இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் காவல்துறை தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை எனப் காவல்துறை ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களைப் பாடியமை மற்றும் அது தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியமை என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடுவதற்குப் தடை விதித்துள்ளதாகச் சில சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



