இலங்கையில் கொரோனா தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலித் தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரியயாருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
கொரோனா தொற்று; 24 மணி நேரத்தில் புதிய நோயாளிகள் இல்லை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்கள் யாரும், நேற்று முன் தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரைக்கண்டறியப்படவில்லை எனச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்று சந்தேகத்தில் 255 பேரும், கொரோனாத் தொற்று உடையவர்களாக 102 பேரும் இனங்காணப்பட்டனர். அதிலும் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியதால் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.
மேலும், வடபகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 7 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
கோவிட்-19 – இறந்தோர் எண்ணிக்கை 20,499 ஆக உயர்வு
உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இதுவரை 172 நாடுகளுக்கு பரவியுள்ளதுடன், 20,499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோயினால் இதுவரை 451,355 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக உலகின் சனத்தொகையில் ஏறத்தாள நான்கில் ஒரு பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 738 பேரும், இத்தாலியில் 683 பேரும், பிரான்ஸில் 231 பேரும் பலியாகியுள்ளனர்.
ரஸ்யாவில் ஏறத்தாள 700 பேர் பாதிப்பட்டுள்ளபோதும் யாரும் இதுவரை மரணமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இதுவரை 827 பேர் பலியாகியுள்ளதுடன், 60,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவையோ 30,000 இருப்பதோ 3,000 நாம் என்னசெய்வோம்-ஆதங்கப்படும் ஆளுநர்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் வேளையில்,நியூயோக் பிராந்தியம் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கிவருகிறது.
இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நியூயோக் ஆளுநர் அண்ட்ரூ கியூமோ தமது பிராந்தியத்திலேயே அதிக நோய்த் தொற்று காணப்படுவதாகவும் ஆனால் அதனை எதிர்கொள்ள தம்மிடம் வளங்கள் மிக பற்றாக்குறையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமக்கு 30,000 சுவாசக்கருவிகள் தேவைப்படுகின்ற வேளையில்
3,000 மட்டுமே கைவசம் இருப்பதாகவும் மேலும் 7000 தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைமைகள் தொடர்பில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டிய அவர் உரிய கருவிகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எதிர்வரும் 14 முதல் 21 நாட்களுக்குள் சிகிச்சையளிக்க நியுயோக்கில் 140,000 மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இங்கு வெறும் 53,000 மருத்துவமனை படுக்கைகளே உள்ளன.
முன்னராக 110,000 படுக்கைகள் தேவை என நாம் மதிப்பிட்டிருந்த போதும் தற்போதைய நிலைமையை உற்றுநோக்கும் போது அவை போதாது என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த வளப்பற்றாக்குறைகளை மத்திய அரசு சிரத்தை எடுத்து உடனடியாக நிறைவுசெய்யாவிடின் நியூயோக் மாநிலம் பாரிய விளைவுகளை சந்திக்கும் என்கிறார் அண்ட்ரூ கியூமோ
கைதிகளை விடுவிக்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை
கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு இலகுவில் உட்படும் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசலெற் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை பாதுகாக்க வேண்டிய கடமை நாடுகளுக்கு உண்டு. இந்த வரைசின் தாக்கம் சிறை, பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தடுப்புக்காவல் முகாம்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது எனவே இந்த இடங்களில் அதிகளவானோர் தடுத்துவைக்கப்படுவது ஆபத்தானது.
எனவே ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் பாதிப்புக்கு இலகுவில் உட்படுபவர்கள் மற்றும் சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல்.
வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல் ஒன்றை வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் வழங்கியுள்ளார்.
குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
தற்போதைய அவசரகால நிலைமையில் ஊரடங்கு தளர்த்தியவுடன் மக்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவுசெய்வதற்கு நகரினை நாடிவரும்போது நெரிசல் நிலை ஏற்பட்டு நோய் பரவக் கூடிய நிலை காணப்படுகின்றது.மேலும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டு பின்வரும் வாகனங்கள் சங்கங்களினூடாக பிரதேசங்களிற்கு வருதை தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரக்கறிகளை விற்க முடியாத விவசாயிகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் தொடர்புகொண்டு அதனை விற்க முடியவும். அல்லது எமக்கு தகவலை தெரிவிக்கமுடியும்.
