Home Blog Page 2373

நளினி விடுதலை: அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரமும் அளிக்க ஆணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி  விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

முழு விபரங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி தாக்கல் செய்ய நளினி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தம்மை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்

புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்று கூடிய மக்கள்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச அலுவலகங்களுக்கும் தனியார் துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கூறப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 2000 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் பணிக்கு சமூகம் தருகின்ற நிலையில் இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச மக்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு புதுகுடியிருப்பு பொலிசார் வருகை தந்துள்ள நிலையில் ஆடைத் தொழிற்சாலைக்குள் எவரையும் அனுமதிக்காத நிலையில், ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி உள்ளனர்.

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் சென்ற விசேட குழு ஒன்று குறித்த நபரையும் நாட்டு துப்பாக்கியும் கைப்பற்றியுள்ளது.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்தோடு T56 ரக துப்பாக்கி ரவை ஒன்றும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
625.0.560.350.390.830.053.800.670.160.91 6 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

625.0.560.350.390.830.053.800.670.160.91 2 1 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 4 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (20) காலை 9 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தளம், கறுவலகஸ்வெவ, வணாதுவில்லுவ, பள்ளம, நவகத்தேகம, முந்தல், உடப்பு, சாலியவெவ, நுரைச்சோலை, சிலாபம், வென்னப்புவ, மாரவில, மாதம்பே, கொஸ்வத்தை, தங்கொடுவ, ஆராச்சிகட்டுவ மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கு மீண்டும் நண்பகல் 12 முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பிகா சற்குணநாதன் தேசியப்பட்டியலில் முதலிடத்தில் – எம்.ஏ.சுமந்திரன்.

அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம்.

ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் தேசியப் பட்டியலில் அவரது பெயரை முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.”

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின், எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் – திருகோணமலையில் போட்டியிடும் ச.குகதாசனுக்கு தேசியப்பட்டியல் இடம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ள சூழ்நிலையில் சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆசனங்களைப் பங்கிடுவதென ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்திருந்தோம்.

அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் நியமனக் குழுவொன்றை நியமித்திருந்தது. அந்தக் குழுவின் கூட்டம் 3 தடவைகள் கூடியது. அதில் கூடிய 15 பேரின் முடிவாகவே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக எல்லா ஜனநாயகக் கட்சிகளுக்குள் இருப்பதை போல பலவித கருத்துக்கள் இருந்தாலும் இறுதியில் அனைவரின் சம்மதத்துடன் ஏகோபித்த முடிவாக எடுக்கப்பட்டது.

தனிநபர்களின் முடிவாக அதைக் காண்பிப்பது தவறு. அந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண் வேட்பாளர் சம்பந்தமாகவும் சர்ச்சை ஏற்பட்டது.

பெண்கள் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கருத்து. நிறுத்தப்படும் பெண்கள் வெற்றி பெறக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் யாழ். மாவட்டத்திலும், மட்டக்களப்பில் நளினி ரட்ணராஜாவின் பெயரையும் நியமனக்குழு ஏற்றுக்கொண்டிருந்தது.

மட்டக்களப்பில் நாங்கள் ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, போட்டி போடுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது.

முடிவுகள் எடுக்கப்படாது உத்தியோகபூர்வமாக வெளியாக முன்னர் செய்திகள் கசிந்தமை துரதிஷ்டமான விடயம். நியமனக் குழுவில் இருந்தவர்கள் அதைச் சொல்லியிருக்கக்கூடாது.

மட்டக்களப்பு பெண் வேட்பாளர் நளினி ரட்ணராஜாவை குறிவைத்து மோசமான கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பெண்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை என்பதற்கு இது உதாரணமாகியது.

அம்பிகா, சசிகலா பற்றியும் விமர்சிக்கப்பட்டது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை உற்சாகப்படுத்தி, அவர்களை அரசியலுக்கு வரவழைக்க வேண்டிய சூழலில் இப்படி நிகழ்ந்தமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கின்றோம்.

அம்பிகா இறுதிநேரத்தில் சொந்த காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதைக்கூட, அவரைக் கட்சி நீக்கியதாகவும், எதிர்ப்புக்கள் காரணமாக அவரைச் சேர்க்கவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன.

அது அவரது தனிப்பட்ட முடிவு. போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் அவர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. அம்பிகா எமது தேசியப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.

அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றைப் பார்க்கின்றபோது, அவரை யாழில் போட்டியிட இணங்கினோம்.

ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் அவரைத் தேசியப் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் இருவருக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியிருந்தனர். அந்தப் போராட்டத்தை மகளிர் அணி நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அது தவறு. மகளிர் அணி, கட்சி நியமிக்கும் வேட்பாளர்களைத் தாங்கள் ஆதரிப்பார்கள் என்றும், போராட்டம் நடத்தியவர்கள் தன்னிச்சையாக நடத்தனர் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மதனி கையொப்பமிட்டுள்ளார்.

