நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது தெரிந்ததே.
இதற்கு பலரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த அறிவிப்பை பகிரங்கமாக விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவில் ”முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவிடம் இந்த கடைசித் தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க ணேவண்டும் என கோர விரும்புகிறேன்.
சுதந்திரதின வைபவத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படும் கடந்த நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம் மாற்றிவிடக் கூடாது என நான் விரும்புகின்றேன். தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான பாடல் அல்ல.
அது தமிழ் பேசும் இலங்கையர்களின் அடையாளம். இதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு கோத்தபாயா ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படியும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையின் பேரிலும் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றுதல் உட்பட சிறு குற்றம் புரிந்தவர்களே விடுவிக்கப்படவுள்ளனர் என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை, கடுமையான பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரின வரலாற்றில் நுண்ணுயிர்கள் பேராதிக்கம் செலுத்தி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.இந் நுண்ணுயிர்கள் தாம் அனைத்து உயிரினங்களின் இருப்பிற்கு ஆதாரமாகவும், சிலவேளைகளில் அவ்வுயிர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் வைரசுக்களின் அமைப்பும் செயற்படு திறனும் மனித குலத்தை நீண்ட நெடுங்காலமாக ஆட்டம் காண வைத்து வருவது கண்கூடு.
கடந்த எட்டு நூற்றாண்டுகளில் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் வைரசுக்களின் தாக்கத்தால் ஏற்பட்டவை என கணக்கிடப்படுகிறது. இவற்றுள், ஸ்பானிய காய்ச்சல், ஈரலழற்சி(செங்கமாரி/hepatitis), சின்னமுத்து(Measles), சின்னம்மை(smallpox), எய்ட்ஸ், பல்வேறு வகையான இன்பு(f)ளுவென்சா (influenza) காய்ச்சல் என்பன கடந்த காலங்களில் சிறு மற்றும் பெரும் எண்ணிக்கைகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.
கொரோனா வைரசுக்கள்
கொரோனா வைரசுக்கள் 1960களில் கோழிகளில் நோயை ஏற்படுத்திய போது இனங்காணப்பட்டன. கொரோனா வைரசுக்களின் மகுடம்(crown) போன்ற தோற்றம் இப்பெயருக்கான காரணமாக அமைந்தது.
கடந்த காலங்களில் இரு வெவ்வேறு கொரோனா வைரசுக்கள் மனிதரில் சாதாரண சளிக்காய்ச்சலை ஏற்படுத்துவதும் அறியப்பட்டது. எனினும் மனிதர்கள் மீதான புதிய கொரோனா வைரசுகளின் தாக்கம் கடந்த 2003 முதல் அச்சுறுத்தும் வகையில் குறுகிய காலத்துள் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன் சடுதியான மரணங்களையும் மருத்துவ விஞ்ஞானத்துறைக்கு சவாலாகவும் விளங்கி வருகின்றன.
இவற்றுள் துரித கடுஞ் சுவாச நோய் (Severe Acute Respiratory Syndrome /SARS), மத்திய கிழக்கு சுவாச நோய் (Middle East Respiratory Syndromeல்/ MERS) என்பன 2003 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் 2019 டிசம்பரில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரசு ஒரு மாத காலத்தில் 27 நாடுகளுக்கு பரவியுள்ளதுடன் 11,000 இற்கு மேற்பட்டவர்களில் உறுதிப்படுத்தப்பட்டு 250இற்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டு உலகமெங்கும் மக்களின் பேசு பொருளாகி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
புதிய கொரோனா வைரசின் பரவும் முறையும்நோய்த் தாக்கமும்
புதிய வைரசு ஏனைய கொரோனா வைரசுக்கள் போலவே தோற்றமளித்தாலும் அதன் வெளிப்புறமுள்ள உயிர்க் கலங்களைத் தாக்கும் புரத கூறுகளில் சிறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளமையே இதனை புதிய வைரசாக இனங்காட்டி நிற்கிறது.
இவ் வைரசு தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் முன்னர் இனங்காணப்பட்ட SARS மற்றும் MERS கொரோனா வைரசுகளின் அமைப்புடன் ஒத்துப் போகின்ற போதிலும், வௌவ்வால்களில் இருந்து பரவிய SARS வைரசுடன் அதிக தொடர்புடையதாக கருதப்படுகிறது.
இவ்வைரசு வௌவ்வால் போன்ற ஏதேனும் விலங்கிலிருந்து, ஏனைய விலங்குகளுக்கும் , அவ்விலங்குகளை கையாளும் அல்லது உண்ணும் மனிதருக்கும் பரவியிருக்கக் கூடிய வாய்ப்புகளையே இதுவரையான நோய் பரம்பலியல் ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. இவ்வைரசு விலங்கிலும் மனிதர்களிடையேயும் பரவும். நோய் ஏற்படுத்தும் மற்றும் தாக்கம் உண்டு பண்ணும் முறைகளில் SARS வைரசையே ஒத்ததாக காணப்பட்டாலும், இதன் வீரியம் சற்று அதிகமானதாக இருக்கலாம் என்பது இதன் பரவல் வேகத்தில் இருந்து கணிக்கப்படுகிறது.
