எனக்கும் கொரோன தொற்று இருக்கும் என நினைக்கிறேன்

எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று இளம் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் டீன் ஏஜ் சிறுமி கிரேட்டா துன்பர்க். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர், ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர் என்ற இயக்கத்தின் மூலம் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் சூழலியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று  கிரேட்டா துன்பர்க்  சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சுமார் 10 நாட்களுக்கு முன்னதாக எனக்கு சில அறிகுறிகள் ஏற்பட்டன. சோர்வாக உணர்ந்தேன். நடுக்கம் ஏற்பட்டது. தொண்டை வலி, இருமல் ஆகியவை ஏற்பட்டன.

மத்திய ஐரோப்பாவில் இருந்து வந்த பிறகு இப்படி ஆனது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் தந்தையும் தனிமையில் இருக்கிறோம். எனினும் இப்போது ஓரளவுக்குப் பரவாயில்லை. விரைவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனில் இதுவரை 2,272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மோசமான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஆன்லைன் மூலம்  கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட சூழலியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.