உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா பரவுவதைத் தவிர்ப்பதற்காக மக்களை தனிமைப்படுத்துதல் என்ற நடைமுறைக்கு அமைய பல நாடுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்களை வீடுகளிற்குள் முடக்கியுள்ளது.
இந்தியாவிலும் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மார்ச் மாதம் நள்ளிரவு 12மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊரடங்குச் சட்டமானது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பானது மக்களை புரட்டிப் போட்டுள்ளது. அத்துடன் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கமைய மக்களின் அன்றாட தேவைகளுக்காக வீட்டிற்கு வெளியில் சென்று வரலாம் என்பது நடைமுறை. இதனால் காய்கறி சந்தைகள், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருக்கின்றது.
மேலும் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அரசாங்கம் சம்பளங்களை வழங்குகின்றது. அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறமுடியாது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஐ.ரி.நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதேபோல், வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. ஐ.ரி. நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வேறு நிறுவனப் பணியாளர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றாடம் உழைத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றும் பொது மக்கள் இந்த ஊரடங்குச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து தொழிற் சாலைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 21 நாள் முடக்க அறிவிப்பால் இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், நிறுவன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர் ஒருவர் செலவுகளை சமாளிக்க முடியாது கடந்த 25ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஆந்திர மாநிலத்தில் நோயுற்று இறந்த தனது 8 வயது மகனை பணம் இல்லாத காரணத்தினால் அவரின் தந்தை தூக்கிச் சென்று மயானத்திற்கு சென்ற பதிவுகளும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அன்றாடம் வேலை செய்து தங்களின் குடும்பங்களை பராமரித்து வந்த சிறிய வியாபாரிகள், சிறிய கடை வைத்திருப்போர் தங்களின் அன்றாட வருமானத்தை இழந்துள்ளனர்.
அத்துடன் இந்தியாவில் கோவில்களே அதிகம் காணப்படும். தற்போது கோவில்கள், வணக்க ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுவதில்லை. எனவே பூந்தோட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அறுவடைகளை தற்போது வெளியில் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதால், அவற்றை கால்நடைகளுக்கு உணவாக்குகின்றனர். இது அவர்களை இலட்சக் கணக்கான ரூபாய்களை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.கோவில்களில் பூசை செய்யும் அட்சகர்கள் தங்களுக்கான வருமானத்தையும் இழந்துள்ளனர்.
அத்துடன் கோவில்களில் பிச்சை எடுப்பவர்களின் தொகை தமிழ்நாட்டில் அதிகம். தற்போதைய 144 தடை உத்தரவையடுத்து, அவர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு சேவை அடிப்படையில் உணவு வழங்கி வரும் மனிதாபிமான தொண்டர்களையும் உணவு வழங்க வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால், இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்கள், உணவு விடுதிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. எனவே இவற்றில் வேலை செய்த பணியாளர்கள், உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் செல்ல முடியாத நிலையில் இருப்பதுடன், அவர்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உணவகங்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர், வெளிநாட்டவர்கள் வந்து தங்கி இருக்கும் தங்கும் விடுதிகள் (Guest house) வைத்திருப்பதுடன், அவர்களுக்கான போக்குவரத்து, மற்றும் உணவு வழங்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இதுவே அவர்களுக்கான வருவாயாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து எவரும் வருவதில்லை. இதனால் அவர்கள் தங்களின் வருவாயை முற்றிலுமாக இழந்துள்ளனர்.
இருந்தும் அவர்கள் நடத்தி வரும் விடுதிகளுக்கான மாதாந்த வாடகையை வீட்டின் சொந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இது அவர்களை பெரிதும் பாதித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மேலும் தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலுள்ள உறவினர்களின் வருவாயை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது வெளிநாட்டவரே தங்களின் பொருளாதாரங்களை இழந்து அல்லாடும் அதேவேளை, அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையிலும் உள்ளனர். எனவே இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் நிலை பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த நிலை ஒரே மாதிரியானதாக இருந்த போதும், இந்தியாவில் வாழும் மக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தொகை அதிகம். உலகில் உயர்ந்த பணக்காரர்களும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர். அதேபோல் மிக வறுமையான ஏழைகளும் இந்தியாவிலேயே வசிக்கின்றனர்.
இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் பரவாயில்லை, தனக்கு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார்.
சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் இன் தற்போதைய நெருக்கடியை காரணம் காட்டி விடுதலை செய்ததை பிரித்தானியா நாடாளுமன்றம் கடுமையாக விசனத்தை தெரிவித்துள்ளது.
அரச தலைவரின் இந்த எழுந்தமானமான முடிவு, சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் படையினர் எவரும் தண்டனை பெறமாட்டார்கள் என்பதை காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது கருதப்படும் அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 3,008 பேர் பலியாகியுள்ளதுடன், 160,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,342 பேர் பலியாகியுள்ளதுடன், 67,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமக்கு உதவிகள் தேவை என பகிரங்கமாக உதவி கேட்டுள்ளார் நியூயோர்க் மாநிலத்தின் ஆளுநர் அன்ரூ கியூமோ. இந்தப் போரில் மருத்துவ அதிகாரிகள் தான் எமது படையினர். அவர்களுக்கு ஓய்வு தேவை, வைத்தியர்களுக்கு ஓய்வு தேவை, 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றும் தாதிகளுக்கு ஓய்வு தேவை எமக்கு உதவுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், அமெரிக்கா கடற்படையின் மருத்துவக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் கொம்போட் என்ற கப்பல் 1000 நோயாளர் படுக்கை வசதிகளுடன் நியூயோர்க் துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.
உலகில் இதுவரை 38,000 பேர் பலியாகியுள்ளதுடன், 784,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இதனை எழுத முனைகின்றோம்.
31 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ மண் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தவேளையில் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழீழம் சார்ந்த செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்கி, அழிப்பதற்கு இந்தியப் படையினரும், தமிழ்த் தேசத் துரோகிகளும் முயன்று கொண்டிருந்தனர்.இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் வெளிக்கொண்டுவர அறிவாற்றல் மிக்க சிலர் துணிந்து செயல்பட்டனர்.
தமிழீழமெங்கும் பல அறிவாளர்கள் தேசிய விடுதலை இயக்ககத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராகச் செயல்பட்டு தங்களை அர்ப்பணித்ததையும் தமிழீழ மண் மறக்கவில்லை.இந்தவகையில் மட்டக்களப்பில் வணசிங்கா ஐயா அவர்களுடைய தமிழ்த் தேசியப்பற்றோடு இணைந்த மக்கள் சேவையையும் நினைவு கூர்வது பொருத்தமான ஒன்றாகும்.
ஆண்டுகள் பல கடந்தாலும் அறிவாற்றல் மிக்க வணசிங்கா ஐயா போன்றவர்களை மட்டக்களப்பு மக்களும், கல்விசார் சமூகமும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது. இவரைப்பற்றி எழுத எண்ணுகின்றபோது மட்டக்களப்பின் மண்வாசனையையும், மண்ணோடு இணைந்த விடுதலைசார்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கல்விசார் பணிகளையும் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலை இயக்கம் சார்ந்த பதிவுகளை பலரும், பல்வேறு கால கட்டங்களை முன்வைக்கின்ற இவ்வேளையில் தங்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த அறிவாளர்களின் செயல்திறன் பற்றிய பதிவுகளைக் கொண்டதான வரலாற்றில் வணசிங்கா ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றதாகவும், தற்கால தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மட்டக்களப்பில் கல்விமான்களில் ஒருவரான வணசிங்கா ஐயா அனைவராலும், மதிக்கப்பெற்ற மகத்தான மனிதர் என்பதனை அவருடைய தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பணிகளிலும், மக்கள் நலன்சார்ந்த பணிகளிலுமிருந்தும் அறியமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை என்னும் ஊரில்13 . 01 . 1926 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததனால் மட்டக்களப்பு புனித மரியநாயகி பள்ளிக்கூடத்தில் தங்கி கல்வி கற்றார். பின்பு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1948 ம் ஆண்டு வெளியேறினார்.
