Home Blog Page 2399

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இன்று(06) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்படி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அறிக்கை! கடும் சீற்றமடைந்த விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனும் போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயாதீன சர்வதேச விசாரணைகளுக்கான முதல்படியே தமது அறிக்கைகள் என ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்துள்ள நிலையில் சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதாக சுமந்திரன் கூறி வருவதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு பாரப்படுத்தப்பட்டு சர்வதேச விசாரணையொன்றுக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், ஏற்கனவே சர்வதேச விசாரணை நிறைவுபெற்றுவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறிவருகின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றைக் கோராமலும் அல்லது ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும் சுமந்திரன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

சுமந்திரனின் இந்த செயல் தவறானது எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா அரசினாலும் அரச படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் இந்த அறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதே உண்மை எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ ஸ்ரீலங்கா ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிக்கப்பாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களை தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதற்கான முயற்சிகளே என்று கருத வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும் நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன எனவும் அம் முயற்சி முடிவடையவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் பதியப்படவில்லை என்பதுடன் தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே தமது அறிக்கைகள் என அதனை தயாரித்தவர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள 12 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போதுமானதாக காணப்படுவதால் நீதிமன்ற பிடியாணையை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய கடந்த 4 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் குறித்த விடயங்களை முன்வைத்தனர்.

அந்த விடயங்கள் பரிசீலித்த கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க சந்தேகநபர்களை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்லவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அனைத்துலக விசாரணையின் அவசியத்தை அனைத்துலக சமூகம் உணரத் தலைப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட சிறீலங்கா அரசு அதற்கான எதிர்விளைவுகள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது.

சிறீலங்காவின் அறிவிப்புக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல தமது எதிர்ப்புக்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. பிரித்தானியா மற்றும் கனடா உட்பட ஐந்து நாடுகளைக் கொண்ட இணைஅனுசரணை நாடுகள் தமது கவலையை வெளியிட்டதுடன், தீர்மானத்தை தாம் தொடர்ந்து பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளின் வரிசையில் தற்போது பிரான்ஸ்ம் இணைந்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா விலகினாலும், தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது கவலையை வெளியிட்டுள்ள அதேசமயம், அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் அது தனது கருத்தை தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகள் ஒருபுறம் தமது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபை ஒரு படி மேலே சென்று அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் விரும்புவதும் அதுவே.

அதாவது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியது போல சிறீலங்காவின் உள்ளக விசாரணை என்பது உலகினால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. அதாவது சிறீலங்காவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அங்கு ஒருபோதும் உள்ளக விசாரணைகளோ அல்லது பொறுப்புக்கூறல்களோ வெற்றி பெற்ற வரலாறு இல்லை.

அதற்கான முக்கிய காரணம் அங்கு நிலவும் அரசியல் ஒடுக்குழுறைகள், சுதந்திரமற்ற நீதிப் பொறிமுறை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை என்பவற்றை குறிப்பிடலாம். எனவே அனைத்துலகத்தின் தலையீடுகள் இன்றி சிறீலங்கா அரசும் அதன் படையினரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்பது தமிழ் மக்களின் ஆணித்தரமான கருத்தாக இருக்கின்றது.

அதனையே தற்போது அனைத்துலக சமூகமும் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளது. சிறீலங்காவில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய இனங்களின் இயல்பான வாழ்வு தொடர்பான ஒரு உடன்பாட்டை கூட உள்நாட்டில் நிறைவேற்ற முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது.

அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவின் 13 ஆவது திருத்தச்சட்டம், அது தற்போது உள்ள நிலை, அதனால் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் நிலை என்பவற்றை நாம் இங்கு குறிப்பிடலாம்.

அதாவது, சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு, அதன் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான விசாரணைகள், அதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால். அதற்குரிய ஒரு வழி அனைத்துலக விசாரணை மட்டும் தான்.

அதனை தற்போது அனைத்துலக சமூகம் உணரத்லைப்பட்டுள்ளது. எனவே இந்த புரிதலை வலுப்படுத்தி சிறீலங்கா அரசு மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான சூழ்நிலை ஒன்றை உருவாக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒரு அணியில் பணியாற்ற வேண்டும்.

