Home Blog Page 27

உலக சுற்றாடல் தினம் இன்று…!

சுற்றுச்சூழல் தினம் இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் என்ற சமகால மற்றும் மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

அதன்படி, இன்று அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், அவசர பருவநிலை நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவது வலியுறுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே தற்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் என்பதை ஒட்டுமொத்த உலக மக்களும் கண்டறிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு நிலையங்களுக்கு கடுமையாகும் சட்டம்

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டிய பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதுடன், பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு பாதுகாவலர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதியோர் இல்லங்களில் சில நிறுவனங்கள் மிகச் சிறந்த மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்தபோதிலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு மற்றும் தேவையான ஊழியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய தரமற்ற நிறுவனங்களை எதிர்காலத்தில் நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதுடன், அரசாங்கத்தினால் நேரடியாகப் பராமரிக்கப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 3 ஆகும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கலைஞர்கள் , ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று அதே சட்டத்தை மிக மோசமான முறையில் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த இரட்டை வேட அரசியலும், இனவாதத்தைக் கிளறிவிட்டு அரசியல் இலாபம் தேடும் சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி வன்மையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, மக்கள் போராட்ட முன்னணியின் ஒருங்கினைப்பாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகப் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தச் சட்டத்தை ஒழிக்கப் போவதில்லை என்றும், புதிய சட்டம் வரும் வரை அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கமைய, கனேஷ் குமார் எனும் கலைஞர், ஒரு பாடலைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஒரு கலைஞனைத் தண்டிப்பதற்கான போலியான முத்திரையாகும்.

தங்கள் தேர்தல் பிரசாரங்களின் போது, அதே போன்ற பாடல்களைப் பாடி, பிரபாகரன் மற்றும் ஈழம் குறித்துப் பேசியவர்களால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததென்றால், இன்று மற்றுமொருவர் பாடும்போது அது பயங்கரவாதமாக மாறுகிறது. இதுவே இந்த அரசாங்கத்தின் தார்மீகமற்ற இரட்டை வேடமாகும். அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு, அரசாங்கம் துணை போவது கண்டிக்கத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெசாக் கூடு உடைப்பு சம்பவம், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து செய்த காரியமல்ல் இது சில இனவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகும். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடச் சிலர் துடிக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் சங்கமே இந்தப் பழிசொற்களைப் பகிரங்கமாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் பௌத்தர்களும் உள்ளனர் என்பதை மறந்த சில குழுக்கள், பௌத்த தர்மத்தின் பெயரால் இனவாதத்தை விதைக்கின்றனர். யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தைப் போலவே, இன்றும் இவ்வாறான வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்குப் பலியாக வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விவகாரங்களில் புலனாய்வுத் துறையினரின் பங்கு குறித்து இன்று பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசாங்கம் கவனத்தைத் திசைதிருப்ப இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாள்கிறது.

கடந்த காலங்களில் இனவாதத்தைக் கிளறிவிட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்று அந்தப் பழைய அரசியலையே பின்பற்றுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான தரப்பினர் ஒருவித இரகசியப் புரிதலுடன் செயற்படுவதால், மத்திய வங்கி மோசடி அல்லது ஏனைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எவரும் பேசுவதில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டமாகச் செயற்படுவதால், அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட வழிவகுக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. மக்கள் போராட்டத்தின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றவும், இனவாதத்தை நிராகரிக்கும் உண்மையான மக்கள் சார்ந்து இயங்கும் எதிர்க்கட்சியை உருவாக்கவும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.

பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரிடம் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக தன்னுயிரை துறந்த பொன் சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று நாளைய தினம் (05) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக உத்தியோகபூர்வமாக உணர்வுவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உணர்வாளர்கள், உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் உள்ளிட்டோர் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் நிலையில் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சமூட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டனர்.

தற்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நினைவேந்தல்களுக்கு தடையில்லை என அரசாங்கம் சொல்லளவில் தெரிவித்து வருகின்ற போதும் செயலளவில் நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்காத போக்கே காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமலையில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் குறித்து விசேட கலந்துரையாடல்

யுத்தக் காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டக் காணிகளை, மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (04) குறித்த கலந்துலையாடல் நடைபெற்றது.

