சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு பொது மன்னிப்பு அரசியல் கைதிகளுக்கு இல்லை

நாளை நடைபெறவுள்ள சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு கோத்தபாயா ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படியும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையின் பேரிலும் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றுதல் உட்பட சிறு குற்றம் புரிந்தவர்களே விடுவிக்கப்படவுள்ளனர் என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை, கடுமையான பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.