புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

361 Views

சுதந்திர அரங்கு, அரங்காலயா,கலைநிலா ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து
வவுனியாவில் பாரம்பரிய,மற்றும் நவீன கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கலைஞர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் துஜான் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.

கேள்வி- எப்படியான கலைகளை நீங்கள் வெளியுலகிற்கு கொண்டு வருகின்றீர்கள்?

இரண்டு மூன்று வகையான  நாங்கள் கலைகள் தொடர்பில் கவனம் செலுத்திவருகிறோம் . அவற்றில் ஒன்று நவீன கலைகள். இதில் மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள், பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு சார் நாடகங்கள், ஆற்றுகைகளை மேற்கொள்வது மற்றும் தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கும் பாரம்பரிய கலைகள். இந்த கலைவடிவங்கள் ஒ ப்பீட்டளவில் முன்னர் இருந்தது போல் இல்லாது மந்த நிலையில் இருப்பதை பெருமளவில் காணக்கூடியதாக இருக்கின்றது.

நலிவுற்றுவரும் கலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் ஒரு பணியை  நாங்கள் செய்ய வேண்டும். அது தான் இப்போது சாத்தியமானது. இந்தக் கலைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் கலைஞர்களை ஊக்குவித்து செயற்படுத்தும் சாத்தியங்கள் இப்போது எம்மிடம் குறைவாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் அந்தக் கலைஞர்கள், அவர்களின் மண்ணில் கலைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் ஆவலாக இருக்கின்றோம்.

இப்போது அவர்கள் மேற்கொள்ளும் கலைகளை மெருகூட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்ளவுள்ளோம். முதலில் பாரம்பரிய கலையான  கிராமியப் பாடல்களையே இப்போதைக்கு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேலைகளை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி -தற்போது பல்வேறு கலைகள் அழிவடைந்து கொண்டு செல்கின்றது. அந்த வகையில் அண்மைக் காலங்களில் மேடைகளில் பறை இசையை மேற்கொண்டுள்ளீர்கள். அந்த பறை இசை எவ்வாறு தமிழ் மக்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அதற்கு அவர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த பறையிசை எங்களின் சமூகத்தில் இணைந்துள்ளது. தெய்வங்கள்கூட தோற்கருவிகளை அதிகம் வைத்துள்ளனர். பிற்பட்ட காலத்தில் பறையிசை என்பது ஒரு முக்கியமான இசைக் கலையாகவும், இசைக் கருவியாகவும் வந்திருக்கின்றது.

வாழ்க்கையின் முழு அர்த்தப்பாடுகளையும் கொண்டதாகவே இந்தப் பறை இசை விளங்குகின்றது. எங்களின் ஆதிக் கலைகளை எங்களின் அடுத்த சமூகத்திற்கு கொண்டு செல்வது, பேணுவது முக்கியம் என்ற ரீதியில் நாங்கள் எடுத்துச் செல்கின்றோம். இப்போது எங்களிடம் இருக்கும் அணியினர் பறை பற்றிய அறிவு உள்ளதால், எங்களுக்குள் முரண்பாடுகள் இல்லாது கலையை எடுத்துச் செல்ல முடிகின்றது.WhatsApp Image 2020 03 05 at 11.00.11 1 புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

இருப்பினும் வெளிச் சமூகங்கள் மத்தியில் சில கஸ்டங்கள் இருக்கின்றது. அது என்னவெனில் பறையை திறந்த வெளிகளில் பாவிப்பதா? கோவில்களில் பாவிப்பதா? என்ற ஒரு பிற்போக்கான எண்ணம் உள்ளது. இது தவறில்லை. ஏனெனில், எங்களுக்கு முன்னர் இருந்த சமூகம் அவ்வாறு வாழ்ந்து பழகி விட்டார்கள். தற்போதுள்ள இளைய சமூகத்தின் ஊடாக அடுத்த சமூகத்திற்கு கொண்டு செல்லும் போது சில மாற்றங்கள் ஏற்படும் எனக் கருதி நாங்கள் இதை எடுத்துச் செல்கின்றோம்.