இதன்போது, இதுவரை காலம் விமானப்படை மற்றும் இராணுவத்தினரால் மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சீனக்குடா கரமலையூற்றுப் பகுதியின் காணிகள், கடற்படையினரால் மூடப்பட்டுள்ள நிலாவெளி கோபாலபுரம் வீதி மற்றும் நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் விஜயத்தின் பின்னர், இப்பிரச்சினைகள் தொடர்பாக பல சாதகமான தீர்மானங்களை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச் சம்பவங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தகவல் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், நாடெங்கிலும் உள்ள இணையப் பயனாளர்களை இலக்கு வைத்து இந்த அதிநவீன இணையத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின்  பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல இக்குற்றங்கள் குறித்த புள்ளிகளை வெளியிட்டுள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த மோசடிச் சம்பவங்களில் 14 வழக்குகள் நேரடியாகச் சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது இணையவழி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சிறுவர்கள் அதிகளவில் ஆளாகி வருவதைக் காட்டும் பாரிய கவலையைத் தோற்றுவித்துள்ளது.

உள்நாட்டில் பயனர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சமூக ஊடக அடிப்படையிலான இணையத் தாக்குதல்களின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டும் வகையில், இதுவரை 40 வட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகப் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இணையவழி நிதிப் பரிமாற்றங்களின் போது பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் இணையதளங்கள் அல்லது லிங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அவை உண்மை தன்மையுடையதா என்பதைத் தீர ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போலி இணையப் பக்கங்களில் தங்களின் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதையோ அல்லது ஒன்லைன் பணச் செலுத்தல்களை மேற்கொள்வதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் டிஜிட்டல் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துமாறும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் பாதுகாப்புப் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று (04)இடம்பெற்றது.

கல்முனை  மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்வராக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய அரசாங்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களுக்குள் தலையிட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கி நகர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றஞ்சுமத்தினார்.

பெலவத்தையின் நேரடித் தலையீட்டின் கீழ் மாகாணசபைகளும், பிரதேச செயலகங்களும் சிதைக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தைச் சுருக்கி, சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்ல முயற்சிக்கிறது. மாகாண சபைத் தேர்தலைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. தேர்தல் மேடைகளிலும் தங்களது கொள்கைப் பிரகடனத்திலும் குறிப்பிட்ட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது இரண்டு வருடங்களாகியும் தேர்தலை நடத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

ஜனநாயகக் கட்டமைப்பில் தேர்தல் நடத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதற்குத் தேவையான சீர்திருத்தங்களையோ அல்லது ஆதரவையோ பாராளுமன்றத்தில் வழங்குவதாகத் தெரியவில்லை. பல்வேறு சாட்டுக்களைக் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தேர்தல்களை நடத்தாதது மட்டுமன்றி, பெலவத்தையின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் காணப்படுகிறது. இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று எதுவும் இல்லை. பெலவத்தையின் சக்திகள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குள் நுழைந்து அவற்றின் சுயாதீனத் தன்மையை அழித்து வருகின்றன.

‘நிலக்கரி ஆணைக்குழுவில் இருந்து இன்னும் சில மாதங்களில் நாங்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவோம்’ என்று அவர்களே கூறுகிறார்கள். இதில் எங்கே சுயாதீனத் தன்மை இருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

அதேபோல், உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். மேல் நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆவது திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை மேல் நீதிமன்றத்தில் 12 இல் இருந்து 20 ஆகவும், உச்ச நீதிமன்றத்தில் 11 இல் இருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்த அமைப்பிற்குள் தலையிட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு சட்டத்தரணிகள் சங்கமும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஏன் இந்த சுயாதீன நிறுவனங்களுக்குள் தலையிடுகிறார்கள்? இவர்களுக்கு சுயாதீன நிறுவனங்களை வைத்திருக்க விருப்பமில்லை. அனைத்தையும் பெலவத்தையின் கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்தவே பார்க்கிறார்கள்.

