அரசியல் தீர்வு: தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்!

புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய 8 அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்றாவது சந்திப்பு நேற்று புதன்கிழமை (6) பி.ப 3.00 – 4.30 மணி வரை கொழும்பிலுள்ள துவாரகா ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், ப.சத்தியலிங்கம், இ.ஸ்ரீநாத், ஞா.சிறிநேசன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மணிவண்ணனும் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத கட்சிக்கு இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமையைக் காரணங்காட்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து சந்திப்பு நடைபெற்ற வேளையில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அரசியல் தீர்வு குறித்து ஆராயும் நோக்கிலான இச்சந்திப்பில், இவ்விடயத்தில் அக்கறையுள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் பங்கேற்கவேண்டும் எனவும், இதில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கருத்திற்கொள்ளப்படக்கூடாது எனவும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருமித்துக் கருத்துரைத்தனர்.

அதேபோன்று புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் உடைய மாநில அரசுகள் இணைந்த சமஷ்டி அரசாகும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனம் என்பதுடன் வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலம் தமிழ்பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாகும், தேசிய பாதுகாப்பு, நாணயம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் போன்றவை தவிர்ந்த ஏனைய விடயங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும், மாநில அரசுகளின் இறையாண்மையானது அம்மாநிலங்களின் மக்களுக்கானதும் பாராதீனப்படுத்தப்பட முடியாததுமாகும், மத்திய அரசின் அதிகாரங்களும் மாநில தன்னாட்சி அரசுகளின் அதிகாரங்களும் தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் விடயங்கள் தொடர்பான முழு அதிகாரங்களும் மாநிலங்களுக்கே இருக்கவேண்டும் என்பதுடன் அவை மீளப்பெறமுடியாதவையாக அங்கீகரிக்கப்படவேண்டும், இலங்கை அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அரசியலமைப்புசார் பிணக்குகளையும் மாநில அரசுகளுக்கு இடையிலான அரசியலமைப்புசார் பிணக்குகளையும் ஏனைய அரசியலமைப்புசார் விடயங்களையும் விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கென தனியான அரசியலமைப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவேண்டும், இலங்கை ஒரு மதசார்பற்ற அரசு ஆகும், தமிழ் மொழியும் சிங்கள மொழியும் சம அந்தஸ்த்துள்ள தேசிய, அரசகரும, சட்டவாக்க, நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழிகளாகும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும் ஆகிய 8 விடயங்களும் அடிப்படை அம்சங்களாக தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது ஐவரடங்கிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், அக்குழுவில் கட்சிகளின் சார்பில் உள்வாங்கப்படவேண்டிய பிரதிநிதிகளின் பெயர்களை ஒவ்வொரு கட்சிகளும் வழங்கவேண்டும் எனவும், எதிர்வரும் 3 வாரங்களுக்கும் அக்குழு புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் அடங்கிய ஆவணத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பிக்கும் எனவும் இச்சந்திப்பில் சட்டத்தரணிகள் பேரவையினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இது இவ்வாறிருக்க மேற்படி கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து கஜேந்திரகுமாரிடம் வினவியபோது, ‘கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இருப்பினும் எம்மோடு இணைந்து இயங்கும் பங்காளித்தரப்புக்களும் இச்சந்திப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதால், தமிழ்த்தேசியப் பேரவை என்ற ரீதியில் அழைப்புவிடுக்குமாறு நாம் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் கோரினோம். எனினும் அதனை மறுத்த அவர்கள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் கட்சிகள் என்ற அடிப்படையிலேயே அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் எமக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், நாம் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்கவில்லை’ என்றார்.