வடபகுதி இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் கேரளத்து கஞ்சா

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா என்ற போதைப் பொருள் வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இனிப்பு வகையான பொருட்களுடன் பெரிய பை ஒன்றில் கஞ்சாவை கொண்டு சென்ற மாணவன் யாழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டார். ஆனால் பாடசாலையின் பெயர் பாதிக்கப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மெதம்பிரமைன் என்ற இராசாயணப் பெயர் கொண்ட போதைப் பொருள், கஞ்சா, மற்றும் பீடி இலைகள் என்பன கேரளம், மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்றன.

பாடசலை சிறுவர்களிடம் இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதனை தடுக்க சிறீலங்கா காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் யாழ் செயலகத்தின் சிறுவர் உதவி பிரிவின் அதிகாரி ஏ உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அரியாலை பகுதியே போதை பொருள் கடத்தப்படுவதன் தலைமையகமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு 3800 கிலோ கேரள கஞ்சா, 739 கிலோ கெரோயின், 8 கிலோ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கஞ்சா, 42000 கிலோ பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாள 7000 ஆள்கடல் மீன்பிடிப் படகுகள் தொழில் ஈடுபடும் கடலில் தேடுதல் நடத்துவது கடினம் என சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் பணப் பரிமாற்றம் இடம்பெறும் வரை அங்கு மறைத்துவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் யாழில் தாக்கப்படுகின்றனர்.

நம்பிக்கை இல்லம் என்ற புனர்வாழ்வு நிலையத்தை நடத்திவரும் வின்ஸ்சன் பற்றிக் அடிகளார் அவர்களை கடந்த செப்ரம்பர் மாதம் 23 ஆம் நாள் கடத்திச் சென்ற இருவர் ஏன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள் எனக் கேட்டு பலமாக தாக்கியபின்னர் அவரை இராசாவின்தோட்ட வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த வருடம் யாழ் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆசிரியர் அதனை தடுக்க முற்பட்டபோது மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். எனினும், பாடசாலையின் தரம் கருதி அதனை நிர்வாகம் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) காலையும் யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மேலும் இருவர் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.