இன்று மாகாண சபைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. ஜனாதிபதியின் ஆளுநர்களே இருக்கிறார்கள். அவர்கள் பெயரளவில் மட்டுமே ஆளுநர்களாக இருக்கிறார்கள். மாகாண சபைகள் முழுமையாகப் பெலவத்தையினால் நியமிக்கப்பட்ட நபர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.

இன்று ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் பெலவத்தையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆளுநர்களை விடவும் இந்த பெலவத்தையின் பிரதிநிதிகளுக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக அழித்து, ஒரு சர்வாதிகாரப் பயணத்தை நோக்கியே இவர்கள் நகர்கிறார்கள். இந்தச் செயல்களுக்கு எதிராக நாம் மக்களை அணிதிரட்டுவோம், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மாகாண சபைத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை வழங்கி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தலைமைத்துவத்தைச் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்றார்.

கியூபா போரில் அமெரிக்காவுக்கு உள்ள தெரிவுகள் என்ன?-தமிழில்: ஆர்தீகன்

கரீபியன் பகுதியில் போரின் வாசனையை வீசத் தொடங்கியுள்ளது. வாஷிங்டன் கியூபாவைச் சுற்றி தனது பொரு ளாதாரத் தடைகளை இறுக்கி, அப்பகுதிக்குக் கூடுதல் இராணுவ படைக்கலங்களை  அனுப்பி, மேலும் மேலும் இறுதி எச்சரிக்கை மொழியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், ஊடகங்களும் கொள்கை வகுப்பு வட்டாரங்களும் அந்தத் தீவில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டிற்கான சாத்தியக்கூறு குறித்து தீவிரமாக விவாதிக்கத் தொடங்கியுள் ளன. ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளின் அலை மற்றும் கியூபாவின் கடற்கரைக்கு அப்பால் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவின் பிர சன்னம் ஆகியவை மட்டுமல்லாமல், பதற்றத்தை அதிகரிப் பதற்கான பரந்த தர்க்கமும் இதற்கான தூண்டுதலாக அமைந்துள்ளது: எரிசக்தித் தடை, ‘ட்ரோன் அச்சுறுத்தல்’ என்று சொல்லப் படுவது பற்றிய சொல்லாடல்கள், மற்றும் ட்றம்ப் நிர்வாகம் தனது கடுமையான வெளியுறவுக் கொள்கையின் அடுத்த இலக்காக கியூபாவைக் கருதுகிறது என்ற வளர்ந்து வரும் கருத்து ஆகியவை இதில் அடங்கும்.
அமெரிக்க நிர்வாகம் ஒரு முழு அளவிலான இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறை அதிகாரப்பூர் வமாக மறுத்தாலும், நெருக்கடியின் போக்கே அத்தகைய ஒரு சூழ்நிலையை நிராகரிப்பதை கடினமாக்குகிறது. இந்த மோதல் ஒரு இராணுவக் கட்டத்திற்குள் நுழைந்தால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? வாஷிங்டன் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய ‘துல்லியத் தாக்குதலுடன்’ தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளுமா?, கியூபாவின் உள்கட்டமைப்பை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலைத் தொடங்குமா?, அல்லது கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார நெருக்கடி மூலம் தனது நோக்கங்களை அடைய முயற்சிக்குமா? கியூபாவிற்கு எதிரான ஒரு சாத்தியமான அமெரிக்க நடவடிக்கையின் முக்கிய சாத்தியக்கூறுகள், அவற்றின் இராணுவக் காரணங்கள் மற்றும் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வோம்.
2026-ல், அமெரிக்க-கியூபா உறவுகள் பல தசாப்தங்க ளில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளன. ஜனவரி 29, 2026 அன்று அமெரிக்க ஜனாதிபதியால் கையெ ழுத்திடப்பட்ட, “கியூபா அரசாங்கத்தால் ஏற்படும் அச்சுறுத் தல்களை எதிர்கொள்ளுதல்” என்ற தலைப்பிலான ஒரு நிர்வாக ஆணை, ஹவானாவின் கொள்கைகளை அமெரிக் காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக வகைப் படுத்தியது. கியூபா, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளின் பட்டியலில் நீடிக்கிறது, இது அதனை சர்வதேச நிதி அமைப்பின் பெரும்பகுதியிலிருந்து துண்டித்து, வெளிநாட்டு முதலீடுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சூழலில், ஏறக்குறைய எந்தவொரு சாத்தியக்கூறும் சாத்தியமா கும்.
