Home Blog Page 2441

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுணதீவில் உள்ள மூன்றாம் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸார் அடித்துக்கொலைசெய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை..!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை காரணமாக குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பங்குபற்றவில்லை எனின், வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படாமை தொடர்பில் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கைத் தமிழர்களையும் தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த போதிலும் தாம் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்க தவறிய தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று(05.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார்.

பல மொழிகளில் தேசிய கீதம் சில நாடுகளில் மாத்திரமே பாடப்படுகின்றன.

நாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டுள்ளன.

தெற்கிலுள்ள சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.

எனினும் வடக்கிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படுவதில்லை.

சிறந்த ஒரு தொடர்பை ஏற்படுத்தி கொள்வதற்கே மொழி அவசியமாகின்றது.

எவ்வாறாயினும் இரா.சம்பந்தன் இன ரீதியாகவே மொழி குறித்து பேசுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஆக கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல் பயணிகளையும் தெளிவுபடுத்துவதற்காக சுகாதார அமைச்சின் மூலம் அச்சிடப்பட்ட ஆவணங்கள் உண்டு. இதில் அருகில் உள்ள வைத்தியசாலைகளும் குறிப்பிட்டுள்ளன. சீனாவில் இருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் அவர்கள் பணியாற்றும் இடங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த நோய் பரவும் முறை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் பொருட்கள் மூலம் நோய் பரவக்கூடிய நிலை இல்லை. இதனால் சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை வரையறை செய்ய வேண்டியது இல்லை.

பீஜிங், சங்ஹாய் ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கவனத்தில் கொள்ளும் போது எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. முக கவசம் அணிவது அத்தியாவசியமானதல்ல என்பதும் உணரப்படவில்லை. இது தேவையான வகையில் முக கவசம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமை ஏற்பட்டால் மாத்திரம் அதற்கு ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் சுற்றுலாத்தொழில்துறைக்கு அழுத்தம் ஏற்படுகின்றது. ஏனைய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேவையான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் புத்தியீவிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேரடியான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் மற்றும் முக கவசம் தொடர்பாகவும் தேசிய அவசர நிலைமையாக கருத்தில் கொண்டு முக கவசத்தை இலவசமாக வழங்கப்படுமாயின் இதனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் என்றும் முழுமையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? என்பது குறித்தும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படுமா? என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்ளி எழுப்பினார்.

இதன் போது அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவிக்கையில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மாத்திரமன்றி ஏனைய நாடுகளில் இருந்தும் பயணிகள் வருகின்றனர். நாட்டில் துறைமுகங்களின் மூலம் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகின்றது. வூஹான் மாநிலத்தில் இருந்து இலங்கையர்களை மீட்டெடுப்பதற்கு முடிந்தமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் சீனாவுடன் முன்னெடுத்துவரும் தொடர்புகளே காரணமாகும்.

நான்காவது நாடு என்ற ரீதியில் நாம் அனுப்பிய விமானத்தின் மூலம் சீனாவில் இருந்து எமது நாட்டவர்களை மீட்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வூஹான் மாநிலத்தில் இருந்து வருகை தந்த மாணவர்கள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றனர்.

சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களும்; விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுகின்றன. பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள் விமான நிலையத்தில் கணனி மயப்படுத்தப்பட்டு பிரதேச தொற்றுநோய் பிரிவிற்கு வழங்கப்படுகின்றன. அத்தோடு பயணிகள் இருக்கும் இடங்களுக்கும் அறிவிக்கப்படுகின்றன. சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் இவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பரிசோதிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கென பிரத்தியேக இடம்.

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதியில், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக பிரத்தியேக இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆர்ப்பாட்ட இடம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நகரின் பல்வேறு இடங்களில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது. இதற்கு தீர்வுக் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு லோட்டஸ் வீதி, காலி முகத்திடல், நகர மண்டப பகுதி, லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட சன நெரிசல் மிக்க இடங்களை, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்ந்தெடுப்பதால், அதிக வாகன நெரிசல் ஏற்படும்போது, சாதாரண பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக, வீதியை மூடுதல், ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க நீர்த்தாரை, கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லாது பொது மக்களும் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன.

இவ்வாறு பல விடயங்களை கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்டாத வகையிலும் அன்றாடச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக, இவ்வாறு பிரத்தியேக இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கோட்டாவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது; மனோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன் தினம் கோலாகலமாக இடம்பெற்றன. இதன்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து அமைச்சர் மனோவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் கூறுகிறார். எனினும் தேசிய தினத்தில், நாம் கொண்டு வந்த தமிழில் தேசிய கீதம் பாடும் வழமையை மாற்றித் தடை செய்திருக்கிறார்.

அதாவது, தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு தடை செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பேசும்போது, தான் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என கூறுகிறார். ஆனால் நடைமுறையில் சிங்கள மக்களை மட்டும் மனதில்கொண்டு, சிங்கள, பெளத்த நாடு என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், மிஸ்டர் பிரசிடென்ட்! நீங்கள் தடை செய்யுங்கள் ஆனால், ஏன் “எல்லோருக்கும் ஜனாதிபதி’ என்ற “பில்ட் – அப்’..? எனவே முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார். இதைத் தமிழ் தலைமைகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறமாட்டார்களா என்றே தமிழ் மக்கள் எண்ணுகின்றனர்.

தமிழ் மக்களின் மனசாட்சியாகவே நான் இங்கு எதிரொலிக்கின்றேன் எனக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகப்பத்தகத்திலும் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்? சீனாவிலிருந்து கொழும்பு திரும்பிய மூவர் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய்த் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மூவரும் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை அங்கொடை வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு அந்தத் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அந்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரே கண்டறியப் பட்டுள்ளதாகவும் அந்தச் சீனப் பெண்ணுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐந்து படையினருக்குப் பொது மன்னிப்பு: சிறிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாம்

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியால் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த ஐவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அரசமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளாகவிருந்த மேலும் ஐந்து பேரை விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐவரும் பாதுகாப்புத் துறையை சேர்ந்தவர்கள் என்பதுடன், சிறிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்களாவர். இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆகும்” என்றுள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை – சிறீலங்காவின் நடவடிக்கைளை அவதானிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறையில் இருக்கும் ஆனால் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (04) ஏற்றுமதியாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகை 2017 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்காவின் அரசு ஆட்சியில் இருந்தபோது வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும், இந்த நிபந்தனைகள் மீறப்படும் சமயத்தில் சலுகை நிறுத்தப்படும் எனவும் டெனிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது அமித்ஷா உத்தியோகபூர்வ அறிவிப்பு

இன்று(05) காலை நடிகர் ரஜனிகாந் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான வழங்கப்பட முடியாது என்று கூறியிருக்கின்றார்.

இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜனிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் வினவிய போது  ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தான் நல்லது. அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு இப்படியான ஒரு சலுகையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு ஒரு மணிநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிலில் அரசியலமைப்பின் பிரிவு 9இன் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் இது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை என்று கூறியிருக்கின்றார்.

மேலும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் கோகுலகிருஸ்ணன், லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய அரசின் இணை அமைச்சர் ஒருவர் பதிலளித்திருந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் நிலை பற்றி இதுவரை மத்திய அரசு எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பராமரிப்பின்றியிருந்த வயல்நிலங்களில் விவசாயம் செய்யும் நடவடிக்கை.

கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்’ நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் நாடு பூராகவும்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் செட்டிகுளம் கம நலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் அருவித் தோட்டம் பகுதியில் சிறப்பாகஇடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் கே.இமாஷலன், திணைக்கள உத்தியோகத்தர்கள்,கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு கைவிடப்பட்ட நிலத்தில் பயிற்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.