Home Blog Page 2400

திடீர் உடல்நலக்குறைவு 24 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக புலமைப் பரிசில் வகுப்பு பாடசாலையில் மாலை நடைபெற்றது.

இதன்போது அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் சோர்வுற்று சிலர் மயக்கமடைந்தனர், சிலர் சோர்வுற்ற நிலையில் காணப்பட்டனர்.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான 24 மாணவர்களையும் மாமடு வைத்தியசாலையில் பாடசாலை நிர்வாகத்தினர் அனுமதித்தனர்.

அங்கிருந்து அம் மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், ஒவ்வாமைக்கான காரணம் குறித்து ஆராய்வதாக சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் பாடசாலைக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகச் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெளளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிக் கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த விசாரணைகளை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார். விண்ணப்பம் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்தபோதிலும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகயீன முற்றிருப்பதால், இந்த விசாரணையை ஒத்திவைப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் மத பிரிவினையை தோற்றுவிக்க இந்தியா முயற்சி?

சிறீலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்துக்களின் வாக்குகள் இந்துக்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அனுசரனையுடன் இயங்கிவரும் சிவசேன என்ற இந்துத்துவக் கட்சியே இந்த சுவரெட்டிகளை யாழில் ஒட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி மற்றும் கைதடி ஆகிய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, இது ஒரு இனப்பிரிவினையை தோற்றுவிக்கும் நடவடிக்கை என இந்த சுவரொட்டி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீனமானதும், நியாயமானதுமான தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடபகுதியில் உள்ள மக்கள் தொகையில் 43 விகிதமானவர்கள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விசாரணை இதுவரை இடம்பெறவில்லை

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்து விட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் தெரிவித்த அவர், சர்வதேச விசாரணைகள் இனிமோல்தான் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விடடதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார். அவர் கூறுகின்ற கருத்தானது இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான அறிக்கை வெளிவந்தது.

பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரயல் அட்பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.

அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச வழக்கறிஞர்கள் சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியிருக்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமந்திரன் கூறுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கால நீடிப்பை ஏன் கோரியது. எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனைத்தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம். சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனை நாம் இன்று வரை வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும் நடைபெறவிருக்கும் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகி வருகின்றது” என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ் தேசிய இனத்துக்கு பேரிழப்பு

தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ்த் தேசிய இனத்துக்கு பேரிழப்பு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

தமிழ் தேசிய அறிவுலகத்தின் மூத்த ஆளுமையும், தமிழ் அறிஞருமான பெருந்தமிழர் ஐயா பேராசிரியர் அறிவரசன் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

அவருடைய மறைவு தமிழ் தேசிய இனத்திற்கே நிகழ்ந்திருக்கிற ஈடுசெய்யமுடியாத இழப்பு. மு.செ‌. குமாரசாமி என்கின்ற இயற்பெயரைக் கொண்ட ஐயா அறிவரசனார் பேராசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழ் அறிஞராக, பல புகழ்பெற்ற நூல்களுக்கு நூலாசிரியராக, பேராசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கிறதலைமை பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, தமிழின உரிமைச் சார்ந்து நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மைகொண்ட மாபெரும் தமிழின ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஐயா பேராசிரியர் அறிவரசன் புத்தன் பேசுகிறான், மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தமிழ் அறிவோம், தமிழ்ப்பெயர் கையேடு, சோதிடப் புரட்டு உள்ளிட்ட பல நூல்களை எழுதியதோடுமட்டுமல்லாமல் தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழர் தாயகம் என்கின்ற மாத இதழை தொடர்ச்சியாக நடத்தி அவ்விதழ் மூலம் தமிழ்ச் சமூகத்தின் இனமொழி உணர்விற்காக அரும்பாடுபட்ட வாழ்க்கை அவருடையது.

மறைந்த பெருந்தமிழர் அறிவரசன் அறிவாற்றலைக் கண்டு வியந்த தேசியத்தலைவர் பிரபாகரன், ஐயா அவர்களைத் தமிழீழ நாட்டிற்கு அழைத்து அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப் பணித்தது வரலாற்று நிகழ்வாகும்.

ஈழநாட்டில் அவர் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்கின்ற நூலையும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்ச்சியைப் போற்றும் வகையில் விடுதலைபுரம் என்கின்ற காப்பியத்தையும் பேராசிரியர் அறிவரசனார் எழுதியிருக்கிறார். பல உலக நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்கின்ற தமிழ் பேராசிரியர்களுக்கு முதுநிலை தமிழ்ப் பயிற்சி அளித்து உலகமெல்லாம் தமிழ்மொழி சிறக்க உழைத்த பெருந்தகையாகப் பேராசிரியர் அறிவரசன் திகழ்ந்தார்.

என் மீது தனிப்பட்ட அன்பினைக் கொண்ட ஐயாவை, நான் தமிழீழத்திற்குச் சென்றபோது எனக்கு முன்னரே அங்குக் களத்தில் இருந்ததும் செயல்பட்டதும் அதை நேரில் கண்டதும் எப்போதும் என் நெஞ்சத்தை விட்டு அகலாது.

தமிழ் தேசியத் இனத்திற்கான ஒரு அரசியலை தாயகத் தமிழகத்தில் கட்டமைக்க நாம் தமிழர் என்கின்ற அமைப்பினை இம்மண்ணில் நான் உருவாக்கிய போது, நாம் தமிழர் கட்சியின் முக்கியப் படைப் பிரிவான இளைஞர் பாசறையின் பொறுப்பாளர்களுக்குப் பேராசிரியர் அறிவரசனார் ஒரு நாள் முழுக்கக் கும்பகோணத்தில் தங்கியிருந்து பயிற்சி அளித்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.

மூன்று நாட்களுக்கு முன் விக்கிரமசிங்கபுரம் கூட்டத்திற்குச் சென்ற பொழுது கூட அய்யாவின் குடும்பத்தினரை சந்திக்க நேர்ந்தபொழுது ஐயாவின் உடல்நலம் விசாரித்தேன். அதற்குள் அவரின் மறைவு செய்தி வந்திருப்பது மிகுந்த துயரத்தை தருகிறது.

அவரை இழந்து வாடுகிற தமிழ் தேசிய இனத்தின் அறிவுலகத்தின் துயரத்தில் அவருடைய மாணவர்களில் ஒருவனாக நானும் பங்கேற்கிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கிறேன். மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் அறிவரசனார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

தலிபான் தாக்குதல் 20 பேர் பலி;அமெரிக்கா விமானத் தாக்குதல்

தலிபான் இயக்கத்தின் அரசியல் தலைவர் முல்லாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரத்தில் ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர்.  ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா –  தலிபான் தீவிரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் `ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது படைகளை விரைவில் முழுமையாக விலக்கிக் கொள்வது என அமெரிக்காவும், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளப் போவதாக தலிபான்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப், தலிபான்களின் அரசியல் விவகாரத் தலைவர் முல்லா பராதாருடன் 35 நிமிடம் தொலைபேசியில்  தீவிரவாதம் தொடர்பாக பேசினார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் பின்னர் ேபட்டியளித்த டிரம்ப், `தலிபான் தலைவர் முல்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்திருந்தது. அவர்கள் வன்முறையை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளனர்,’ என குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தலிபான்கள் குண்டூஷ் மாவட்டத்தின் இமாம் ஷாகிப் பகுதியில் உள்ள 3 ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 ராணுவ வீரர்கள், 4 போலீசார் என 14 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், அன்று இரவு மத்திய உருஷ்கான் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு இடங்களிலும் மொத்தம் 20 பேர் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். அதிபர் டிரம்ப் தலிபான் தலைவருடன் தொலைபேசியில் ேபசிய சில மணி நேரங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலால் அமெரிக்கா – தலிபான்கள் இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தின் நிலையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

அமெரிக்கா பதிலடி:
தலிபான்கள் தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. தலிபான்கள் நேற்று முன்தினம் இரவு ஆப்கனின் தென்பகுதி மாகாணமான நாரே சராஜில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில், ஆப்கன் வீரர்கள், போலீசார் 20 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தலிபான்கள் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அமைதி ஒப்பந்தத்துக்கு பின்னர் தலிபான்கள் மீது அமெரிக்கா நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும்.

கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகள் விடுவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகளை இரான் அரசு தற்காலிகமாக விடுவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெற்றவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இரானில் மட்டும் 2336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரான் தெஹ்ரானில்தான் அதிக அளவில் இறப்பு பதிவாகி உள்ளது. அங்கு 1043 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது

கடந்தகால தவறுகளைத் திருத்திக் கொள்ளாது மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடகவியலாளர்கள் அமையத்தில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 10 வருடங்கள் மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். அத்துடன் எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்திருந்தது.

