ஜனாதிபதிகளான கோட்டாபய மற்றும் ரணில் ஆகியோர் அக்கறை காட்டவில்லை.

அவர்கள் தமது அதிகார இருப்பின் மீதுதான் கூடிய கவனம் செலுத்தினர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிப்பதைக் காண முடிகின்றது.

அந்த வகையில் ஆட்சி மாற்றத்தையும் அதிகார இருக்கையையும் பெற்றுக்கொள்வதற்கான தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் முன்மொழிவைக் கைவிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தலாம், நீதிச் சேவையின் உள்ளகப் பதவி உயர்வுகளைப் பாதிக்கலாம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கலாம் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள 9 பக்கங்களைக் கொண்ட விரிவான கடிதத்திலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய அரணாகும் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்புகள் நீதித்துறையின் தொடர்ச்சியைப் பேணவும், அதேநேரம் புதிய தகுதிவாய்ந்த நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்குள் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யவும் திட்டமிட்டே வகுக்கப்பட்டவையாகும்.

தகுந்த அரசியலமைப்பு ரீதியான நியாயங்கள் இன்றி இந்த விதிகளில் மாற்றம் செய்ய முயல்வது, நீதித்துறையில் தன்னிச்சையாகத் தலையிடும் செயலாகவே பார்க்கப்படும் என்று குறித்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதானது, உயர் நீதிமன்றங்களுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நீதிச் சேவையில் அடிமட்டத்திலிருந்து உழைத்து வரும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளைப் பாரியளவில் பாதிக்கும் என்று சங்கம் வாதிட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்திக் கொல்லப்பட்டமைக்கு சாட்சியமுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பிலும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

அங்கு சட்டத்தரணி உதய கம்மன்பிலவுடன் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது சேவை பெறுநரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் காணாமல் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானின் முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனவே, விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்குமூலங்களின் பிரதிகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டுமென சட்டம் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் பிரதிகளை இரகசிய உறையில் இட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

ஈரான் போரை நிறுத்தக் கோரும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் குறித்து ட்ரம்ப் விமர்சனம்

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த அர்த்தமற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனது அதிகாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான நோக்கம்.

இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மோசமான 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள். இத்தகைய நாட்டுப் பற்று இல்லாத செயலை யார் செய்வார்கள்? பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஜனநாயக கட்சியினர் என் மீதான வெறித்தனமான வெறுப்புணர்வால் உந்தப்பட்டுள்ளார்கள். இதில் எனக்கு வெற்றி கிடைப்பதைவிட நாடு தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புகிறார்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்த அந்த 4 உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கவனத்தை ஈர்க்கும் நாடகக்காரர்கள். தங்கள் செயலுக்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடங்​கியது. பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. எனினும் தற்​காப்பு தாக்​குதல் என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்​வப்​போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன.

இந்தச் சூழலில் ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிர​தி​நி​தி​கள் அவை​யில் ஐனநாயக கட்சி சார்​பில் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டது. இந்த தீர்மானத்​தின் மீது நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. ஆதர​வாக 215 எம்​பிக்​களும், எதி​ராக 208 எம்​பிக்​களும் வாக்​களித்​தனர். பெரும்​பான்மை எம்​.பி.க்​களின் ஆதர​வால் தீர்​மானம் நிறைவேற்றப்​பட்​டது.

இந்தத் தீர்​மானத்​தின் மீது செனட் அவை​யில் விரை​வில் வாக்கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. மொத்​த​முள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்​சிக்கு 53 எம்​பிக்​கள் உள்ளனர். ஜனநாயக கட்​சிக்கு 45 எம்​பிக்​கள் மட்​டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த சில எம்​பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கக்​கூடும் என்று கூறப்​படு​கிறது.

ஒரு​வேளை செனட் அவை​யில் தீர்​மானம் நிறைவேற்றப்பட்​டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதி​காரத்தைப் பயன்​படுத்தி தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுகாதார தொண்டர் உத்தியோகத்தர்கள், தங்களின் தற்காலிக நியமனங்களை உடனடியாக நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இன்று (05) வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன்பாகப் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்

 

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இத்தகையசூழலில் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதென காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.

அதற்கமைய தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமையும் காணி உரிமையாளர்களால் அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை காணி அதிகாரங்களை வடக்குக்கு வழங்கவே கூடாது!

வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை  மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை , காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.

இலங்கையில் இதுவரை ஆட்சிபுரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையை (பொலிஸ், காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையை பின்பற்றுவார் என நம்புகின்றோம்.

சிலவேளை காவல்துறை , காணி அதிகாரங்களை வழங்கினால் இந்நாடு பெடரல் ராஜ்யமாகும். அவ்வாறு நடந்தால் இதுவரைகாலமும் பாதுகாத்துவந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும். இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும். இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை.”  என்றார் சரத் வீரசேகர.

இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி குறித்து சீனத் தூதரகம் எச்சரிக்கை

இந்த ஆண்டு தொடக்கம் முதல், இலங்கையில் இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் சீனா மற்றும் இலங்கை இடையிலான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள சீனத் தூதரகம் இலங்கை  காவல் துறை பல இடங்களில் மேற்கொண்ட சோதனைகளில் சூதாட்டம் மற்றும் மோசடி மையங்கள் உடைக்கப்பட்டு, பல வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சில சீன குடிமக்களும் சட்டப்படி சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இத்தகைய குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பொது பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை மற்றும் நிதி அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

இசை நிகழ்ச்சிகளுக்கு தடை : காவல்துறை ஊடகப் பிரிவு விளக்கம்!

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் காவல்துறை தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை எனப் காவல்துறை ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில்,   விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களைப் பாடியமை மற்றும் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியமை என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்குப்   தடை விதித்துள்ளதாகச் சில சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தீர்வை விதிப்பை அகற்றுவதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம்

இலங்கைக்கான 12.5 சதவீத தீர்வை உள்ளடங்கலாக அமெரிக்காவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் தொடர்பான தீர்வைகள் குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட தீர்வை நிர்ணயம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, சாதகமானதொரு வர்த்தக உடன்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பின்னணியிலேயே இந்தத் தீர்வை விதிப்பு நிகழ்ந்திருப்பதாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏனைய நாடுகள் 10 சதவீதம் எனும் குறைவான தீர்வை வீதத்தை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உயர்வான தீர்வை நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்று அவ்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதித்துறைக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகும். இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிகள் முறையே 7 சதவீதமாகவும், 6 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் ஆளுமை சார்ந்த தரங்களைப் பேணுவதிலும், நெறிமுறை சார்ந்த வணிகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதிலும் இலங்கை பொறுப்புவாய்ந்த மூலப்பொருள் விநியோகத் தளமாகத் திகழ்கிறது’ எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தீர்வை விதிப்பின் அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கும், இலங்கையின் நியாயப்பாடுகளை எடுத்துரைப்பதற்கும் அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியறுத்தியுள்ள வர்த்தக சம்மேளனம், ‘முன்மொழியப்பட்ட தீர்வையில் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், இறுதியில் அதனை முழுமையாக நீக்குவதற்குமான சகல முயற்சிகளையும் இலங்கை முன்னெடுக்கவேண்டும்’ எனக் கோரியுள்ளது.