முள்ளிவாய்க்கால் படுகொலை ஒரு இனப்படுகெலையாகும் – கனடா எதிர்க்கட்சித் தலைவர்

முள்ளிவாய்க்காவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலையின் 10 ஆவது நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் நாள் நினைவுகூரப்படவுள்ளது. இந்த நினைவு தினத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து கொள்வதற்கு நானும் விரும்புகின்றேன் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்டெரா ஹொவத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நீதிக்கும், சுதந்திரத்திற்குமாக போராடும் தமிழ் இனத்துடன் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகின்றேன். மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காவில் பல ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது போரை நிறுத்துவதற்காக தமிழ் மக்களுடன் இணைந்து நானும் கனடாவின் வீதிகளில் இறங்கி போராடியிருந்தேன். சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். புதிய ஜனநாயக் கட்சி 2016 ஆம் ஆண்டு குயின்ஸ் பார்க்கில் முதலாவது இனப்படுகொலை கூட்டத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த வருடம் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தமிழினப் படுகொலை வாரம் தொடர்பான சட்டமூலத்திற்கும் நாளை (16) நாம் ஆதரவுகளை வழங்கவுள்ளோம்.

மனித உரிமைகளுக்காக போராடும் தமிழ் மக்களுடன் நாம் கைகோர்ப்போம் நீங்கள் எமது உதவிகளை எப்போதும் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.