புதிய கொரோனா வைரசுக்கள் விலங்குகளின் தொடுகை, விலங்கு உணவுகளை உட்கொள்ளல் என்பவற்றின் மூலமும் தொற்றுக்கு உள்ளானவர்களின் சுவாச துணிக்கைகள் மூலமாகவும் பரவுவதாக இனங்காணப்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்ட ஓர் மனிதருடனான தொடுகை மற்றும் அவரிடமிருந்து சுமார் 6 அடி சுற்று வட்டத்தினுள்ளான காற்றுத் துணிக்கைகளை சுவாசித்தல் என்பவற்றின் மூலம் இவ்வைரசுக்கள் இன்னொரு நபரை தொற்றலாம் என அறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றும் வைரசுக்கள் தொற்று ஏற்பட்டவரின் சுவாச குழாய்களிலும் நூரையீரலிலும் பல்கிப் பெருகி நூரையீரலின் கலங்களைத் தாக்கி அவற்றின் உயிர்வளி(ஓட்ஸிசன்) பரிமாற்ற திறனை பாதிப்பதன் மூலம் மூச்சுத் திணறலையும் பிற உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளையும் பாதித்து இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறி
ஏனைய சுவாச தொற்றுக்கள் போலவே இந்நோயும் தடிமன், இருமல், காய்ச்சல், என்பவற்றுடன் ஆரம்பித்து மூச்சுத் திணறல் ஏற்படும் போது தீவிரமடைகிறது.
புதிய கொரோனா வைரசு நோய் பரம்பல்
புதிய கொரோனா வைரசானது 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி சீனாவின் வுஹான் மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டு உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து 2020ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் திகதி வரை 11374 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 98.7 வீதமானவர்கள் சீனாவிலும் 153 (1.3%) பேர் 26 பிறநாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 2.2 வீதத்தினர் இறந்துள்ளனர். பிற நாடுகளில் இனங்காணப்பட்ட அனைவரும் எதோ ஒரு வகையில் சீன நோயாளர்கள் அல்லது பயணிகளுடன் தொடர்புபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயின் பரம்பல் வேகத்தையும் நோய்த் தாக்கம் மற்றும் தடுப்பு அல்லது சிகிச்சை முறை ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு இந்நோய் கிட்டத்தட்ட 40,000 பேர் வரை தாக்கத்திற்குள்ளாக்கும் காலத்தினுள் (மார்ச் நடுப்பகுதி) கட்டுப்பாடுக்குக்குள் கொண்டுவர முடியும் என மருத்துவஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த நோய் விரைவாக பரவுவதற்கு புதிய வைரசின் வீரியத்துடன் அதன் தோற்றுவாயாக அமைந்த சீன சனத்தொகை (உலக சனத் தொகையில் 18.2%), அவர்களின் உலகளாவிய பரம்பல், உலகளாவிய வியாபார மற்றும் சுற்றுலா தொடர்புகள், தினசரி பயணங்கள் என்பன பிரதான காரணமாக அமைகின்றன.
நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்
இந்த நோய்க்கான பிரத்தியேக நோயெதிர்ப்பு பாயங்களோ, மருந்து வகைகளோ கண்டு பிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் வைரசு எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இந்நோயை கட்டுப்படுத்தும் திறனற்றவையாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை குறைத்தல், அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல், தனிநபர் சுகாதாரம் பேணல், நோய்த் தவிர்ப்பு பழக்க வழக்கங்களை கிரமமாக கைக்கொள்ளல் என்பவற்றுடன், சிறந்த மருத்துவ பராமரிப்பு முறைகளை நாடுகள், மற்றும் மாவட்டங்கள் தோறும் ஒழுங்கமைப்பு செய்தல் என்பவையே நாம் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தவிர்ப்பு பொறி முறைகளாக விளங்குகின்றன.
குறிப்பாக நோயாளர்களை எதிர் கொள்ளக் கூடிய பொது இடங்களில் (வைத்தியசாலைகள், விமானங்கள், பொது வாகனங்கள்) முகக் கவசம்(face mask) அணிதல், தேவையற்ற பொது பாவனைப் பொருட்களின் தொடுகையை தவிர்த்தல். அவ்வாறு தொட நேர்ந்தால் கைகளை சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவுதல் அல்லது மதுசார சுத்தமாக்கிகள் (Alcohol based sanitizer) கொண்டு சுத்தம் செய்தல் போன்ற செயற்பாடுகள் நோய் தொற்றுவாய்ப்பை குறைக்க உதவும்.
அதேவேளை, புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு ஆளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பாடலை கொண்டிருந்த ஒருவரிடம் நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அவரை உடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் உரிய நோய் பராமரிப்பு சிகிச்சைகளை வழங்க வேண்டும்.