வேட்பாளருக்கு விண்ணப்பித்த சிலர்தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் துரதிஷ்டவசமானது” – என்றார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

இலங்கையில் இதுவரை பதிவாகிய கொரோனா நோயாளிகள் 59 பேரில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த 25 பேரில் 22 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்களாகும். மற்ற இருவர் பிரித்தானியாவில் இருந்து வந்த நிலையில் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட 20 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2463 ஆகும் அவர்களில் 27 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட அறிவித்தலுக்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் 8437 பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துக் கொண்டவர்களாகும்.

தேசிய பட்டியலில் வடக்கின் முன்னாள் ஆளநருக்கும் இடம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் விரிவுரையாளருமான சுரேன் ராகவனுடைய பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பட்டியலில்,

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,
ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி,
சமூக ஆய்வாளர் கெவிது குமாரதுங்க,
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன் லக்ஷமன் பியதாச,
ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரர் டில்சான்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸசபில்,
முகாமைத்துவப் பணிப்பாளர் தனுஜன தம்மில ரத்மலே,
பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை,
ரூபசிங்க குணவர்தன,
மஞ்சுளா விஜயகோன் திஸாநாயக்க,
வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் அஸ்மின்,
சட்டத்தரணி நிமால் ஆர் ரணவக்க,
சட்டத்தரணி தர்மசேன கலாசூரிய,
விரிவுரையாளர் சுரேன் ராகவன்,
பேராசிரியர் சரித ஹேரத்,
துரைசாமி மதியுகராஜா,
தொன் உபுல் நிசாந்த,
விசேட வைத்திய நிபுணர். ஜி.வீரசிங்க,
சரோஜனி ஜயலத்,
விமல் கி.கனகே,
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,
வைத்திய நிபுணர் சீதா அறுகம்பேபொல,
பியதாச,
பேராசிரியர் ரஞ்சித் பண்டார,
டிரான் அலஸ்,
ஜயந்த பெரேர,
சட்டத்தரணி சாகர காரியவசம்
ஆகியோர் தேசிய பட்டியலில் உள்ளடங்குகின்றானர்.

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிரூபம்

கொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தக உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் மற்றும் தொழில் நிர்ணயச் சபைகள் இன்று (19) முதல் 27 வரையான வழக்கு நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அவசர மற்றும் அத்தியாவசியம் என நீதிபதிகளினால் தீர்மானிக்கப்படும் வழக்குகள் தவிர்ந்த வேறு எந்தவொரு வழக்கும் திறந்த நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் கொண்ட அனைத்து வழக்குகளும் வேறு தினங்களில் அழைக்கப்படுவதுடன், பிணை பெற்றுக்கொள்வதற்கான பிணை கோரிக்கைகள் மட்டும் வழமையான முறையில் இடம்பெறும். நீதிபதியொருவர் மிகவும் அவசிய தேவையொன்றின் காரணமாக வழக்கொன்றை அழைக்க கோரிக்கை விடுத்தால் மு.ப. 10.00 மணிக்கு முன்னர் மனு ஒன்றின் ஊடாக செய்யப்படும் கோரிக்கை மட்டும் கவனத்திற் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சிறைக்காலத்தை நீடித்தல் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வராது, வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பிணை வழங்குதல் தொடர்பாக உள்ள ஏற்பாடுகளை முடியுமானளவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன், அதற்காக நீதிபதிகள் குறித்த பொலிஸ் அதிகார பிரதேசத்தில் பொலிசுடன் உரிய ஒருங்கிணைப்பை பேண வேண்டும்.

மக்கள் ஒன்றுகூடுவதை முடியுமானளவு குறைத்து கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இந்த சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது.

லண்டனில் இருந்து தாயகத்துக்கு திரும்பியவர்கள் கண்காணிப்பில்

இலங்கைக்கு வர முடியாத நிலையில் இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர், நேற்று மதியம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்குச் சொந்தமான யு – எல் – 504 எனும் விமானம் மூலம் லண்டன் நகரில் இருந்து இந்தப் பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இந்த நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகரக் கடைகள் மாலை 3.00 மணியுடன் மூடப்படும்; உயர் மட்ட கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

1. அத்தியாவசியத் தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு பிற்பகல் 3.00 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருள்களை கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ கூட்டமாக வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.

3. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக தண்ணீரில் சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடுதல், உடல்நிலை சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல், மக்கள் கூடுதலாக ஒன்று கூடும் இடங்களை தவிர்த்தல், கைகள் சுத்தமாக இல்லா விட்டால் கண்கள், மூக்கு, வாய், அலது முகத்தை தொடாதிருத்தல், ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்த வரை ஒரு மீற்றர் தொலைவில் இருந்து உரையாடுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சீ, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுதல், ஏதாவது நோய் அறிகுறி இருப்பின் உடன் வைத்தியசாலையை நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

4. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் வருவதனைத் தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

5. வர்த்தக கொள்வனவிற்காக வரும் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பதுடன் தமக்கிடையில் ஒரு இடைவெளியைப் பேணுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

6. அத்தியாவசியத்தேவையுடையோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டை விட்டு வெள்யே வருவதை தவிர்த்தல் வேண்டும்.

7. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தபடுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் வணிகர் கழகம் தீர்மானம் எடுத்து தமது உறுப்பினர்களுக்கு உடனடியாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.