கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (30) தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 11,591 பேர் மரணமடைந்துள்ளதுடன், இன்று 812 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் இதுவரையிலும் 7,340 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 812 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர். 85,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரையில் 2,945 பேர் மரணமடைந்துள்ளதுடன், 156,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் இல் 3,024 பேர் மரணமடைந்துள்ளர். இன்று அங்கு 418 பேர் பலியாகியுள்ளனர். 44,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இன்று 180 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 1,408 பேர் மரணமடைந்துள்ளதுடன், 22,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் இது வரை 775,000 இற்கு அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 160,000 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும், சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும் இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள் தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை
சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் விளைத்து வரும் மனித அவலங்களால் உலகே அரசியல் வேறுபாடுகளை மறந்து மனிதாயத்துடன் ஒருங்கிணைந்து மனிதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இணைந்து செயற்படுகின்றது.
ஆனால் சிறிலங்கா மட்டும், மனிதாயத்திற்கு எதிரான குற்றமும்,யுத்தக் குற்றமுமான, 5வயதுச் சிறுவரும் இரண்டு இளைஞர்களும் உட்பட எட்டுத்தமிழரை, அவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொண்டுசெல்லப்பட்ட தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களைத் தேடிச் சென்ற போது, இனஅழிப்புச் செய்தமைக்காகச், சிறிலங்கா நீதிமன்றத்தாலேயே 2015இல் மரணதண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளியான சிறிலங்கா இராணுவச் சிப்பாய் சுனில் ரட்நாயாக்காவை விடுவித்துச், சட்டத்தின் ஆட்சியை கொரோனாவைச் சாட்டாக வைத்து தாங்கள் நினைத்தபடி தங்கள் கையில் எடுத்து நீதியையும் மனித உரிமையையும் அழித்துள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை குற்றவாளியை விடுதலை செய்ததின் வழி சிறிலங்கா அரசுää அங்கு நீதியை நிலைநாட்டுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபெட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பிராந்தியப்பணிப்பாளர் மினாட்சி கங்குலி சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவால் நீதியை நிலைநாட்ட முடியாதென்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
போர்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபையால் அடையாளம் காணப்பட்ட சவீந்திர சில்வாவைப் இராணுவத்தளபதியாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மற்றொரு படைஅதிகாரியான காமால் குணரட்ணாவை பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து இவர்களின் வழிநடத்துதலிலேயே தற்போதைய கொரோனோ வைரஸ் தொடர்பான நடவடிக்கைக் குழுவையும் செயற்பட வைத்துள்ளமை சிறிலங்காவில் நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றின் தேவையைத் தெளிவுபடுத்தியுள்ளது எனவும் அவர் விளக்கியுள்ளார்.
அனைத்துலக நீதியாளர் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக்பிராந்தியப் பணிப்பாளர் பிரடெறிக் றவ்ஸ்கி அவர்களும் இத்தகைய மன்னிப்பு என்பது அனைத்துலக நீதி விதிகளுக்கு முரணானது. எவ்வளவு பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் படையினர் நீதிக்கு விதிவிலக்கானவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. மக்கள் கொரோனா வைரஸ் இன் தாக்கம் தொடர்பான அச்சத்தில் உள்ளபோது அவர்களின் மனங்களை மேலும் பாதிக்கும் வண்ணம் இவ்விடுதலை அமைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடவே தான் அரசத்தலைவராகப் பதவியேற்றால் படையினர் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற தனது உறுதிமொழியைத் தற்போதைய அரசதலைவர் நிறைவேற்றியுள்ளார் எனக் குறிப்பிட்ட அவர் சிறிலங்காவின் இந்த நடவடிக்கையைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறாக உலகு சிறிலங்காவுக்கு தனது அதிருப்பதியைத் தெரிவிக்கும் இந்நேரத்தில் இலங்கையின் நீதியரசராகவும், வடமாகாணசபையின் முதலமைச்சராகவும் அனுபவமுடைய சட்டஅறிஞரான விக்கினேஸ்வரன் அவர்கள் அனைத்துலகத் தூதரகங்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பிய ஊடக அறிக்கையில் சிறிலங்கா ஐக்கியநாடுகள் சபையின் உறுப்பு நாடாக இருக்கும் தகுதியைக் கொண்டுள்ளதா என ஐக்கியநாடுகள் சபை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் போர்க்குற்றவாளிகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்கள். தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்தவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்போ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்படக் கூடிய இதையொத்த நீதிவிசாரணை ஒன்றிலோ நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அர்த்தமுள்ள இந்தச் சட்டவழிகாட்டலை அனைத்துலகத் தமிழர்களும் இணைந்து முன் எடுத்து சிறிலங்காவை நீதியின் முன் நிறுத்த வேண்டிய பெரும்பொறுப்பைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பதை ‘இலக்கு’ நினைவுறுத்த விரும்புகிறது.