மரகறிகளை கொள்வனவு செய்வோர் நாளையதினம் 26.03.2020 வீடுகளிற்கு நேரடியாக வருகை தருவார்கள்.
அந்தவகையில் பண்டாரிகுளம், தோணிக்கல், உக்குளாங்குளம் மற்றும் கூமாங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர் விபரம்:
விஜிதரன், சிறிகாந்த், சிவிநீதன் : 0771783373
பூந்தோட்டம், தாண்டிக்குளம், திருநாவற்குளம் பட்டாணிச்சூர்புளியங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர்:
மயூரன், மதனகுமார், ஜசதரன்: 0777168281
மகாறம்பைக்குளம், றம்பைக்குளம், சின்னபுதுக்குளம், குடியிருப்பு, பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, கோவில்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர்:
பத்மநாதன்- 0773815468, செல்வேஸ்வரன்-07631484560
மரக்காரம்பளை, வேப்பம்குளம், நெளுக்குளம், சாம்பல்தோட்டம், சிவபுரம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர்:
தியாகரூபன்- 0774960154, யதுர்சன்- 0769712309, பாஸ்கரன்- 0775424402
ஆசிகுளம், பூந்தோட்டம், சாந்தசோலை, கோயில்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர்:
முத்துவேலு நேசராசா – 0766709433
புதுக்குளம், பத்தினியார்மகிழங்குளம், வேப்பம்குளம், பட்டாணிச்சூர்புளியங்குளம் பிரதேசங்களிற்கு வாகனத்தில் வருகை தருவோர்.
யோகேஸ்வரன்- 0763575748
தற்போது அரசாங்கம் அனுமதியினை பெறாது வாகனங்கள் மூலம் மரக்கறி விற்பனையில் ஈடுபடலாம் என அறிவித்துள்ளது. மூன்று மொழிகளிலும் மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என காட்சிப்படுத்தி வாகனத்தில் செல்ல முடியும். என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளரின் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுகொள்ளமுடியும்.-0778317443.
தமிழகத்தில் 1184 கைதிகள் பிணையில் விடுதலை
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக சிறைகளில் இருந்து 1,184 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று(25) முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி மதுரையில் பலியாகியுள்ளார்.
இந்த வைரஸ் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்தற்கு சிறைத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிறையில் கைதிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளின் எண்ணிக்கை குறைக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கமைவாக முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிணை கிடைக்காமலும்இ பிணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருந்தவர்களையும் பிணையில் விடுதலை செய்வது என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
கடந்த இரு நாட்களில் தமிழக சிறைகளில் இருந்து 1,184 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமாக இருக்கும் 4ஆயிரம் பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை பெறப்பட்டு வருகின்றது.
எனக்கும் கொரோன தொற்று இருக்கும் என நினைக்கிறேன்
எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று இளம் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் டீன் ஏஜ் சிறுமி கிரேட்டா துன்பர்க். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர், ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர் என்ற இயக்கத்தின் மூலம் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் சூழலியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கிரேட்டா துன்பர்க் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சுமார் 10 நாட்களுக்கு முன்னதாக எனக்கு சில அறிகுறிகள் ஏற்பட்டன. சோர்வாக உணர்ந்தேன். நடுக்கம் ஏற்பட்டது. தொண்டை வலி, இருமல் ஆகியவை ஏற்பட்டன.