வாஷிங்டனின் கண்ணோட்டத்தில், ஒரு இராணு வத் தீர்வுக்கான அடித்தளம் ஏற்கனவே உள்ளது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவின் தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் டோனோவன், காங்கிரஸிடம் அளித்த சாட்சியத்தின்படி, ஒருங்கிணைந்த பிராந்தியப் படைகள், கடற்படை, வான்வழி கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகளைப் பயன்படுத்தி போதைப்பொருள்-பயங்கரவாத வலையமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்கின்றன. குவாண்ட நாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம், இப்பகுதியில் படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாகத் தொடர்கிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பிலிருந்தும் கூடுதல் துருப்புக்கள் அனுப்பப் படலாம். பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்களும், குறைந்தது 10,000 அமெரிக்கப் பணியாளர்களும் தற்போது கரீபியன் பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.
கியூபாவைப் பொறுத்தவரை, அது சுமார் 50,000 ஆயுதமேந்திய வீரர்களைக் கொண்ட ஆயுதப் படைகளைப் பராமரிக்கிறது. அந்நாடு 200 டாங்கிகள் வரையிலும், பல்வேறு வகையான 500க்கும் மேற்பட்ட பீரங்கி அமைப்புகளையும், ஒரு சிறிய கடற்படையையும், ஒரு விமானப்படையையும், மற்றும் வான் பாதுகாப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மிக முக்கியமாக, கியூபத் தலைமை, முழுமையான குடிமக் கள் அணிதிரட்டல், இராணுவத்தைப் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புடன் ஒருங்கிணைத்தல், மற்றும் ஒரு நீண்டகால சமச்சீரற்ற தற்காப்பு நடவடிக்கைக்குத் தயாராகு தல் ஆகியவற்றை உள்ளடக்கிய “முழு மக்கள் போர்” (Guerra de Todo el Pueblo) என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து பெரிதும் நம்பியுள்ளது.
சூழ்நிலை 1: வரையறுக்கப்பட்ட ‘துல்லியமான’ நடவடிக்கை
முதலில் நினைவுக்கு வரும் சூழ்நிலையானது, வெனிசுலாவு க்கு எதிரான முந்தைய அமெரிக்க நடவடிக்கைகளை ஒத் திருக்கிறது: முக்கிய தலைவர்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், மற்றும் தகவல் தொடர்பு உள்கட்ட மைப்புகளைச் செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு வரையறுக்கப்பட்ட ‘துல்லியமான’ நட வடிக்கை. அத்தகைய நடவடிக்கையில், அமெரிக்காவின் நான்காவது கடற்படைப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோமஹாக் குரூஸ் ஏவுகணைத் தாக்குதல்கள், MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், மற்றும் சிறப்பு அதிரடிப் படைகளின் திடீர்த் தாக்குதல்கள் ஆகியவை பெரும்பாலும் அடங்கும்.
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? குவாண்ட நாமோ வளைகுடா தளத்திற்கு எதிராக கியூபாவின் இராணு வம் சமச்சீரற்ற முறையில் பதிலடி கொடுப்பதற்கான சாத்தியக்கூறும், பலரும் ‘பாதுகாப்பு நடவடிக்கை’ என்று கருதும் இதற்கு பரந்த சர்வதேசக் கண்டனம் எழுவதும் மிகப்பெரிய கவலையாக இருக்கும். கோட்பாட்டளவில், ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதல் கூட மிகப் பெரிய மோதலாக உருவெடுக்கக்கூடும். இது வாஷிங்டனைக் கூடுதல் துருப்புக் களையும் வளங்களையும் ஈடுபடுத்த நிர்பந்திக்கும் அதே வேளையில், குவாண்டநாமோவைச் சுற்றியுள்ள மற்றும் கியூபாவின் எல்லைக்குள் ஆழமாக நடக்கும் தரைவழிப் போர்களில் சிக்க வைத்துவிடும்.