மேற்குலகின் பொருளாதார தடைகளால் சுமார் 60 ஆண்டுகளாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் கியூ பாவளர்ச்சியடைந்த நாடான இத்தாலிக்கு தனது மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது.
1959 இல் அமெரிக்க கைப்பொம்மை கொடுங்கோல் ஆட்சியை பிடல் காஸ்ரோ தலைமையிலான புரட்சி வீழ்த்தியது.அங்கு சோஷலிச அரசு நிறுவப்பட்டது.அன்றிலிருந்து அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் அத்தேசத்தின் மீது பொருண்மிய தடைகளைக் கொண்டுவந்தன.
அமெரிக்கா ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ள வழிகளில் முயற்சித்தபோதும் காஸ்ரோவை படுகொலை செய்ய நூற்றுக்கணக்கான முறை முயன்றபோதும்> அவையனைத்தும் கியூபாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
உணவு,மருந்து உள்ளிட்ட கடுமையான பொருளாதார தடைகளை அந்த நாடு எதிர்நோக்கியபோதும் கல்வியறிவில் நூறு சதவீதத்தை எட்டியது.விவசாயத்தை பெருக்கியது.பற்றாக்குறைகள் நிலவியபோதும் பட்டிணியற்ற ஒரு நிலையை அது பேணியது.
நவீன தொழிநுட்ப சாதனங்களோ ஏனைய துறைசார் வளங்களோ இல்லாத நிலையிலும் தொழிற்றிறன் வாய்ந்த மருத்துவர்களையும் செவிலியர்களை கியூபா உருவாக்கியது.அவர்களின் திறமையையும் அர்பணிப்புகளையும் உலகம் இன்று வியந்து நோக்குகிறது.
கஸ்ரோவோடு புரட்சிக்கு தோளோடு தோள்நின்ற சேகுவேரா ஒரு மருத்துவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவரின் ஆலோசனை அல்லது முன்னுதாரணம் கூட கியூப மருத்துவத்துறை வளச்சியில் தாக்கத்தைச் செலுத்தும் ஒரு காரணியாக அமைந்திருக்கலாம்.
இத்தாலியில் கிட்டத்தட்ட 98,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.10,000 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இத்தாலியின் கட்டுப்பாட்டை மீறியதாக இந்த பயங்கர நிலைமை தொடர்கிறது.
ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கூட உதவிக்கு வராத நிலையில், சின்னஞ்சிறிய கரிபியன் நாடான கியூபா தனது தனித்திறமை வாய்ந்த வைத்திய குழுவினரை அங்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த குழுவினர் இத்தாலியை சென்றடைந்ததும் பெரும் நம்பிக்கையுடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது.
52 மருத்துவர்கள் மற்றும் செவிலியரை உள்ளடக்கிய இந்த குழு, தமது பணிகளை உடனடியாக ஆரம்பிக்கும் என அறியமுடிகிறது. கியூபா இவ்வாறான மனிதாபிமானப் பணியை மேற்கொள்வதொன்றும் புதிய விடயமல்ல. ஆனால் தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு நிற்கும் ஒரு மேற்குநாட்டுக்கு தனது வைத்திய உதவியை வழங்குவது இதுவே முதல்தடவையாகும்.