13 . 01 .1949 ம்ஆண்டு கொழும்பு மத்துகம புனித மேரிஸ் ஆங்கிலக் கல்லூரியில் உதவி ஆசிரியராக முதல்பணி நியமனம் பெற்றார். பின்பு பத்து ஆண்டுகள் மலையகம் ஹட்டன் புனித ஜோன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு 1968 ம் ஆண்டு ஐந்தாம் தர பாடசாலை அதிபர் பதவியும், 1973 ம் ஆண்டு மூன்றாம் தர பாடசாலை அதிபர் பதவியும் கிடைத்தது.15 .01 .1975 ம்ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பக்கல்வி பயின்ற மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தின் அதிபரானார்.
அரசியல் பழிவாங்கல் காரணமாக கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் பாடசாலைக்கு 18 . 05 . 1979 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். 02 . 03 .1982 ம் ஆண்டு தொடக்கம் 10 . 01 .1986 ம்ஆண்டு பதவிக்கால ஒய்வு பெறும்வரை மீண்டும் அரசடி மகா வித்தியாலய அதிபராக பணிபுரிந்தார்.
1969 ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத் தலைவரானார். அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கமும்,அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்கமும் இணைந்து உருவாக்கிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவராக 1974 ம்ஆண்டு தெரிவு செயப்பட்டார். ஓய்வு பெறும்வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்.
சீனாவில் நடைபெற்ற கல்விசார் தொழிற்சங்க சம்மேளன மகாநாட்டில் 1965 ம் ஆண்டிலும், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்க சம்மேளன மகாநாட்டில் 1979 ம் ஆண்டிலும், பம்பாய்க்கு அருகிலுள்ள ‘கொள்காப்பூர்’ என்னுமிடத்தில் நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களினதும், கல்லூரிகளினதும்,ஆசிரியர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் 1981ம்ஆண்டிலும், அன்றைய மேற்கு ஜெர்மனி ‘பிராங்போர்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய தொழிலாளர் கல்வி என்னும் பொருள் பற்றிய மகாநாட்டில் 1983 ம் ஆண்டிலும், பிரான்சிலுள்ள ‘மார்க் செயின்’ என்னுமிடத்தில் நடந்த சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்கத் சம்மேளன மகா நாட்டில்1985 ம் ஆண்டிலும் கலந்துகொண்டு தமிழருக்கும், தொழில் சங்கப்பணிகளுக்கும் பெருமைசேர்த்தார்.
அத்துடன் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் இயங்கும் முறைகளை அவதானித்து திரும்பியிருந்தார்.
தாய் மொழியான தமிழிலும், அயல் மொழியான சிங்களத்திலும், அனைத்துலக மொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெற்றவர், இம் மொழிகள்மூலம் மேடையில் பேசுவதிலும் வல்லவராகவிருந்தார்.
மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத் தொடங்கியகாலம் 1956 ம் ஆண்டிலிருந்து என்பதனை நாம் அறிந்தவரையில் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகராமிக்கவர்கள் என்ற சுயநலப் போர்வையில் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது.
இந்த அரசியலுடான விடுதலைப் பயணத்தில் கால்பதித்த வணசிங்கா ஐயா தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களிலும்,1961 ம் ஆண்டில் நடந்த தமிழர் உரிமைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் முன்னின்று ஈடுபட்டார்.
இவருடைய அரசியல் விடுதலைப் பயணம் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் மட்டும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலையோடு அமைந்தாக இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில்’தமிழீழம்’ என்பதை தேர்தல் கொள்கையாகக் கொண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.இத் தேர்தலில் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்த தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியுமிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தமிழீழக் கோரிக்கைக்கு கிடைத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியப்பற்றோடு, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தேசிய விடுதலை இயக்கத்தையும் தமது இறுதிக்காலம் வரை ஆதரித்தவர்களில் வணசிங்கா ஐயா அவர்களை முதன்மையாக குறிப்பிடமுடியும்.
1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியோடு இளைஞர்களின் எழுச்சியும் விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்ததாக இருந்தன. இக் காலத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் மாவீரர் லெப் . ராஜா (பரமதேவா) ,மேஜர் வேணுதாஸ் அவர்களுடைய தொடர்பு வணசிங்கா ஐயாவுக்கு நெருக்கமாக இருந்ததனால் இவ்வாறான இளைஞர்களின் மதிப்புக்குரியவராகவும் இருந்தார்.