மத்திய ஐரோப்பாவில் இருந்து வந்த பிறகு இப்படி ஆனது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் தந்தையும் தனிமையில் இருக்கிறோம். எனினும் இப்போது ஓரளவுக்குப் பரவாயில்லை. விரைவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனில் இதுவரை 2,272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மோசமான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஆன்லைன் மூலம் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட சூழலியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா
கொரோனா என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற நச்சுக் கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது. மனித இன வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல தொற்று நோய்கள் வந்திருந்தாலும், கோவிட்-19 உலக நாடுகளுக்கு இடையிலான உறவிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
சுகாதாரப் பிரச்சினையில் இருந்து பொருளாதாரப் பிரச்சினை வரை
சீனாவின் முக்கிய நகரமான வூஹான் தனிமைப்படுத்தப்பட்ட போதும், அதைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட போதும், பெரும் பொருளாதாரப் பிரச்சினை எழுந்தது. சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டு 2020இன் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் தொழிற்றுறை உற்பத்தி 13.5% வீழ்ச்சியடைந்தது. 1979இன் பின்னர் சீனாவின் பொருளாதாரம் குன்றப் போகின்றது எனக் கருதப்படுகின்றது. சீனாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும், உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவில் இருந்து அந்த நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதி இனிக் குறையும் போது சீனாவின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றது.
சீனாவின் கௌரவப் பிரச்சினை
சீனாவில் இருந்து தான் கோவிட்-19 உருவானது என்பதும் சீனா ஆரம்பத்தில் கோவிட்-19 கிருமிகள் தொடர்பாக உண்மையான செய்திகளை வெளிவிடவில்லை என்ற குற்றச்சாட்டும் சீனாவிற்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. சீனா தான் கோவிட்-19 கிருமிப் பரவலை மற்ற நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது எனச் சொல்கின்றது. சீன அரசு மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளால் 7.5மில்லியன் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்ற ஒரு பிரித்தானியப் பல்கலைக் கழகம், சீனா தனது நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்கு முன்னர் எடுத்திருந்தால் 95% உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச் சாட்டையும் முன் வைத்தது. உலக சுகாதார நிறுவனம் சீனாவை வாயாரப் புகழ்ந்துள்ளது.
முதற்பலி எரிபொருள் துறை
கோவிட்-19இன் முதற்பலி எரிபொருள் விலையாகும். கோவிட்-19 நச்சுக் கிருமிகள் பரவுவதைத் தடுக்க மக்களின் உள்நாட்டுப் போக்குவரத்தும் பன்னாட்டுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்ட போது எரிபொருள் பாவனை குறைந்ததால் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தது.
அதனால் எரிபொருள் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா விடுத்த வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்தபோது சவுதி சினம் கொண்டது. இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, எரிபொருள் விலை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச முயற்ச்சி செய்ய முன் வந்துள்ளது.
நாட்டுக்கு நாடு வித்தியாசமாக கையாளப்பட்ட கோவிட்-19
சிறிய நாடென்பதாலும் சிறப்பாக முகாமைப்படுத்தப்படுவதாலும் சிறந்த மருத்துவத் துறையைக் கொண்டிருந்தபடியாலும் சிங்கப்பூர் கோவிட்-19 நச்சுக் கிருமிப் பரவலை சிறப்பாகக் கையாண்டது. சிறப்பான ஒற்றையாட்சியைக் கொண்ட தென் கொரியாவாலும் சிறந்த முகாமையைக் கொண்ட ஜப்பானாலும் கோவிட்-19இன் பரவலை தடுக்க முடிந்தது.
தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மற்ற ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன.
துருக்கிய ஆட்சியாளர்கள் முதலில் தமது நாட்டில் கோவிட்19 நச்சுக்கிருமி பரவவில்லை என்றது. இஸ்ரேல் தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை கோவிட்-19இற்கு எதிராக எடுத்தது. இலங்கை அரசு கோவிட்-19இல் அதிக கவனம் எடுத்தது. விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி அதன் அரசமைப்பு யாப்பின் 19வது திருத்தத்தை ஒழிப்பதில் அதிபர் அக்கறையாக உள்ளார். பின்னர் தேர்தல் பின்போடப்பட்டுள்ளது.
பண்டங்கள் அல்ல மனிதப் போக்குவரத்தே பிரச்சனைக்குரியது.
சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கோவிட்-19இன் பாதிப்பு பல ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க குறைந்த அளவில் இருக்கின்றது.
