பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் இலங்கையில் ஓர் வரலாற்றுத் தேர்தலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காக போட்டியிடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து உருவாக்கும் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், மகிந்த ராஜபக்ஸ குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.

ஒரே அரசியல் கூட்டணியில் இருந்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இதுவே முதன்முறை என்பதுடன் இது ஒரு வினோதமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு கிடைக்கவுள்ளது. எனவே மார்ச் மாத நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.