மட்டக்களப்பு நகரை மையப்படுத்தி பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்றபோதும், தேர்தல் நோக்கமில்லாத இவரைப் போன்றவர்களின் ஆதரவு மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருந்ததை இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோது அறியமுடிந்தது.
தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டுமென்ற செயலில், இந்தியப் படையினர் தமிழ்த் தேசத்துரோகிகளோடு இணைந்து செயல்படுகின்ற வேளையில் எழுந்த அனைத்து அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்கொண்ட ஒரு சிலரில் வணசிங்கா ஐயா அவர்களை குறிப்பிடமுடியும்.
தமிழ் மக்களுக்குகெதிரான அடக்குமுறைகளை மக்கள்குழு ஊடாக வெளிக்கொண்டு வருவதிலும். இந்தியப் படையினராலும்,தமிழ்த் தேசத் துரோகிகளாலும் நடத்தப்படும் அட்டூழியங்களை அவர்களிடமே தட்டிக் கேட்பதிலும் வணசிங்கா ஐயா அவர்கள் பின் நிற்கவில்லை, அத்தோடு கைது செய்யப்பட்ட இளைஞர்களை இந்திய படை முகாமுக்குச் சென்று படையினருடன் வாதாடி மீட்டு வருவதிலும் இவருடைய பங்கு அதிகமாக இருந்தது.
போலியான தீர்வுடனும், அடக்குமுறையிலும் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்பிய இந்தியப்படை தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கி 1989 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது.
இந்த நிகழ்வு தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்தது. இத் தேர்தலில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு தமிழ்த் தேசியத்தின் சார்பில் மேற்கூறப்பட்ட கூட்டணியை எதிர்த்து தமிழர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. யுத்தம் நிறுத்தப் படவேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவற்றை முன் நிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட இவர்களுக்கு தமிழ்த் தேசியப் பற்றாளர்களான கல்விமான்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மடக்களப்பு மாவட்டத்தில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்புக்கு ஆதரவாக வணசிங்கா ஐயா அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஆதரவு வழங்கினார். அடக்குமுறைக்கும், அடாவடித்தனங்களுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த இத் தேர்தலில் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய வேட்பாளர்களான பிரின்ஸ் காசிநாதர் , யோசேப் பரராஜசிங்கம், சாம் தம்பிமுத்து இவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் உட்பட்டதான இந்தியப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.
ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பான சுயேட்சைக் குழுவுக்கு அன்றைய அரசடி மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.இத் தேர்தல் முடிவுகளின்படி மாவட்டத்தில் 55 , 131 வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 46 , 419 வாக்குகள் சுயேச்சை குழுவுக்கும் கிடைத்தது.
தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது மட்டக்களப்புத் தொகுதியில் சுயேட்சைக் குழுவினருக்கு கூட்டணியைவிட அதிகபடியான வாக்குகள் கிடைத்திருந்தன.
கள்ள வாக்குகளின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதும், அமிர்தலிங்கம் , யோசேப் பரராஜசிங்கம் போன்றவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை.
இத் தேர்தல் முடிவின்படி மக்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததையும் குறிப்பிட முடியும். ஏனெனில் திருகோணமலையில் இரண்டு தமிழர் தரப்பு ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (சுயேட்சைக் குழு) மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்.
1977 ம் ஆண்டுக்குப்பின் நடந்த அடுத்த தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்களது ஆணையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வெறும் சொல்லாகவும்,தேர்தல் அரசியலாகவும் இருந்த ‘தமிழீழம்’ என்பதை இலட்சியமாக வரிந்துகட்டி களத்தில் பயணித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மக்களும் அவர்களோடு பயணித்தார்கள் என்பதை வணசிங்கா ஐயா போன்ற அறிவாளர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
லெப் ராஜா (பரமதேவா)அவர்களின் விடுதலைப் பயணம் விடுதலைப் புலிகளோடு இதனை சங்கமித்தத்தைத் தொடர்ந்து , அந்த இளைஞன் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து கொண்டதன் பின்பு வணசிங்கா ஐயா, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஏற்றுக் கொண்டார்.