தொற்றுக்குள்ளானவர்கள் சுவாச தொற்று நோய் பராமரிப்புக்கான தனிப்பட்ட பராமரிப்பு அறைகளில், உயிர்வளி(ஓட்ஸிசன்) வழங்கிகள், நாளங்களூடான திரவ பாயங்கள் வழங்கும் வசதி, உடல் உறுப்புகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பரிசோதனை வசதிகள் என்பவற்றுடன் பிற தொற்றுக்களுக்கெதிரான தேர்ந்த நுண்ணுயிர் கொல்லிகளை வழங்கும் வசதிகளுடைய பிரதான வைத்தியசாலைகளில் அதிக கவனத்துடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இதுவரை பணியாற்றி வந்த தரன்ஜித் சிங் சாந் என்பவர் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராக அண்மையில் நியமனம் பெற்றுள்ளதால், இந்த பதவி வெற்றிடமாக இருந்தது.
1992இலிருந்து இந்திய வெளியுறவு சேவைப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய கோபால் பாக்லே இலங்கைக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் துவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகாரப் பிரிவையும் கையாண்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் இலங்கையில் ஓர் வரலாற்றுத் தேர்தலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காக போட்டியிடவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து உருவாக்கும் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், மகிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.
ஒரே அரசியல் கூட்டணியில் இருந்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இதுவே முதன்முறை என்பதுடன் இது ஒரு வினோதமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு கிடைக்கவுள்ளது. எனவே மார்ச் மாத நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திரதினத்தில் சிறீலங்கா அரசினாலும் அதன் படையினராலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை வடபகுதியில் மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்துலக சமூகம் அதற்கான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியா மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் நேற்றுடன் (01) 1078 நாட்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவின் நட்பு நாடான சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் சிறீலங்காவிலும் அதிகமாக பரவிவருவதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெறவுள்ள 72 ஆவது சுதந்திர தினத்தை முகமூடிகளுடன் கொண்டாட சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.
நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களுக்கும், கலந்துகொள்ளும் மக்களுக்கும் முகமூடிகளை வழங்கவுள்ளதாக சிறீலங்காவின் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கே. ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.
கையை சுத்தம் செய்யும் திரவங்களும், அதிகளவு நீரும் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் கொண்டாடும் இந்த சுதந்திரதினத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (31) பிரித்தானியா வெளியேறியுள்ளது. கடந்த 47 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் முக்கிய பங்குவகித்த பிரித்தானியா அதில் இருந்து வெளியேறியது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது எமக்கு பாதகமாக இருக்கலாம் ஆனால் நாம் அதனை முறியடித்து வெற்றியீட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது முடிவல்ல ஆரம்பம் என வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறிய பின்னர் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த வெளியேற்றத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் அலுவலகமாக டவுணிக் வீதியில் அலங்கார விளக்குகள் எரியவிடப்பட்டதுடன், 50 பென்ஸ் நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.
பெருமளவான மக்கள் பல இடங்களில் இந்த நிகழ்வைக் கொண்டாடியதுடன், சில இடங்களில் பட்டாசுகளும் வெடிக்கவைப்பட்டன.
அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதை எதிர்ப்பவர்கள் ஐரோப்பிய ஒன்றியக் கொடியுடன் பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதனிடையே பிரசல்ஸ் இல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகங்களில் இருந்த பிரித்தானியா கொடி அகற்றப்பட்டு அது அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா என்ற போதைப் பொருள் வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இனிப்பு வகையான பொருட்களுடன் பெரிய பை ஒன்றில் கஞ்சாவை கொண்டு சென்ற மாணவன் யாழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டார். ஆனால் பாடசாலையின் பெயர் பாதிக்கப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மெதம்பிரமைன் என்ற இராசாயணப் பெயர் கொண்ட போதைப் பொருள், கஞ்சா, மற்றும் பீடி இலைகள் என்பன கேரளம், மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்றன.
பாடசலை சிறுவர்களிடம் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதனை தடுக்க சிறீலங்கா காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் யாழ் செயலகத்தின் சிறுவர் உதவி பிரிவின் அதிகாரி ஏ உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரியாலை பகுதியே போதை பொருள் கடத்தப்படுவதன் தலைமையகமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 3800 கிலோ கேரள கஞ்சா, 739 கிலோ கெரோயின், 8 கிலோ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கஞ்சா, 42000 கிலோ பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாள 7000 ஆள்கடல் மீன்பிடிப் படகுகள் தொழில் ஈடுபடும் கடலில் தேடுதல் நடத்துவது கடினம் என சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் பணப் பரிமாற்றம் இடம்பெறும் வரை அங்கு மறைத்துவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் யாழில் தாக்கப்படுகின்றனர்.
நம்பிக்கை இல்லம் என்ற புனர்வாழ்வு நிலையத்தை நடத்திவரும் வின்ஸ்சன் பற்றிக் அடிகளார் அவர்களை கடந்த செப்ரம்பர் மாதம் 23 ஆம் நாள் கடத்திச் சென்ற இருவர் ஏன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள் எனக் கேட்டு பலமாக தாக்கியபின்னர் அவரை இராசாவின்தோட்ட வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த வருடம் யாழ் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆசிரியர் அதனை தடுக்க முற்பட்டபோது மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். எனினும், பாடசாலையின் தரம் கருதி அதனை நிர்வாகம் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) காலையும் யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மேலும் இருவர் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.