இதனிடையே, நாம் இன்று பெளத்தத்தை பிரதான மதமாக ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பின் கீழ் வாழ்கிறோம். அரைவேக்காடக இருக்கும் புதிய அரசியலமைப்பு அறிக்கையில் கூட இதை நாம் இது பெரும் பிரச்சினையாக பார்க்கவில்லை. ஆகவே நான் இந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன் ஆனால் எனது உரை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் இன்று (16) தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆனால், அங்கேயே நான் நிற்கவில்லை. அரசியலமைப்புரீதியாக பெளத்த நாடாக இருக்கும்போதே இது இலங்கையாகவும் இருக்கிறது. இலங்கை அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தம் என்று சொல்லும்போது அதை ஏன் “சிங்கள பெளத்தம்” என்ற வரையறைக்குள் கொண்டு வருகிறார்கள் என நாம் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

நான் என் உரையின் மூலம், முழுக்க சிங்கள பெளத்தர்களால் நிரம்பி இருந்த அந்த அரங்கத்தில் இலங்கையர் அடையாளத்தை நோக்கி செல்வதற்கான ஒரு கலந்துரையாடல் யோசனையை முன் வைத்தேன். தம்மை இலங்கையர் என்று சொல்வதை விட “சிங்கள-பெளத்தர்” என்று சொல்வதில் ஒரு பாதுகாப்பை ஏன் சிங்களவர்கள் அடைகிறார்கள்?

அதேபோல் ஏன், தமிழர்கள், முஸ்லிம்கள் தமது இன அடையாளங்கள் தொடர்பில் அதிக பெருமை கொள்கிறார்கள்? ஏனென்றால், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் தமது சகோதர இனத்தவர்களின் நோக்கங்கள் பற்றிய கேள்விகளும், பயங்களும் உள்ளன. ஆகவே இந்த பயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்காதவரை இந்நாட்டில் “இலங்கையர்” என்ற உணர்வு வராது.

இலங்கையில் முதன் “பயங்கரவாத” கொலை நடந்தது தென்னிலங்கையிலேயே, 1950 களில் பிரதமர் பண்டாரநாயக்காவை கொன்ற சோமராம தேரோவை, பெளத்த தேரர்கள் இருந்த அந்த அரங்கத்தில் ஞாபகப்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.