நாம் முன்பு குறிப்பிட்டது போல் தேசியத் தலைவர் ஆரம்பக்கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தின் அதிபராக பணிபுரிந்த அவரின் தேசியப் பற்று தன்னலமற்றதாக இருந்ததை எப்போதும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியும். காலம் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.
மட்டக்களப்பு _ அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களின் மதிப்புக்குரியவராக வணசிங்கா ஐயா அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியத்தையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் ஆழமாக நேசித்த வணசிங்கா ஐயா அவர்களின் வீட்டுக்கு ஆரம்பகாலப் போராளிகள் சென்று வருவது வழக்கமாகவிருந்தது. போராளிகளை அன்பாக உபசரித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதையும், தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
1988 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கத்திலும், அன்னை பூபதி அவர்களின் அறப்போரிலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.
மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம்பொருந்திய, நீதிக்கான குழுவாக செயல்பட்டதற்கும், பல்வேறுபட்ட அரச இயந்திரங்கள்,அரசியல் கட்சிகள் உட்பட்ட, இராணுவப்பிரிவுகளும் மக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் அப்போது இருந்ததற்கும் மக்கள் குழுவின் பொறுப்பு வாய்ந்த பதவியில் வணசிங்கா ஐயா போன்றவர்கள் அமர்ந்திருந்தது ஒரு காரணமாகும். ஏனெனில் இவர்களின் மறைவுக்குப் பின்பு மக்கள் குழு பலம்பொருந்திய அமைப்பாக இயங்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
நிமிர்ந்த நடையும், நேரிய பார்வையும், அகன்ற முகத்தில் அழகான மீசையும், ஆணித்தரமாக பதில்களை கூட்டங்களில் முன்வைக்கும் கம்பீரமான குரலும், ஆக்கிரமிப்பு வாதிகளின் தமிழின அழிப்புக்கு தடையாக இருந்தது.
1986 ம் ஆண்டில் அதிபர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற வணசிங்கா ஐயா அரசடி மகா வித்தியாலய அதிபர் விடுதியிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு கல்முனை வீதியில் அரசடிச்சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இக் காலத்தில் மட்டக்களப்பு நகரில் அரசியலில் ஈடுபட்ட சிலர் இந்தியப் படையினருடான உறவை மிகநெருக்கமாகப் பேணிவந்தனர். தமிழ்த் தேசியத்தின் பற்றோடு செயல்படுகின்ற அறிவாளர்களை அழிப்பதன் மூலம் அடக்குமுறைக்குள், திணிக்கப்பட்ட தீர்வுக்குள், சிங்களத்திற்கு ஆதரவாக தமிழ்மக்களை வழிநடத்தமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக விருந்தனர்.
இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் நடந்த அறிவாளர் அழிப்பில் வணசிங்கா ஐயா அவர்களையும் இணைத்துக்கொண்டனர்.
31 . 03 .1989 அன்று மாலை வேளையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வணசிங்கா ஐயா அவர்களை சந்திப்பதற்கென வந்திருந்த தமிழ் இளைஞர் இருவரையும் நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது இருக்கையில் அமருகின்றபோது, அந்த கொடியவர்களால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே வணசிங்கா ஐயா சாவடைந்தார்.
அன்று இந்தியப்படைகளுடன் சேர்ந்து அவர்களின் ஓட்டுக்கு குழுவாக இயங்கிய தேசவிரோத EPRLF கும்பலால் இந்த தேசப்பற்றாளன் படுகொலை செய்யப்பட்டான்.
இன்று இவரை நினைவில் கொள்ளுகின்ற வேளையில்,அன்று இவரின் இழப்பு மட்டக்களப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாக விருந்ததையும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அவர் நினைவாக வீற்றிருப்பார்.
எமது மண்ணில், எமது மக்களின் விடுதலைக்காக நாம் இழந்தது அதிகம்.
ஒவ்வொரு இழப்பிலும்,உணர்வை இழக்காமல், உரிமைக்காக உறுதியுடன் பயணித்தோம். எமது பயணம் இன்னும் தொடர்கின்றது. இலட்சியத்தின் எல்லையை நோக்கி …………..