கேள்வி-இந்தக் கலைகளை எதிர்கால சந்ததியினரிடம் எடுத்துச் செல்வதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

நாங்கள் இப்போது முதலில் செய்ய வேண்டியது இந்தக் கலையை ஆற்றுகைப்படுத்துவதேயாகும். இரண்டாவது இந்தக் கலையை முறையாக  ஆசானின் கீழ் இருந்து படித்த ஒரு சில கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு விரும்பும் ஏனைய கலைஞர்களுக்கு பழக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதை பழக்கினால் சந்தோசமாக இருக்கும்.

கேள்வி- தாயகத்தைப் பொறுத்தவரையில் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதா? இல்லையா?

அது எந்தக் கலையைப் பொறுத்தது என்பதில் இருக்கின்றது. ஒவ்வொரு கலைகளுக்கும் ஒவ்வொரு அங்கீகாரம் இருக்கின்றது. சினிமா கூட ஒரு கலைதான். ஆனால் ஈழத்தைப்  பொறுத்தவரையில் சில கலைகள், சில கலைஞர்கள் புறக்கணிக்கப்படும் ஒரு சூழ்நிலை இருக்கின்றது. ஆனால் அதற்காக கலையை செய்யாது இருக்க முடியாது. பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவது கிராமியக் கலைகளை மேற்கொள்ளும் கலைஞர்களே ஆகும். ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் அந்தக் கலைகளை மேற்கொள்வது எங்களின் ஆத்மாத்த சந்தோசத்திற்காகவும் மக்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவுமே. இதனால் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

கேள்வி-உங்களின் கலைகளுக்கு ஆதரவு எவ்வாறு இருக்கின்றது?

இந்தக் கலைபற்றிய ஓரளவு புரிதல் இருக்கின்றவர்களதும், கலை மீது நாட்டம்உள்ளவர்களினதும் ஆதரவு தான் இருக்கின்றது.  ஒப்பீட்டளவில் நாங்கள் ஒரு நிகழ்ச்சி செய்யப் போகின்றோம் என்று சொல்லி கூப்பிடும் போது, பெரும்பாலானோர் வருவதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் வவுனியாவில்  கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்கும் முறையை உருவாக்கியிருந்தோம்.

முதல்முறையாக அரங்கேற்றிய நாடகத்திற்கு 200 பார்வையாளர்கள் வந்த போதும், 3பார்வையாளர்களுக்காக நாங்கள் நாடகம் போட்ட சூழலும் இருக்கின்றது. இது எந்தளவிற்கு புரிதல் இருக்கின்றது என்பது தெரியவில்லை. இந்தப் புரிதலை எங்கள் குடும்பத்திலிருந்தும், பாடசாலைகளிலிருந்தும் ஏற்படுத்திக் கொண்டு வரும் போதுதான் அந்தக் கலை பற்றிய புரிதல் ஏற்படுத்தப்படும்.  WhatsApp Image 2020 03 05 at 11.00.11 புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)

நாங்கள் ஒன்றரை இலட்சம் செலவு செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினால், அதில் கட்டணமாக வரும் பணம் ஏழாயிரம், அல்லது எட்டாயிரம் தான். மிகுதி செலவுகள் சில ஆதரவாளர்கள் ஊடாகவே கிடைக்கும். 70% இற்கும் மேற்பட்ட செலவுகள் எங்கள் சொந்த செலவிலிருந்து செல்வதாகவே இருக்கும்.

