3,000 அதிகமானோர் பலி – உதவி கேட்கிறது அமெரிக்கா

கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது கருதப்படும் அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 3,008 பேர் பலியாகியுள்ளதுடன், 160,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,342 பேர் பலியாகியுள்ளதுடன், 67,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு உதவிகள் தேவை என பகிரங்கமாக உதவி கேட்டுள்ளார் நியூயோர்க் மாநிலத்தின் ஆளுநர் அன்ரூ கியூமோ. இந்தப் போரில் மருத்துவ அதிகாரிகள் தான் எமது படையினர். அவர்களுக்கு ஓய்வு தேவை, வைத்தியர்களுக்கு ஓய்வு தேவை, 12 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றும் தாதிகளுக்கு ஓய்வு தேவை எமக்கு உதவுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அமெரிக்கா கடற்படையின் மருத்துவக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் கொம்போட் என்ற கப்பல் 1000 நோயாளர் படுக்கை வசதிகளுடன் நியூயோர்க் துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.

உலகில் இதுவரை 38,000 பேர் பலியாகியுள்ளதுடன், 784,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.