கோரோனா வைரஸால் நேற்று உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய முகம்மத் ஜமால் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்திருந்தார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த நோயாளியின் விவரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
எனினும் அவர் நீண்டகாலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்து வருகிறார்.
அத்துடன், அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.
அவரது மகன்கள் இருவரும் வியாபார நோக்கங்களுக்கான கடந்த பெப்ரவரியில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்த நோயாளி நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் கோரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படாமலேயே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவரதுல் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்கள் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதி விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.
அந்தவகையில் வவுனியாமாவமட்டத்தில் பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் வேலங்குளம் விமானபடைதளம்,பெரியகட்டு இராணுவ முகாம் ஆகியபகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கனடா,இலண்டன் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் கடந்த(28)ஆம் திகதி விடுவிக்கப்பட்டநிலையில் 310 பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்,வேலங்குளம் விமானபடைதளத்தில் 206 பேரும், பெரியகட்டு முகாமில் இருந்து 104 பேருமே இதன்போது விடுவிக்கப்பட்டதுடன்,அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.இதேவளை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய்தொற்று இல்லைஎன்று உறுதிப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் அவர்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கையின் காலி,மாத்தறை ,கொழும்பு, கண்டி,அளுத்கம, ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாண்மையின மக்களும் வடக்கின் முல்லைத்தீவு,மன்னார், யாழ்பாணம்,வவுனியா,கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 28 தமிழ்மக்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் கடந்த சில தினங்களாக கொரோணா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் தொழிலுக்குச் செல்ல முடியாது கஷ்டப்படும் மக்களுக்காக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அவர்களின் விடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டது.
மறவன்குளம், ஈஸ்வரிபுரம், தரணிக்குளம், பூம்புகார், கல்மடு, சாளம்பன், முல்லைக்குளம், கோதண்டர் நொச்சிக்குளம், சுந்தரபுரம், புதுக்குளம், அம்மிவைத்தான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் கொரோணா வைரஸ் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தமது அன்றாட உணவுத் தேவையை நிர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
இவர்களுக்காக மனிதாபிமானத்துடன் வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் அரிசிஇ கோதுமை மாஇ சீனிஇ பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.
இச்செயற்பாட்டில் கிடாச்சூரி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் மற்றும் இளைஞர்களும் அத்துடன் வவுனியா வடக்கு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மேலும் இவ்வாறான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவைப்படுவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0766975042, 0776891688. அத்துடன் இப்பணிக்கு உதவி வழங்க விரும்புவோரும் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முகம் கொடுத்துள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொள்ளாது உண்மைக்கு புறம்பான பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு மக்களை கேட்டுள்ளது.
கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலால் முழு உலகும் அவதியுறும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இந்த சவாலை வெற்றிக்கொள்ள தீர்மானமிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறான நிலைமையில் மேற்குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகப்பூர்வ செய்திகளை மாத்திரம் நம்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்´
வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமிலிருந்து விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.
அந்தவகையில் வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 104 பேர் இன்றயதினம்(31) விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம் , கொழும்பு வவுனியா, மாத்தறை, கண்டி ,கலாவத்த, மீகவும, புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகளிற்கு கொரோனோ தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வதிவிடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய்தொற்று இல்லைஎன்று உறுதிப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நாட்டில் அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கால் பட்டினியை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஆலயங்களும் ஏனைய பொது அமைப்புகளும் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியிலும், சிறிலங்காவிலும் அதிகரித்துச் செல்வதால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. பெண்தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், அங்கவீனர்கள், தினசரி வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் சொல்லொணா வறுமைத் துன்பத்தில் அகப்பட்டு தவிக்கின்றனர். இது மிக மோசமான நிலைக்கு சென்று பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலை ஏற்படப் போகிறது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
இந்நிலையில் இதுவரை உதவி வந்த பொது அமைப்புகள், தனவந்தர்கள் போன்றோரும் தமது உதவிகளை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆலயங்களும், கமநல கேந்திர நிலையங்களுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளும் தங்கள் அமைப்புக்களில் இருக்கு ஒரு பகுதி நிதியை அல்லலுறும் மக்களின் நிவாரணத்திற்காக உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக உரையாடியதாகவும் அவர்கள் தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.