அந்த ஆபத்து உண்மையானது. ஆனால், ஒரு இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை குறைந்த பாதிப்புகளுடன் அதன் நோக்கங்களை அடையவும் வாய்ப்புள்ளது – குறிப்பாக, வெனிசுலாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் பெற்றதாகக் கூறப்படும் அதே அளவிலான செயற்பாட்டு வெற்றியை இங்கும் பெற்றால் இது சாத்தியமாகும்.
சூழ்நிலை 2: முழு அளவிலான வான்வழித் தாக்குதல்
இரண்டாவது சூழ்நிலையானது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களை மிகவும் ஒத்திருக்கலாம். கியூபாவின் வான் பாதுகாப்புகளை ஒடுக்கு வதற்கும், இராணுவ உள்கட்டமைப்பை அழிப்பதற்கும், அந் நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அரசியல் தலைமையின் மன உறுதியைக் குலைப்பதற்குமான ஒரு பெரிய அளவி லான வான்வழி நடவடிக்கை.
அத்தகைய ஒரு தாக்குதலில், JASSM குரூஸ் ஏவுக ணைகள் மற்றும் JDAM துல்லியமாக வழிநடத்தப்படும் குண்டு களுடன் ஆயுதம் ஏந்திய B-1B, B-2, மற்றும் B-52H உள்ளிட்ட மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத் தப்பட வாய்ப்புள்ளது. விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கும் F/A-18E/F சூப்பர் ஹார்னெட்கள் மற்றும் F-35C போர் விமானங்களுடன், விமானம் தாங்கி கப்பல் சார்ந்த விமானப் போக்குவரத்தும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். மின்னணுப் போர் மற்றும் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை ஒடுக்குதல் ஆகியவை EA-18G கிரௌலர் விமானங்களால் கையாளப்படும்.
கியூபா எவ்வாறு பதிலளிக்க முடியும்? தீவின் வான் பாதுகாப்பு வலையமைப்பு, S-75 மற்றும் S-125 போன்ற பழமையான சோவியத் கால அமைப்புகளையே பெருமள வில் இன்னும் கொண்டுள்ளது; இருப்பினும், ஓரளவிற்கு நவீனமயமாக்கல் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. கையடக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் நிச்சயமாக விரிவாகப் பயன்படுத்தப்படும். தொடர்ச்சியான மின்னணு மற்றும் வான்வழித் தாக்குதல்களின் கீழ், கியூபப் படைகளால் ஒருங்கிணைப்பையும், நிகழ்நேர இலக்குப் பகிர்வையும் பராமரிக்க முடியுமா என்பதே முக்கியக் கேள்வியாக இருக்கும். அந்தச் சூழ்நிலைகளில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு எதிராக வெற்றிகரமாகத் தற்காத்துக் கொள் வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு – ஆனால் முற்றிலும் இல்லாமல் போய்விடாது.
இருப்பினும், வாஷிங்டனுக்கு இந்தத் தேர்வு அவ் வளவு கவர்ச்சிகரமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைதியான இரகசியத் தாக்குதலைப் போலல்லாமல், ஒரு பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலை மறைப்பது சாத்தியமற்றது; மேலும் அது நிச்சயமாக மிகவும் தீவிரமான உலகளாவிய எதிர்ப்பைத் தூண்டும்.
சூழ்நிலை 3: கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார நெரிப்பு
மூன்றாவது சூழ்நிலை மிக நீண்ட காலத்திற்கு நீடிக்கும்: நேரடி இராணுவத் தலையீடு இல்லாமல் அரசியல் மாற்றத்தைக் கட்டாயப்படுத்தும் நோக்கில், கடற்படை முற்றுகையுடன் பொருளாதார அழுத்தமும் இணைக்கப்படும்.
நடைமுறையில், இந்த உத்தி ஏற்கெனவே தென்படுகின்றன. தீவிற்கு எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை வழங்க முயற்சிக்கும் கப்பல்களை இடைமறித்துத் தடுப்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்காவின் பார்வையில், இந்த அணுகுமுறை விரும் பத்தக்கது, ஏனெனில் இதற்குப் பெரிய அளவிலான படைக் குவிப்பு தேவையில்லை மற்றும் விரைவான பதற்றம் அதிகரிப்பதற்கான அபாயங்களும் குறைவு.
பிரச்சனை என்னவென்றால், கியூபா பல தசாப்தங்க ளாக நடைமுறை முற்றுகையை ஒத்த சூழ்நிலைகளில் இயங்கி வருகிறது. கூடுதல் அழுத்தம் மட்டும் அர்த்தமுள்ள அரசியல் மாற்றத்தைத் தூண்டும் என்பது உறுதியாகத் தெரியவில்லை, அதாவது வாஷிங்டன் தனது மூலோபாய நோக்கங்களை அடைவதில் தோல்வியடையக்கூடும்.