உலகில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடர்கள், தொற்று நோய்களின் போது கியூபா மேற்கொண்ட மனிதாபிமான மருத்துவப் பணிகள் போற்றத் தக்கவை. சிலி, நிகரகுவா,ஈரான், ஹெய்டி போன்ற நாடுகளில் நில நடுக்கங்கள் மற்றும் பெரும் புயல்கள்,ஏற்பட்டபோதும் வெனிசூலாவில் பாரிய மண்சரிவு இடம்பெற்ற போதும் கியூபா விரைந்து உதவிக்கரம் நீட்டியது.
2004ல் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் போது இ இந்தோனீசியா வின் பண்டா ஆச்சே, இலங்கை போன்ற நாடுகளில் கியூபா தனது மனிதநேய மருத்துவ பணிகளை மேற்கொண்டது.
கியூபாவைதனிமைப்படுத்தி,கொடுமையான பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த நிலையிலும் ‘பகைவனுக்கும் அருள்வாய் ” என்ற வகையில் தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியது கஸ்ரோவின் கியூபா.
அமெரிக்காவில் வீசிய கத்ரீனா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகளில் உதவிவழங்கவென 1500 பேர் கொண்ட மருத்துவ உதவிக்குழுவை தயார் நிலையில் கியூபா வைத்திருந்தது. ஆனால் தனது வறட்டு கௌரவத்தால் அதனை மறுத்தது அமெரிக்கா.
எல்லாவற்றிற்கும் மேலாக 2013 இல் மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகிய வேளை தனது 460 பேர் கொண்ட மருத்துவக் குழுவை எந்த தயக்கமும் இன்றி அனுப்பிவைத்தது கியூபா தேசம்.
தற்போது ஏற்றப்பட்டுள்ள இந்த உலகளாவிய கொரோனா தொற்று பேரபாயத்தில் கியூபா வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆறாவது மருத்துவ உதவி நடவடிக்கையே இந்த இத்தாலி நடவடிக்கையாகும்.
இதற்கு முன்னராக வெனிசுலா மற்றும் நிகரகுவா,ஜமைக்கா, சுரினாம் மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தனது மருத்துவ குழுக்களை கியூபா அனுப்பியுள்ளது.
‘நாங்கள் அனைவரும் பயப்படவே செய்கிறோம் . ஆனால் ,இது நிறைவேற்றவேண்டிய ஒரு புரட்சிகர கடமையாக உள்ளது . எனவே நாங்கள் பயத்தை நீக்கி ஒரு பக்கமாக வைக்கிறோம்’
என குழுவின் தலைவரும் தீவிர சிகிச்சை நிபுணருமான லியோனார்டோ பெர்னாண்டஸ் இத்தாலிக்கு புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தான் பயப்படவில்லை என்று கூறுபவர் ஒரு சூப்பர் கீரோவாக இருக்கலாம் . ஆனால் நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல. நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்.”
லைபீரியாவில் எபோலாவுக்கு எதிரான நடவடிக்கையிலும் பங்குகொண்ட இவரின் எட்டாவது அனைத்துலக பணி இதுவாகும்.
பல நாடுகளாலும் கரைதட்ட அனுமதி மறுக்கப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான பிரித்தானிய பயணிகள் கப்பலை எந்த தயக்கமும் இன்றி தனது துறைமுகத்தில் கரைதட்ட அனுமதியளித்ததன் மூலம் தனது போற்றத்தக்க மனிததத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது அந்த சின்னஞ்சிறிய தேசம்.
தமது பயணிகள் 600 பேரினது நலனில் கியூபா காட்டிய அக்கறைக்காகவும், வழங்கிய உதவிகளுக்காகவும் பிரித்தானியா கியூபாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று ஆறு தசாப்தங்களாக கியூபாவை ஒதுக்கி, அதற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் மேற்குலகம் இனியாகிலும் உண்மைகளை உணர்ந்து ஆபத்தில் கைகொடுப்பவனே உண்மையான நண்பன் என்பதற்கமைய கியூபாவுடன் நல்லுறவை ஏற்படுத்த முன்வரவேண்டும்.