இதை ஒரு தொழில்முறையான குழுவாக உருவாக்க முயற்சிக்கின்றோம். தொழில்முறையான குழுவாக இருக்கும் போது, பார்வையாளர்களை அதிகம் உருவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

கேள்வி -தாயகத்தைவிட புலம்பெயர்ந்த தேசங்களில் இந்தக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இருக்கின்றனர். எனவே புலம்பெயர் தேசத்திலிருக்கும் உறவுகள் உங்கள் கலைகளை வளர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களே இந்தக் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர். இழந்தவனுக்குத் தான் அதன் வலிகள் தெரியும். சொந்த நாட்டிலிருந்து உயிரையும் உணர்வுகளையும் கொண்டு போன அந்த சமூகம் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தங்கள் அடையாளங்களை பலப்படுத்த கலைகள் தேவை என்ற ஒரு சரியான முடிவில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தாயகத்தில் இது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றது.

புலம்பெயர் சமூகத்தினர் செய்ய வேண்டிய விடயங்கள் என்று பார்த்தால், 1. இங்கு கலைகளை மேற்கொண்டு வரும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படை பொருளாதாரம் தான். பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவினால், அவர்கள் மனமகிழ்வுடன் தங்கள் கலைகளை மேற்கொள்ள முடியும். 2. இங்குள்ள கலைஞர்களை தாங்கள் இருக்கும் இடங்களுக்கு வரவழைத்து கலைகளை காண்பிக்கும் போதும் கலைஞர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கின்றது.

அவர்களுக்குரிய அங்கீகாரமும், பொருளாதாரமும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்தக் கலைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களால் சில விடயங்களை சாத்தியமாக்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி-உங்களுடைய கலைஞர்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படியிருக்கும்?

எங்கள் குழுவில் இருக்கும் ஒருசிலர் தான் வேலைக்கு செல்பவர்கள். ஏனையோர்  வேலைக்கு செல்லாதவர்கள். நாடகக் கலையை ஒரு தொழில்முறை குழுவாக உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதும் அதன் மூலம் எங்களால் முடிந்த வரையில் கலையை வளர்த்துக் கொண்டு போவதிலும் தான் எங்கள் பயணம் அமைகின்றது. இவை தொடர்பாக சில இடங்களில் எவ்வாறு கொண்டு செல்வது என்று பேசியிருக்கின்றோம். அந்த விடயங்கள் தொடர்பாக சாத்தியமாகும் இடத்து நாங்கள் முழுநேர கலைஞர்களாக இயங்கலாம்.

கேள்வி-இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களின் கலைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா?

சில இடங்களில் வழங்கப்படுகின்றது. கலாசார திணைக்களம் பாரம்பரிய கலைகளை மேற்கொள்ளும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக கலைஞர்களுக்கு கலாபூசணம் விருது வழங்குகின்றார்கள். அது ஒரு வகையான அங்கீகாரம். மற்றும் கலாசார திணைக்களம் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவை சில இடங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

கொழும்பிலுள்ள கலைஞர்களுக்கான சாத்தியப்பாடுகள் நிறைய உள்ளன. அவர்கள் வெளிநாடுகளுக்கு போகக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் எங்களுக்கு அங்கிருந்து சில தகவல்கள் பரிமாறப்படுவதில்லை. கொழும்பிலுள்ள கலைஞர்களுக்கும் இங்கு இருக்கும் கலைஞர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கும் போது தான் ஒரு தகவல் பரிமாற்றம் இருக்கும்.

எங்களுக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காமையால், நாங்கள் வெளியில் தெரியவில்லை. கொழும்பிலுள்ள ஒரு நாடகக் கலைஞருக்கு திரைப்பட வாய்ப்புகள், மேடை நாடக வாய்ப்புகள் கிடைக்கும். சிறந்த கலைஞர்களை வெளிநாடுகளில் கலைநிகழ்வுகளை மேற்கொள்ள வைக்கின்றனர். பயிற்சிப்பட்டறை, வகுப்புகள் மேலதிகமாக வழங்கப்படுகின்றது. அதனால் அவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள்.

எங்களுக்கும் சரியான தொடர்புகள் கிடைக்குமிடத்து எமது கலைஞர்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லலாம்.

 

Leave a Reply