மற்ற சாத்தியமான சூழ்நிலைகள்
மற்ற சாத்தியக்கூறுகளையும் நிராகரிக்க முடியாது. உதார ணமாக, தீவில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியால் நியாயப்படுத்தப்படும் ‘மனிதாபிமானத் தலையீடு’ என்று அழைக்கப்படுவது. பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா.வின் ஆணையை வாஷிங்டனால் எப்படியாவது பெற முடிந்தால், மனிதாபிமான உதவி என்ற பெயரில் அமெரிக்கப் படைகள் அங்கு வரக்கூடும்.
ஆனால், கியூபா மக்கள் எவ்வாறு எதிர்வினை யாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பல விஷயங்கள் அமையும். பொதுமக்கள் அரசாங்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டால், ஒரு மனிதாபிமானப் பணியானது கொரில்லாப் படைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சி எதிர்ப் புப் பிரச்சாரமாக விரைவாக மாறி, ஒரு பரந்த பதற்ற அதிகரிப்பைத் தூண்டக்கூடும்.
முக்கிய மாறிகளில் ஒன்றாக சர்வதேச சமூகத்தின் – குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் – நிலைப்பாடு உள்ளது. கோட்பாட்டளவில், கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு பரந்த அமெரிக்க எதிர்ப்பு உணர்வைத் தூண்டக்கூடும். மேலும், தீவில் ஒரு நீண்டகால இராணுவ நடவடிக்கையில் வாஷிங்டன் சிக்கிக்கொண்டால், அது நிச்சயமாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகவே ஒரு வலுவான உள்நாட்டு எதிர்ப்பை உருவாக்கும்.
ஈரான் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அமெரிக்காவின் வாசலிலேயே மற்றொரு பெரிய புவிசார் அரசியல் தலைவலியை டிரம்ப் விரும்பமாட்டார். அவருக்குத் தேவையானது ஒரு விரைவான, தெளிவான, மற்றும் இரத் தம் சிந்தாத தீர்வு. அதனால், ஒரு அடையாளபூர்வமான இராஜதந்திரத் தீர்வு அல்லது ஒரு குறுகிய, கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகியவையே மிகவும் சாத்தியமான விளைவாக அமைகின்றன.தற்போதைக்கு, வரைபடங்களையும் நேரத்தையும் கண்காணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
நன்றி: ரஸ்ய ருடே

செம்மணி மனிதப் புதைகுழி: 69 நாட்களில் 272 எலும்புக்கூடுகள் மீட்பு

இலங்கையில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 272 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெற்ற 15ஆவது நாளான நேற்று (03) புதன்கிழமை குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம்  தெரிவித்திருந்தார்.

“இன்று ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆறு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதுவரை 275 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டத்தில் இதுவரை 34 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டு எலும்புக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்குகின்றன.”

மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளமையை தொடர்ந்து, ஏழு மாதங்களின் பின்னர் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் கடந்த  ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகின.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகின.

ஜூன் முதலாம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து ஒரு எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது, ஜூன் 2 ஆம் திகதி மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து  எடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு எலும்புக்கூடு மற்றுமொரு எலும்புக்கூட்டின் மீது காணப்பட்டதாக அகழ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகின.

மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, கண்டெடுக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களில், குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.