ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது – மக்கள் கொண்டாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (31) பிரித்தானியா வெளியேறியுள்ளது. கடந்த 47 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் முக்கிய பங்குவகித்த பிரித்தானியா அதில் இருந்து வெளியேறியது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது எமக்கு பாதகமாக இருக்கலாம் ஆனால் நாம் அதனை முறியடித்து வெற்றியீட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது முடிவல்ல ஆரம்பம் என வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறிய பின்னர் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த வெளியேற்றத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் அலுவலகமாக டவுணிக் வீதியில் அலங்கார விளக்குகள் எரியவிடப்பட்டதுடன், 50 பென்ஸ் நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.

பெருமளவான மக்கள் பல இடங்களில் இந்த நிகழ்வைக் கொண்டாடியதுடன், சில இடங்களில் பட்டாசுகளும் வெடிக்கவைப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது – மக்கள் கொண்டாட்டம்

அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதை எதிர்ப்பவர்கள் ஐரோப்பிய ஒன்றியக் கொடியுடன் பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இதனிடையே பிரசல்ஸ் இல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகங்களில் இருந்த பிரித்தானியா கொடி அகற்றப்பட்டு அது அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது