கிழக்கு மாகாணத்தில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசின் பல்துறை மானிய உதவியின் கீழ் முன்னுரிமையளிக்கப்பட்ட ஆறு முக்கிய திட்டங்களுக்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமரின் 2025ஆம் ஆண்டு இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அந்த திட்டங்கள் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளன. கிராமியத் தொழில்களை ஊக்குவிக்கவும், பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தவும் பத்திக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் மனநலப் பிரிவுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. விதை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ‘ஒப்பந்த விவசாயக் கொத்துக்கள்’ உருவாக்கப்படவுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கிய சுற்றுலா கிராமம் மற்றும் மத்திய ஆயுர்வேத மருந்தகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வளாகம் என்பன அமைக்கப்படவுள்ளன
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனின் அண்மைய இலங்கை விஜயத்தையொட்டி, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். அலோகபண்டார ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மொத்தம் 33 திட்டங்களைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக 2.37 பில்லியன் இலங்கை ரூபா மானியமாக வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது.



