சர்வதேச விசாரணை இதுவரை இடம்பெறவில்லை

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துக் கூறுகையில்,

சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்து விட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் தெரிவித்த அவர், சர்வதேச விசாரணைகள் இனிமோல்தான் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விடடதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார். அவர் கூறுகின்ற கருத்தானது இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான அறிக்கை வெளிவந்தது.

பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரயல் அட்பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.

அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச வழக்கறிஞர்கள் சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியிருக்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமந்திரன் கூறுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கால நீடிப்பை ஏன் கோரியது. எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனைத்தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம். சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனை நாம் இன்று வரை வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும் நடைபெறவிருக்கும் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகி வருகின்றது” என்றும் தெரிவித்தார்.