கோவிட்-19 நச்சுக் கிருமியின் ஆரம்ப இடமான வூஹான் நகரில் இருந்து நேரடி விமானச் சேவையைக் கொண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று நோய்ப் பரவல் துரிதமாகவும் அதிக அளைவிலும் இருந்தது. கோவிட்-19 நச்சுக் கிருமி மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதே அதிகம் அது உணவுப் பொருட்களிலோ மற்ற வர்த்தகப் பொருட்களிலோ அதிக மணித்தியாலங்கள் உயிருடன் இருக்காது.
அமெரிக்கப் படையினர் பரப்பினர் என்கின்றது சீனா
சீனாவின் வூஹான் நகரில் நடந்த பல நாடுகளின் படையினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபெற வந்த அமெரிக்க படையினர் அங்கு கோவிட்-19 நச்சுக் கிருமியைப் பரப்பினர் என சீனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளரான Zhao Lijian திட்டமிட்டு இப்படி ஒரு கதையைப் புனைந்து சீன சமுகவலைத்தளங்களில் பரவ விட்டார் என அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலங்களில் சீனா எடுத்த பிழையான நடவடிக்கைகளை மறைக்கவே இப்படி ஒரு கதையை சீனா கட்டிவிட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்கர்கள்.
போர் அனுபவமில்லா சீனாவின் போர்க்கால நடவடிக்கை
சீனாவின் படைத்துறையைப் பற்றி விமர்சிக்கும் மேற்கு நாட்டவர்கள் சீனர்களுக்கு போர் அனுபவம் இல்லை என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவார்கள். ஆனல் கோவிட்-19 நச்சுக் கிருமியை ஒழிப்பதில் எடுத்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஒரு போர் நடந்தால் அதை சீனா எப்படிக் கையாளும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் சீனா மனித இயந்திரங்களைப் பயன்படுத்தியது. நோயால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருந்துகளையும் உணவையும் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பியது. செயற்கை நுண்ணறிவில் சீனா எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதையும் சீனாவின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.
வித்தியாசமாகக் கையாள முயன்ற பிரித்தானியா
இரண்டு உலகப் போரிலும் பிரித்தானியா தனது மக்களின் உயிர்களின் பாதுகாப்பிலும் பார்க்க எதிரியை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தனது மக்களின் அதிக உயிரிழப்புக்கள் அவர்களை தீவிரமாகப் போரில் ஈடுபடத் தூண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அது போலவே கோவிட்-19 கிருமிகளைப் பரவ விட்டு அதை அழிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டு சீனாவில் இருந்து வைக்கப்பட்டது. பிரித்தானியா ஆரம்பத்தில் பாடசாலைகளைக் கூட மூடாமல் இருந்தது ஆனால் பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்று அதனால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என எச்சரித்தைத் தொடர்ந்து பிரித்தானியா தன் அணுகுமுறையை மாற்றியது.
அவசர நிலையில் அமெரிக்கா
இணைப்பாட்சி ஆட்சி முறைமையைக் கொண்ட அமெரிக்காவில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான வகையில் கையாளும் நிலையைத் தவிர்க்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அவர் எடுக்கும் முயற்ச்சிக்கு கோவிட்-19 கிருமிகளையும் பாவிக்க முயன்றார். அதனால் முதலாவதாக சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகள் வருவதைத் தடை செய்தார். அதே போல் ஐரோப்பிய நாடுகள் செய்யாதபடியால் ஐரோப்பாவில் இருந்தும் மக்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதைத் தடை செய்தார். கோவிட்-19 ஆரம்பித்த போது அமெரிக்கத் தொற்று நோய் நிபுணர்கள் சீனா சென்று ஆய்வு நடத்த சீனா மறுத்திருந்தது. இப்போது பல சீன நிபுணர்கள் இத்தாலி உட்பட பல நாடுகளுக்கு உதவச் சென்றுள்ளனர்.
சீனா – அமெரிக்கா இடையிலான முரண்பாடு கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது.
பிரித்தானிய அரசகுடும்பத்தை தாக்கியது கொரோனா
பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்கம் அரன்மனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
71 வயதான வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் இற்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் குறைவான அறிகுறிகளை கொண்டுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அவர் ஸ்கொட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தயாரான மகாராணியாரை இரு வாரங்களுக்கு முன்னர் சாள்ஸ் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.