ஏழு பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள். அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலைக்காக தண்டனை பெற்று வரும் 7பேரையும் அவர்களின் வீடுகளில் இருக்க அனுமதிக்குமாறு பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரேனா வைரஸ் தாங்கத்தினால் சமூக விலகல் தேவைப்படுகின்றது. சிறைகள் சமூக விலகலுக்கு உகந்தவை அல்ல. எனவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இந்த 7 கைதிகளையும் வீடுகளில் இருக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 1071பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமூக விலகலை பின்பற்றும் விதமாக சில சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பபட்டுள்ளனர்.

சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தில் உள்ள சிறைவாசிகள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து 58 நவீன செல்போன்கள் வாங்கப்பட்டு தினமும் ஒவ்வொரு கைதியும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வீடியோ அழைப்பில் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த வசதி முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 கைதிகளையும் பரோல் போன்ற நிபந்தனை விடுமுறையில் அனுப்பி வைக்குமாறு அற்புதம்மாள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அற்புதம்மாள் தனது ருவிற்றர் பதிவில் நோயாளிகள், 10 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளை வீட்டிற்கு அனுப்பி அவர்களை தமது வீடுகளில் இருக்க அனுமதியுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். 7 தமிழர்களையும் விடுவிக்குமாறு தமிழக ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பியும் இன்னும் அதன் மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அற்புதம்மாள் வேதனை தெரிவித்து ருவிற் பதிந்துள்ளார்.