வன்முறைகளை கட்டுப்படுத்த வான்படையின் உதவியை கோரியுள்ளது சிறீலங்கா அரசு

சிறீலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தனது வான்படையை பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.

வான்படை உலங்குவானூர்திகள் மூலம் இடங்களை கண்காணித்துவரும் சிறீலங்கா வான்படையினர் கலவரம் மேற்கொள்வோரை படம் எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறீலங்கா வான்படை பேச்சாளர் குறுப் கப்டன் ஜிஹான் செனிவிரட்னா தெரிவித்துள்ளார்.

வான்படை உலங்குவானூர்திகள் 24 மணிநேரமும் பறப்பதாகவும், நாட்டில் பதற்றத்தை தணிப்பதே அதன் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலவரங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நோக்கத்துடன் சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் சிறீலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் சிங்கள வன்முறையாளர்களுடன் இணைந்து செயற்பட்டது பல இடங்களில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு சாதனங்களில் பதிவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.