இன்று கியூபா மட்டுமன்றி சீனா,மற்றும் ரசியா போன்ற நாடுகளே இந்த பேரிடரில் மேற்குலக நாடான இத்தாலிக்கு விரைந்து உதவிகளை வழங்குகின்றன. சீனா மருத்துவ உதவிக்குழுக்களையும் மருத்துவ உபகரணங்களையும் ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளது.
ரசியா தனது எட்டு படைத்துறை நடமாடும் மருத்துவக் குழுக்களை இத்தாலிக்கு அனுப்புகிறது. அத்துடன் கிருமிநீக்கம் செய்யும் வாகனங்கள் மற்றும் மருத்துவ பொருட்களையும் அது அனுப்புகிறது. குறிப்பாக தொற்றுநோயியல் வைத்திய நிபுணர்ககள் 100 பேர் அனுப்பிவைக்கப் படுவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவோ அல்லது இத்தாலியின் மற்றைய நட்பு நாடுகளோ உடனடியாக ஓடிவரவில்லை. அமெரிக்காவாலும் சில மேற்கு நாடுகளாலும் எதிரியாக காட்டப்பட்ட நாடுகளே இன்று களத்தில் நிற்கின்றன.
இந்த யதார்த்தத்தை மேற்குலகம் இந்த சந்தர்ப்பத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும். தனக்கு வேண்டாதவர்களை எல்லோருக்கும் எதிரியாக காட்டும்,தன்நலன் மட்டுமே சார்ந்து செயற்படும் சக்திகளை புரிந்து கொண்டு உண்மையான நேசசக்திகளுடன் கைகோர்த்து பயணிப்பது உலகுக்கு உகந்ததாகும்.
>மறைந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஆனந்தகுமாரசாமிக்கு வவுனியா சட்டத்தரணிகள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
ஆனந்தகுமாரசாமியின் மறைவுக்கு வவுனியா சட்டத்தரணிகளான தாம் இறுதி அஞ்சலியையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து கொள்வதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
1970களில் அன்னார் நீதிபதியாக வவுனியாவில் கடமையாற்றியபோது இளம் சட்டத்தரணியாக நான் தொழிலை ஆரம்பித்திருந்தேன்.
சட்ட ஞானமும் மற்றவர்களை மதிக்கும் பண்பும் கொண்ட ஓர் உயர்ந்த நீதிபதியாவார். இக் குணாதிசயங்களே அவரை இந்த நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.
அவரது இழப்பு எம் அனைவருக்கும் பேரிழப்பாகும். நான் தொழில்புரிந்த நீதிபதிகளில் அவர் ஓர் கனவான் நீதிபதியாவார் என தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைக்காக தண்டனை பெற்று வரும் 7பேரையும் அவர்களின் வீடுகளில் இருக்க அனுமதிக்குமாறு பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரேனா வைரஸ் தாங்கத்தினால் சமூக விலகல் தேவைப்படுகின்றது. சிறைகள் சமூக விலகலுக்கு உகந்தவை அல்ல. எனவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இந்த 7 கைதிகளையும் வீடுகளில் இருக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 1071பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமூக விலகலை பின்பற்றும் விதமாக சில சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பபட்டுள்ளனர்.
சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தில் உள்ள சிறைவாசிகள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து 58 நவீன செல்போன்கள் வாங்கப்பட்டு தினமும் ஒவ்வொரு கைதியும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வீடியோ அழைப்பில் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த வசதி முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 கைதிகளையும் பரோல் போன்ற நிபந்தனை விடுமுறையில் அனுப்பி வைக்குமாறு அற்புதம்மாள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அற்புதம்மாள் தனது ருவிற்றர் பதிவில் நோயாளிகள், 10 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளை வீட்டிற்கு அனுப்பி அவர்களை தமது வீடுகளில் இருக்க அனுமதியுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். 7 தமிழர்களையும் விடுவிக்குமாறு தமிழக ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பியும் இன்னும் அதன் மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அற்புதம்மாள் வேதனை தெரிவித்து ருவிற் பதிந்துள்ளார்.
வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
காமினி மகாவித்தியாலய வீதி, ஹரவப்பத்தானை வீதி போன்ற பகுதிகளில் நேரடியாக விவசாயிகள் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் அதிகளவில் வவுனியா நகரிற்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் விவசாயிகள் தவிர்ந்த பலரும் மரக்கறி வியபாரங்களில் ஈடுபடுவதன் காரணமாகவும் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள உள்ளுர் மொத்த மரக்கறி வியாபார சந்தையின் வியாபாரம் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்டு மாலை 02.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்குரிய மரக்கறிகள் இன்று வந்துள்ளமையினால் மொத்த மரக்கறி வியாபார சந்தையில் அதிகளவான மரக்கறிகள் தேங்கி கிடப்பதை காணக் கூடியதாக இருந்தது. இவ் மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு முடியாமல் இவ்வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால் தமது பொருட்களை முன்பு போன்றே விற்பனை செய்வதற்கு நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து தர வேண்டும் என்பதே இவ்வியாபாரிகளின் கேள்வியாக உள்ளது
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை வீடொன்று தீ பிடித்து எரிந்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது இந்த தீ விபத்து மின்சார ஒழுக்குக் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தினால் வீட்டில் இலத்திரனியல் பொருட்கள் சேதமடைந்துள்ளதுள்ளது
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபாயவின் செயற்பாடு இலங்கை நீதித்துறைக்கு விழுந்த பேரிடியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இறமையின் பெயரால் குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கினை உடன் கைவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிருசுவிலில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட எண்மரின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இலங்கை நீதித்துறைக் கட்டமைப்பின் உயரிய இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த சுனில் ரத்தநாயக்க என்ற முன்னாள் இராணுவ வீரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நடைபெற்ற இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான நீதியைக் கோரும் செயற்பாட்டில் பத்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
அவ்வாறிருக்கையில் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முன் கூட்டமைப்பு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக வடகிழக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். எனினும் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேரெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே என்பது குறிப்பிடப்படாத நிலையிலும், இனப்படுகொலையே நடந்தது என்பது சுட்டிக்காட்டப்படாத நிலையிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை கூட்டமைப்பு ஆதரித்தது. அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கும் அளவிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பிலான தீர்மானத்தின் பரிந்துரைகளை மலினப்படுத்துவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது.
இந்தவிடயங்களை நாம் அக்காலத்தில் கூட்டமைப்பினுள்ளேயே சுட்டிக்காட்டியபோது அவற்றை முழுமையாக மறுதலித்திருந்ததோடு அதன் பின்னர் தலா இரண்டு வருடங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகசாத்தினையும் எமது எதிர்ப்புக்களையும் கடந்து பெற்றுக்கொடுத்திருந்தது.
அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலிருந்து தேனிலவு காலத்தில் உறவுகள் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட விட்டுக்கொடுப்புக்களால் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான பேரம்பேசல்கள் முற்றாக கைநழுவிச் சென்றன.
இதன் காரணமாகவே கடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அச்சமின்றி ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்காக அறிவித்ததோடு ஜனநாயகத்தினை மறுதலிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது.
கடந்தகாலத்தை போன்றதான ராஜபக்க்ஷவினரின் ஜனநாயக மறுதலிப்புச் செயற்பாடுகள் தற்போது ஒன்று இரண்டு அல்ல எண்மரை கொடூரமாக படுகொலைசெய்த வழக்கில் இந்த நாட்டின் உயர் நீதிமன்றமே குற்றவாளியாக தீர்ப்பளித்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஒருவருடம் நிறைவடைவதற்குள் துணிச்சலாக பொதுமன்னிப்பளிக்கும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது.
ஆகவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரங்களை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்துவதற்குரிய ஏதுநிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக தமிழ் மக்களின் ஆணையை நிராகரித்து சுயலாப அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.
ஆகவே தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நடந்தது என்பதையோ, சர்வதேச விசாரணை முடிவடையவில்லை என்பதையோ கூறுவதற்கு திராணியற்று அதற்கு நேரெதிரான கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே தொடரப்போகின்றன.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவல் அச்சத்தின் மத்தியிலும் நாடாளவிய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் 84தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளன.
எனவே சர்வதேச தரப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் போக்கு தெளிவாக புலப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளுக்காக உடன் தலையீடுகளை செய்யவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.