தமிழ் இனம் தன்னிடம் உள்ள கல்வி வளம், இராஜதந்திரத் தொடர்புகள், அரசியல் தொடர்புகள், நிதி வளம், மனித வலு, இளைய சமூகத்தின் சக்தி என்பவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரும் ஜனநாயக போர் ஒன்றுக்கு தம்மை அனைத்துலக மட்டத்தில் தயார் படுத்தவேண்டிய காலமிது.

மின்னிதழ் – ஆசிரியர் தலையங்கம்

மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவகற்கைகள் பீடமானது இலங்கையின் மனிதவள அபிவிருத்தியை நோகக்காககொண்டு கல்விசார் கூட்டுறவு அறிவுப்பரிமாற்றம் மற்றும் திறன்மேம்பாடுமூலம் திறமையான மனிதவள முகாமைத்துவ நிபுணர்களை விருத்திசெய்வதன் பொருட்டு CIPM அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுமேற்கொள்ளப்பட்டது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பம்மைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்ககைழக வவுனியா வளாகத்தில் இன்றயதினம் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமி மற்றும் CIPM இன் தலைவரான தம்மிக பெர்ணாண்டோ ஆகியஇருவராலும் வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி. மங்களேஸ்வரன், வியாபார முகாமைத்துவ பீடாதிபதி நந்தகோபன், முகாமைத்துவ தலைவர் கொட்வின் பிலிப், CIPM இன்தலைவர் நீல் போககலந்தேஇ கல்விவிவகார பணிப்பாளர் வீரதுங்க மற்றும் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

தேசியமற்றும் சர்வதேச மனிதவளத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவதன் பொருட்டு மனிதவளமுகாமைத்துவத்தின் மூலதத்துவம் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்வதை கருத்தில்கொண்டு பொது விருப்புகளை பின்பற்றுவதற்காக இரு நிறுவனங்களும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இதன்மூலம் வவுனியா வளாகவியாபார கற்கைள் பீடத்தில் CIPM இன் மனிதவள நிகழ்ச்சிதிட்டங்கள் மற்றும் கற்கைநெறிகள் ஆரம்பிக்கபடவுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC00443 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

DSC00477 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

DSC00486 1 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

யார் அந்த அரசியல்வாதிகள்; தேர்தல் ஆணையாளர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய நியமனங்களை தடுத்த அரசியல்வாதிகள் தொடர்பில் பகிரங்கமாக தேர்தல் ஆணையாளர் வெளிப்படுத்தவேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தம்மீதான இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தது.இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கே.அனிதன்,

தேர்தல் ஆணையாளரினால் பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிpத்தல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளது.தேர்தலின்போது வேலையற்ற பட்டதாரிகளின் நியமனத்திற்கு எந்த சிக்கலும் இல்லையென தேர்தல் ஆணையாளர் கூறியிருந்தார் தற்போது கூறுகிறார் 28 கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது தேர்தலை மையப்படுத்தி நியமனக்கடிதங்கள் வழங்கப்படுகிறது அதனால் இதனை நிவர்த்தி செய்யுமாறு கூறியிருந்தார். நாம் கேட்கின்றோம் யாரும் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் தேர்தல் சட்டங்கள் மாறுபடுமா? கிடைக்கப்பெற்ற 28 கடிதங்களும் எந்தக்கட்சியில் இருந்து யார் அனுப்பினார் என்பதை அகில இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் தெரிவிக்கவேண்டும்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் நலனுக்காக இவ்வாறான கல்வித் தூண்களை உடைத்து குழிதோன்டிப்புதைக்கும் அளவிற்கு இவர்களின் செயற்பாடு உள்ளது. எமது கல்விக்கு இடையூறு ஏற்படுத்திய அரசியல்வாதிகளை தேர்தல் ஆணையாளர் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளிபப்டையாக கூற வேண்டும். ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்ஸ அவர்களும் எமது பிரச்சினையை கவணத்திரல் கொள்ளவேண்டும்.

