நெடுந்தீவு மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியவாறு கருப்புத் துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை காட்சிப்படுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மகாவலித் துறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டு வருகின்றபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை.

குறிப்பாக, தற்போது கடல் போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது.

அதிலும் 80 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் 20 பேரை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடிகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்களால் பயணிக்க முடியாமல், புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.