கடந்த 10 வருடங்களாக இவ்வாறான கோரிக்கையை விடுக்காதது  எதற்காக? என்ற கேள்விக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை பதிலளிக்கவில்லை. இப்போது பேரம் பேசும் பொறுப்பைக் கேட்கின்றனர்.

கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு தற்போது பேரம்பேச சந்தர்ப்பம் கேட்பது தங்களின் பாராளுமன்ற ஆசனங்களுக்காகவே என்றார்.

சுவிற்சலாந்தில் கொரோனா வைரசால் முதல் சாவு;87 பேர் பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் வோ(Vaud) மாநிலத்தில் 74 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். புதன்கிழமை இரவு அவர் சாவடைத்ததை கூட்டாட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் லொசான் பல்கலைக்கழக மருத்துவமனையில்(Lausanne University Hospital (CHUV ) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்தப் பெண் எவ்வாறு தொற்றுக்குள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Current known cases:87
Last updated: 05.03.2020

Titel                  Cases              Deaths
Geneva                  7
Vaud                     6                     1
Basel City              8
Aargau                  7
Zurich                 13
Ticino                  15
Graubünden           9
Valais                    2
Basel Country        3
Bern                     4
Fribourg                4
Zug                      3
Schwyz                 3
Neuchâtel             1
St. Gallen             1
Lucerne                1

புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து
வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி- எப்படியான கலைகளை நீங்கள் வெளியுலகிற்கு கொண்டு வருகின்றீர்கள்?

இரண்டு மூன்று வகையான  நாங்கள் கலைகள் தொடர்பில் கவனம் செலுத்திவருகிறோம் . அவற்றில் ஒன்று நவீன கலைகள். இதில் மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள், பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு சார் நாடகங்கள், ஆற்றுகைகளை மேற்கொள்வது மற்றும் தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கும் பாரம்பரிய கலைகள். இந்த கலைவடிவங்கள் ஒ ப்பீட்டளவில் முன்னர் இருந்தது போல் இல்லாது மந்த நிலையில் இருப்பதை பெருமளவில் காணக்கூடியதாக இருக்கின்றது.

நலிவுற்றுவரும் கலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் ஒரு பணியை  நாங்கள் செய்ய வேண்டும். அது தான் இப்போது சாத்தியமானது. இந்தக் கலைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் கலைஞர்களை ஊக்குவித்து செயற்படுத்தும் சாத்தியங்கள் இப்போது எம்மிடம் குறைவாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் அந்தக் கலைஞர்கள், அவர்களின் மண்ணில் கலைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் ஆவலாக இருக்கின்றோம்.

இப்போது அவர்கள் மேற்கொள்ளும் கலைகளை மெருகூட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்ளவுள்ளோம். முதலில் பாரம்பரிய கலையான  கிராமியப் பாடல்களையே இப்போதைக்கு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேலைகளை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி -தற்போது பல்வேறு கலைகள் அழிவடைந்து கொண்டு செல்கின்றது. அந்த வகையில் அண்மைக் காலங்களில் மேடைகளில் பறை இசையை மேற்கொண்டுள்ளீர்கள். அந்த பறை இசை எவ்வாறு தமிழ் மக்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அதற்கு அவர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த பறையிசை எங்களின் சமூகத்தில் இணைந்துள்ளது. தெய்வங்கள்கூட தோற்கருவிகளை அதிகம் வைத்துள்ளனர். பிற்பட்ட காலத்தில் பறையிசை என்பது ஒரு முக்கியமான இசைக் கலையாகவும், இசைக் கருவியாகவும் வந்திருக்கின்றது.

வாழ்க்கையின் முழு அர்த்தப்பாடுகளையும் கொண்டதாகவே இந்தப் பறை இசை விளங்குகின்றது. எங்களின் ஆதிக் கலைகளை எங்களின் அடுத்த சமூகத்திற்கு கொண்டு செல்வது, பேணுவது முக்கியம் என்ற ரீதியில் நாங்கள் எடுத்துச் செல்கின்றோம். இப்போது எங்களிடம் இருக்கும் அணியினர் பறை பற்றிய அறிவு உள்ளதால், எங்களுக்குள் முரண்பாடுகள் இல்லாது கலையை எடுத்துச் செல்ல முடிகின்றது.WhatsApp Image 2020 03 05 at 11.00.11 1 புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

இருப்பினும் வெளிச் சமூகங்கள் மத்தியில் சில கஸ்டங்கள் இருக்கின்றது. அது என்னவெனில் பறையை திறந்த வெளிகளில் பாவிப்பதா? கோவில்களில் பாவிப்பதா? என்ற ஒரு பிற்போக்கான எண்ணம் உள்ளது. இது தவறில்லை. ஏனெனில், எங்களுக்கு முன்னர் இருந்த சமூகம் அவ்வாறு வாழ்ந்து பழகி விட்டார்கள். தற்போதுள்ள இளைய சமூகத்தின் ஊடாக அடுத்த சமூகத்திற்கு கொண்டு செல்லும் போது சில மாற்றங்கள் ஏற்படும் எனக் கருதி நாங்கள் இதை எடுத்துச் செல்கின்றோம்.

கேள்வி-இந்தக் கலைகளை எதிர்கால சந்ததியினரிடம் எடுத்துச் செல்வதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

நாங்கள் இப்போது முதலில் செய்ய வேண்டியது இந்தக் கலையை ஆற்றுகைப்படுத்துவதேயாகும். இரண்டாவது இந்தக் கலையை முறையாக  ஆசானின் கீழ் இருந்து படித்த ஒரு சில கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு விரும்பும் ஏனைய கலைஞர்களுக்கு பழக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதை பழக்கினால் சந்தோசமாக இருக்கும்.

கேள்வி- தாயகத்தைப் பொறுத்தவரையில் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதா? இல்லையா?

அது எந்தக் கலையைப் பொறுத்தது என்பதில் இருக்கின்றது. ஒவ்வொரு கலைகளுக்கும் ஒவ்வொரு அங்கீகாரம் இருக்கின்றது. சினிமா கூட ஒரு கலைதான். ஆனால் ஈழத்தைப்  பொறுத்தவரையில் சில கலைகள், சில கலைஞர்கள் புறக்கணிக்கப்படும் ஒரு சூழ்நிலை இருக்கின்றது. ஆனால் அதற்காக கலையை செய்யாது இருக்க முடியாது. பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவது கிராமியக் கலைகளை மேற்கொள்ளும் கலைஞர்களே ஆகும். ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் அந்தக் கலைகளை மேற்கொள்வது எங்களின் ஆத்மாத்த சந்தோசத்திற்காகவும் மக்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவுமே. இதனால் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

கேள்வி-உங்களின் கலைகளுக்கு ஆதரவு எவ்வாறு இருக்கின்றது?

இந்தக் கலைபற்றிய ஓரளவு புரிதல் இருக்கின்றவர்களதும், கலை மீது நாட்டம்உள்ளவர்களினதும் ஆதரவு தான் இருக்கின்றது.  ஒப்பீட்டளவில் நாங்கள் ஒரு நிகழ்ச்சி செய்யப் போகின்றோம் என்று சொல்லி கூப்பிடும் போது, பெரும்பாலானோர் வருவதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் வவுனியாவில்  கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்கும் முறையை உருவாக்கியிருந்தோம்.

முதல்முறையாக அரங்கேற்றிய நாடகத்திற்கு 200 பார்வையாளர்கள் வந்த போதும், 3பார்வையாளர்களுக்காக நாங்கள் நாடகம் போட்ட சூழலும் இருக்கின்றது. இது எந்தளவிற்கு புரிதல் இருக்கின்றது என்பது தெரியவில்லை. இந்தப் புரிதலை எங்கள் குடும்பத்திலிருந்தும், பாடசாலைகளிலிருந்தும் ஏற்படுத்திக் கொண்டு வரும் போதுதான் அந்தக் கலை பற்றிய புரிதல் ஏற்படுத்தப்படும்.  WhatsApp Image 2020 03 05 at 11.00.11 புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

நாங்கள் ஒன்றரை இலட்சம் செலவு செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினால், அதில் கட்டணமாக வரும் பணம் ஏழாயிரம், அல்லது எட்டாயிரம் தான். மிகுதி செலவுகள் சில ஆதரவாளர்கள் ஊடாகவே கிடைக்கும். 70% இற்கும் மேற்பட்ட செலவுகள் எங்கள் சொந்த செலவிலிருந்து செல்வதாகவே இருக்கும்.

இதை ஒரு தொழில்முறையான குழுவாக உருவாக்க முயற்சிக்கின்றோம். தொழில்முறையான குழுவாக இருக்கும் போது, பார்வையாளர்களை அதிகம் உருவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

கேள்வி -தாயகத்தைவிட புலம்பெயர்ந்த தேசங்களில் இந்தக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இருக்கின்றனர். எனவே புலம்பெயர் தேசத்திலிருக்கும் உறவுகள் உங்கள் கலைகளை வளர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களே இந்தக் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர். இழந்தவனுக்குத் தான் அதன் வலிகள் தெரியும். சொந்த நாட்டிலிருந்து உயிரையும் உணர்வுகளையும் கொண்டு போன அந்த சமூகம் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தங்கள் அடையாளங்களை பலப்படுத்த கலைகள் தேவை என்ற ஒரு சரியான முடிவில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தாயகத்தில் இது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றது.

புலம்பெயர் சமூகத்தினர் செய்ய வேண்டிய விடயங்கள் என்று பார்த்தால், 1. இங்கு கலைகளை மேற்கொண்டு வரும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படை பொருளாதாரம் தான். பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவினால், அவர்கள் மனமகிழ்வுடன் தங்கள் கலைகளை மேற்கொள்ள முடியும். 2. இங்குள்ள கலைஞர்களை தாங்கள் இருக்கும் இடங்களுக்கு வரவழைத்து கலைகளை காண்பிக்கும் போதும் கலைஞர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கின்றது.

அவர்களுக்குரிய அங்கீகாரமும், பொருளாதாரமும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்தக் கலைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களால் சில விடயங்களை சாத்தியமாக்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி-உங்களுடைய கலைஞர்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படியிருக்கும்?

எங்கள் குழுவில் இருக்கும் ஒருசிலர் தான் வேலைக்கு செல்பவர்கள். ஏனையோர்  வேலைக்கு செல்லாதவர்கள். நாடகக் கலையை ஒரு தொழில்முறை குழுவாக உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதும் அதன் மூலம் எங்களால் முடிந்த வரையில் கலையை வளர்த்துக் கொண்டு போவதிலும் தான் எங்கள் பயணம் அமைகின்றது. இவை தொடர்பாக சில இடங்களில் எவ்வாறு கொண்டு செல்வது என்று பேசியிருக்கின்றோம். அந்த விடயங்கள் தொடர்பாக சாத்தியமாகும் இடத்து நாங்கள் முழுநேர கலைஞர்களாக இயங்கலாம்.

கேள்வி-இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களின் கலைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா?

சில இடங்களில் வழங்கப்படுகின்றது. கலாசார திணைக்களம் பாரம்பரிய கலைகளை மேற்கொள்ளும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக கலைஞர்களுக்கு கலாபூசணம் விருது வழங்குகின்றார்கள். அது ஒரு வகையான அங்கீகாரம். மற்றும் கலாசார திணைக்களம் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவை சில இடங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

கொழும்பிலுள்ள கலைஞர்களுக்கான சாத்தியப்பாடுகள் நிறைய உள்ளன. அவர்கள் வெளிநாடுகளுக்கு போகக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் எங்களுக்கு அங்கிருந்து சில தகவல்கள் பரிமாறப்படுவதில்லை. கொழும்பிலுள்ள கலைஞர்களுக்கும் இங்கு இருக்கும் கலைஞர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கும் போது தான் ஒரு தகவல் பரிமாற்றம் இருக்கும்.

எங்களுக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காமையால், நாங்கள் வெளியில் தெரியவில்லை. கொழும்பிலுள்ள ஒரு நாடகக் கலைஞருக்கு திரைப்பட வாய்ப்புகள், மேடை நாடக வாய்ப்புகள் கிடைக்கும். சிறந்த கலைஞர்களை வெளிநாடுகளில் கலைநிகழ்வுகளை மேற்கொள்ள வைக்கின்றனர். பயிற்சிப்பட்டறை, வகுப்புகள் மேலதிகமாக வழங்கப்படுகின்றது. அதனால் அவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள்.

எங்களுக்கும் சரியான தொடர்புகள் கிடைக்குமிடத்து எமது கலைஞர்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லலாம்.