நினைத்து நினைத்தவாறு செயற்பட்டு பட்டதாரிகளின் மனநிலையைக் குழப்பவேண்டாம் வேலையில்லாம் பல போராட்டங்கள் ஆர்ப்ட்டங்கள் செய்து மனநிலையால் பாதிக்ப்பட்ட எங்களை மீண்டும் நியமனம் வழங்கப்போகிறோம் கடிதம் அனுப்புகிறோம் என்றும் கூறி கடிதம் கிடைத்ததும் நாம் அதை ஏற்றுக்கொள்ளும் வேளையில் அவை இரத்து செய்யப்பட்டுளது என கூறும்விடம் எம் மத்தியில் பெறும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து இவ்விடயத்திற்கு பொறுப்பானவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவணம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார் பட்டதாரிகளின் நியமனத்தை இரத்து செய்தமையை கண்டிப்பதாக. முன்னைய அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி பட்டதாரிகளை வயது, தகமை என ஓரம்கட்டியது அப்காலகட்டத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் இறந்த உடலுக்கு உயிர்கொடுப்பது போன்றிருந்தது.ஆனால் தற்போதை அரசாங்கம் பாகுபாடின்றி நியமனம் வழங்குகின்றது. எமது பார்வையில் இது எதிர்கட்சியின் சதியாகவே தெரிகின்றது அகில இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் இவ்வாறான கண்னோட்டத்தில்தான் இதனைப்பார்க்கின்றோம் அரசியல்வாதிகள் உங்கள் அரசியல் பிரச்சினைகளை உங்கள் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். கடிணமாக கற்றுவந்த பட்டதாரிகளை உங்களின் அரசியல் வலையில் சிக்கவைக்காமல் எம் மனநிலையை உணர்ந்து நடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

மட்டக்களப்பு மாவட்டத்தல் 2625 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் அவர்களுக்கு நியமனத்திற்காக என அனுப்பபட்டுள்ள கடிதங்களில் 200 கூட கிடைக்கப்பெற்றதா என்பது சந்தேகமானது இதனையும் கவணத்தில் கொள்ளுமாறு கேட்கின்றோம்

எமது இப்பிரச்சினைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாரள் மகிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ஆகியோர் நியாயமானதுமான நீதியுமான ஒரு முடிவைஎங்களுக்கு கூறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

யாழில் கோண்டாவில் சந்தியில் ‘ஆவா’ குழு அட்டகாசம்.

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்தியில் தரித்து விடப்பட்டிருந்த வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று (05) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் பூட் சிற்றியில் வேலை பார்க்கும் முகாமையாளரின் வாகனம் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என வாகன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக மன்னார் நகரத்தை அடைந்து மன்னார் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மாபெரும் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவுகள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமும் நீதியும் சகலருக்கும் பொதுவானது, பொதுமன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லையா? என்கின்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

அத்தோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் பயங்கரவாத தடைச்சட்டத்தை சட்டத்தை நீக்க உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் – அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு முடிவு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்வதற்கு அனைத்துலக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணைகளில் அமெரிக்க படையினர், தலிபான் படையினர் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நீதியாளர் பியோற் கொப்மன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவவும் தலிபான் படையினரும் அண்மையில் அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்ட பின்னர் இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்புக்களையும் மீறி முற்று முழுதான விசாரணைகளை மேற்கொள்ள சட்டவாளர் பற்றோ பென்சூடா முயற்சி செய்து வருகின்றார்.

அனைத்துலக நீதிமன்றத்தில் அமெரிக்கா உறுப்பு நாடாக இல்லாதபோதும், அவர்கள் ஆப்பகானிஸ்த்தானில் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் ஏனெனில் ஆப்பானிஸ்த்தான் உறுப்பு நாடாக உள்ளது என பற்றோ தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அமெரிக்கா அனைத்துலக நீதிமன்ற பணியாளர்கள் மீது கடந்த ஆண்டு பயணத்தடையையும் கொண்டுவந்திருந்தது.

வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு.

வவுனியா புதூர் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புதூர் காட்டு பகுதியில் நேற்று (05.03) மதியம் 12 மணியளவில் முதிரைமரக்குற்றிகள் கடத்த இருப்பதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பேர்ணான்டு தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடத்த தயாராக இருந்த 15 முதிரை மரக்குற்றிகளும், மரம் அறுக்கும் இயந்திரம், கோடரி, கத்தி மற்றும் பஜாஜ் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியிருந்ததாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

IMG 9de8ea1db2b5aba3698943d316af0acb V வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு.