Home Blog Page 2248

தமிழர் நலன்சார்ந்து செயற்பட முடியாத நிலையில் அரசின் அங்கமாகஇருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு கவுழும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது தமிழ் மக்கள் நலன்களை மறந்து அரசை தாங்கிப்பிடிக்க கூடியவர்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் இலக்கு வாரஇதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு.

கேள்வி:- அவசரகால நிலைமைகள் அமுலாக்கப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகத்தின் நிலைமை என்ன?

பதில்:- ஏற்கனவே தமிழர் தாயகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப் பட்டிருக் கின்றது. ஆனாலும்கூட இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருந்தது. ஆனால் இப்பொழுது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் பல பகுதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகளும் இராணுவ சுற்றி வளைப்புகளும் கைதுகளும் ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணம் என்பது யுத்தத்திற்குப் பின்னர் மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்து வந்தது. அத்தகைய வடக்கு மாகாணம் இன்று ஏதோ ஒரு யுத்தப் பிரதேசம் போன்று காட்சி அளிப்பதுடன் மக்களும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைப்போன்றே சில வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். வயதான பிரயாணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட தொடர்ச்சியாக பிரயாணம் செய்வோர் பல்வேறு சோதனைச் சாவடிகளில் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். வடக்கு-கிழக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கும் சமயத்தில் இராணுவம் இதனை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆகவே இந்த அவசரகால நிலை என்பது தமிழ் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த சனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்தும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வான் ஒன்றில் பயணித்த பயணிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் வானில் தாங்களே சில பொருட்களை வைத்துவிட்டு வானில் வந்தவர்களைக் கைது செய்ததாகவும் பின்னர் காவல் துறையினரின் திட்டமிட்ட செயல் அம்பலமானதும் வேறு வழியின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதன் மூலம் அவசரகாலச் சட்டத்தின்கீழ் அமைதியாக இருக்கும் தமிழர்கள் திட்டமிட்டு சீண்டப்படுவது நிரூபணமாகிறது.

கேள்வி:- ஐ.எஸ் தாக்குதலின் பின்னர் இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையின் பின்னணி என்னவாக உள்ளது?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலைக் குண்டு தாக்குதல் என்பது மிகப் பயங்கரமானது என்பதும் அது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்பதிலும் எமக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் இந்த சம்பவம் நடைபெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் இருக்கும் சில முஸ்லிம் நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெறுவதாகவும் இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் ஊடக வெளியில் பேசப்பட்டு வந்திருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல், முக்கியமாக முஸ்லிம் மதத் தலைவர்கள் இதுதொடர்பாக முன்னைய பாதுகாப்புச் செயலாளர் உட்பட பாதுகாப்புப் பிரதானிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் உரிய தரப்பினரால் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னர், புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் ஆயுதங்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதுதொடர்பான தொடர் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. பின்னர் வவுணதீவில் சோதனைச் சாவடியில் காவலில் இருந்த இரண்டு காவல் துறையினர் கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டனர். அப்பொழுதும் ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளப்படாமல் அதனை திசை திருப்பும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட அப்பாவியொருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

இரண்டு காவல் துறையினர்  கொல்லப்பட்டபோதுகூட உண்மையைக் கண்டறிவதில் பாதுகாப்புப் பிரிவினர் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னர், காத்தான்குடியில் ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டுவைத்து வெடிக்க வைக்கப்பட்டது. அதனையும்கூட காவல் துறையினரோ  அல்லது புலனாய்வுப் பிரிவினரோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்பொழுது அரச தரப்பிலிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருக்கின்ற 26 முஸ்லிம்கள் ஐஎஸ் ஐஎஸ்சில் இணைந்து அவர்களுக்கான பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்களுக்கான ஊதியம் இலங்கை இராணுவத்தினரிமிருந்து இன்றுவரை சென்றுகொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

இறுதியாக இத்தகைய ஒரு தாக்குதல் நடைபெறப்போகிறது என்பதை இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைக்கு அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலும் கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னரே கடந்த 21ஆம் திகதிய உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் அரசும் புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?

மிக நீண்டகாலமாக ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக பல தகவல்கள் கிடைத்தும் அவை எதுவும் கையாளப்படாமல் அத்தீவிரவாத அமைப்பு தன்னை பாரிய அளவில் வளர்த்துக்கொள்ள இலங்கை பாதுகாப்புத்துறையினர் ஊக்கமளித்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதி ஓர் அரசியல் பின்னணி ஊடாகவே இது நடைபெற்றிருக்க முடியும். முன்னைய அரசாங்கத்திற்கும் இன்றைய அரசாங்கத்திற்கும் இதில் பங்கிருப்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும்கூட மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மறுதாக்குதல்களோ கலவரங்களோ நடைபெறவில்லை. ஆனால் மூன்றுவாரம் கழித்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை பிற இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவை ஒரு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதியே இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான இன முறுகல் இன முரண்பாடுகளை அதிகரிப்பதினூடாக சிங்கள பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்களே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களினூடாக அறியக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைச்சர் ரிசாட், ஆளந ர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் மீது குற்றச்சாட்டு க்கள் மேலெழுந்துள்ள நிலையில் அதுபற்றி கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- ஹிஸ்புல்லா அசாத்சாலி போன்றவர்களை ஆளுநர்களாக சனாதிபதி முஸ்லிம் வாக்குவங்கியைக் கைப்பற்றுவதற்காகவே நியமித்துள்ளார். அதேபோன்று ரிசாட் பதியுதீனை அமைச்சராக்குவதன் மூலம் ஐ.தே.க. தனது முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தனது தற்போதைய அரசாங்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இவர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவர்கள் தொடர்பாக இப்பொழுது பாரிய குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது. இவர்கள் அரசியலுக்கு வரும்பொழுது, சாதாரணமானவர்களாகவே வந்தார்கள். இவர்கள் இலட்சாதிபதிகளாகவோ கோடீஸ்வரர்களாகவோ இருக்கவில்லை. ஆனால் இன்று தொழிற்சாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இவர்கள் மாறியுள்ளனர். இவ்வளவு பெரும்தொகை நிதி இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது? ஒன்றில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது பாரிய அளவு ஊழல் செய்திருக்க வேண்டும் அன்றேல் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான நிதி கிடைத்திருக்க வேண்டும்.

இவர்கள் தமது அரசியல் பலத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை ஹிஸ்புல்லா பல இடங்களில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இவர்களது அரசியல் அதிகாரத்தினூடாக தமிழ் மக்களுக்கு அல்லது சைவ கோயில்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் இவர்களால் அனைத்துத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டனர். இவற்றிற்கு மேலாக பல குற்றச்சாட்டுகளும் மக்களால் சுமத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு படிமேல் சென்று வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடுமென்றும் அமைச்சுப் பதவியைத் துறந்தேனும் வடக்கு-கிழக்கு இணைப்பைத் தடுத்து நிறுத்துவேன் என்று ஆளுநர் ஹிஸ்புல்லாவும் ரிசாட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆளுநர்களுக்கும், அமைச்சருக்கும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளுக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்களைப் பாதுகாப்பதில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் பல தரப்பிலிருந்தும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழலில் இவர்களை இவர்களது பதவிகளிலிருந்து இடைநிறுத்தி இவை தொடர்பான ஒரு முழுமையான விசாரணையை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த நிலைப்பாட்டை சனாதிபதியோ பிரதமரோ எடுப்பதாகத் தெரியவில்லை.

எதிர்கால அரசியலே அவர்களது இலக்காக உள்ளது. குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மீண்டெழுவதற்கு இன்னும் பல ஆண்டு ஆகலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்த குண்டுத்தாக்குதல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்கூட சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பதும் குறுகிய அரசியல் இலாபமே இவர்களது முதன்மையான விடயமாக இருப்பதையும் நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- ஆளும் தரப்பு பிரதிநிதிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சம் காணப்படுகின்ற நிலையில் தமிழர் தரப்பு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று கருதுகின் றீர்கள்? 

பதில்:- தமிழர் தரப்பாக இன்று பாராளுமன்றத்தில் செயற்படக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவாகவும் அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவாகவுமே செயற்பட்டு வருகின்றது. இது தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி ரெலோவாக இருந்தாலும் சரி புளொட்டாக இருந்தாலும் சரி இறுதியாக இவர்களது கூட்டு முடிவென்பது அரசைப் பாதுகாக்கும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. ஆகவே இப்பொழுதுகூட ரிசாட்பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தினையே தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் நலன்களிலிருந்து இன்றும்கூட அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வக்கற்றவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதென்பதும் ஒரு வருந்தத்தக்க செயலாக இருக்கின்றது. ஆளும் தரப்புப் பிரதிநிதியின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆட்சி கவிழும்நிலை ஏற்பட்டால் அதனைத் தாங்கிப் பிடிக்கக்கூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகள் பலவற்றை இவர்களால் நிறைவேற்ற முடியும். ஆனால் இவை தொடர்பாக அரசுடன் பேசி அவ்வாறான விடயங்களை கையாள்வதற்குப் பதிலாக கண்மூடித்தனமாக அரசாங்கத்தைப் பாதுகாப்பது ஒன்றே இவர்களது ஒரே கடமையாக இவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பது அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது.

கேள்வி:-இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளை எப்படிப்பார்க் கின்றீர்கள்? அடுத்த கட்டம் இந்தியத் தரப்பினை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு அணுக வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இந்தியாவில் பா.ஜ.கவும் தமிழகத்தில் தி.மு.கவும் பெருவெற்றி பெற்றுள்ளன. இந்திய மக்களின் ஆணை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் எதிர்பார்ப் புக்களுடன் வழங்கப்பட்டிருகின்றது. அவ்வாறிருக்க, எம்மைப்பொறுத்த வரையில், தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பல்வேறு அணுகுமுறைகள் காணப்படு கின்றன. அதில்மிக முக்கியமானதொரு விடயமாகவே அயல் நாடான இந்தியாவுடனான அணுகுமுறையை கொள்ளவேண்டியுள்ளது.

இலங்கையில் மஹிந்த, மைத்திரி, ரணில் இப்படி யார் ஆட்சிப்பீடத்திலிருந்தாலும் சீன சார்பான நிலைப்பாடொன்றே மையங்கொண்டுள்ளது. முதலீடுகளைச் செய்வதற்கு அனுமதிக்கின்றமை முதல், இறுதியாக செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வரையில் கணிசமான இடைவெளிகளில் அந்நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதன்மூலம் ஆட்சியாளர்களின் போக்கினை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.

அப்படியிருக்கையில், அபிலாசைகளைப் பெறுவதற்கான உரிமைப்போராட்ட பயணத்தில் தமிழர்கள் தனியே சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், சர்வதேசத்தினையும் மட்டும் நம்பிக் கொண்டிருப்பது பொருத்தமற்ற செயற்பாடாகவே கொள்ளவேண்டியுள்ளது. அவர்களு டனான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேசமயத்தில் பிராந்திய ரீதியிலும், அயல் நாடு என்ற வகையிலும் இந்தியாவுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேண வேண்டியுள்ளது.

அண்மைக்காலமாக தமிழ் தலைவர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசுடன் மட்டுமல்ல, தமிழக தரப்புக்களுடனேயே தொடர்ச்சியான பிணைப்பொன்று இருப்பதை அவதானிக்க முடியவில்லை. இது மிகப்பெரும் வெற்றிடத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலையில் தற்போது இந்திய மத்திய அரசு அறுதிப்பெரும்பான்மை பெற்று ஸ்திரமான ஆட்சியொன்றை கொண்டுள்ளது. ஆகவே கடந்தகாலத்தினை விடவும் தமிழர்களின் விடயத்தினை மிகவும் அவதானத்துடன் ஆழமாக அவர்கள் ஊடாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடர்ச்சியான அணுகு முறைகள் ஊடாக கொள்கைரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி எமது நியாயமான தீர்வினைப் பெறுவதற்குரிய நகர்வுகளைச் செய்ய வேண்டும்.பூகோள அரசியல் போக்கினை சரியாக புரிந்துகொண்டு இந்த நகர்வுகளைச் செய்தாக வேண்டியுள்ளது. ஆகவே தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனையாவது சரியாக பயன்படுத்திக்கொள்வதோடு தமிழக உறவுகளையும் புதுப்பித்துக்கொள்வது அவசியமாகின்றது.

மைத்திரி கூறியும் யாழில் இராணுவ கெடுபிடிகள் குறையவில்லை

வடக்கில் இராணுவ கெடுபிடிகளைக் குறைக்குமாறு, இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும், அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், சோதனைகள் இடம்பெற்றிருந்தது.

எனினும் நாட்டின் பிற இடங்களைவிட வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருப்பதுடன், பயணிகளின் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதுடன், பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

இதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர். பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் குறைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். இதனை ஏற்ற ஜனாதிபதி இராணுவத் தளபதியிடம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி, ஆனையிறவு, நாவற்குழி போன்ற இடங்களில் இராணுவத்தினர் பயணத் தடைகளை விதித்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் இராணுவத்தின் கெடுபிடியில் சிக்குண்டு பயணிக்கின்றமையை காணமுடிகின்றது.

தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரமாக மீண்டும் பதவியேற்க்கவுள்ள நநேரந்திர மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் முயற்சியினை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.

தமிழீழ மக்கள் இந்திய மக்களுடன் வரலாற்றுபூர்வமாக நட்புறவைக் கொண்டவர்கள். எமது மக்கள் இந்த நட்புறவு தொடர வேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார்கள் என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தருணத்தில், இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒரு சேரப் பயன்தரக்கூடியது என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழீழ தேசம் என்றும் இந்தியாவின் நட்புசக்தியாகவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவு தொடர்பாக இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தாங்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியானது இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி சுமங்கல டயஸ்

சிறிலங்கா விமானப்படையின் தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி நாளை மறுதினம் ஓய்வுபெறவிருப்பதால், புதிய தளபதியாக விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஸல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.

நியமனத்திற்கான உத்தியோகéர்வ அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஓய்வுபெறவுள்ள எயார் மார்ஸல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் விமானப்படைத் தளபதியாக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக, ரவி விஜயகுணவர்த்தன, யாழ். காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

TRO வின் ஆவணங்கள் வவுனியாவில் சிக்கின

இன்று (27.05) காலை, வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள, பாவனையற்ற வீடொன்றிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு (TRO) சொந்தமான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

படையினர், புலனாய்வு அமைப்பினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, மேற்படி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு விடுதலைப் புலிகள் ஆட்சியிலிருந்த போது செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்குச் சொந்தமான அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவே மீட்கப்பட்ட பொருட்களாகும்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரம் வந்துவிட்டது – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கான  நேரம் இப்போது வந்து விட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளும் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பது பற்றி சொல்ல முடியாது.

தவறென்று தெரிந்தும், பல அரசியல் காரணங்களை சுட்டிக்காட்டி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்கும் எதிராக மக்கள் செயற்படுவார்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தென்னிலங்கை அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்வதற்குரிய சாத்தியங்கள் தென்படுவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அதனைத் தடுப்பதற்கு மேற்குலகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கோத்தபாயா மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னியும் அதுவே என தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டிய நிலைக்கு முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதும், கோத்தபாயாவுக்கு சதகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக்கிரமிப்புத் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது சிறிலங்கா காவல் துறை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றிருந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.முல்லைதீவினை சேர்ந்த குமணன் எனும் ஊடகவியலாளரே முல்லைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
அங்கு விகாரதிபதியால் அத்துமீறி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்ள் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் இன்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த விகாரதிபதிக்கு ஆதரவாக காவல்துறை செயற்படுவதான குற்றச்சாட்டின் மத்தியில் இன்று கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கை காவல்துறையினர் இன்று கண்காணிப்பு கமராவை அகற்றவும் பெயர் பலகையினை பொருத்தவும் முற்பட்டமை தொடர்பாக அறிக்கையிட சென்றிருந்த போதே வீரகேசரி பத்திரிகை செய்தியாளரான குமணன் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுமுள்ளார்.
அதன் பின்னராக அங்கு வந்திருந்த கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தூசணத்தினால் திட்டி தாக்கியதாக தெரியவருகின்றது.
குமணனால் வீரகேசரி பத்திரிகையில் அறிக்கையிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலேயே இன்று ஆலய அறங்காவலர் சபையினால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டிருந்தது.
வடமாகாண ரீதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான அறிக்கையிடலில் குமணன் முதலாமிட பரிசை தட்டிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதியில் சோதனைகளை அதிகரிக்கும் சிறீலங்கா படையினர் – இன்று கிளிநொச்சியில்

கிளிநொச்சி  மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளின் இன்று (27) விசேட சோதனைகள் இடம்பெற்றன.

பொலிசாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் பொலிசார் மற்றம் படையினர் ஈடுபட்டனர்.

பாடசாலை சூழல் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன.

21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.

இனிடையே தென்னிலங்கையில் பொருமளவான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் அண்மையில் இடம்பெற்றபோதும் சிறீலங்கா படைத்தரப்பு வடபகுதியில் சோதனைகளையும், படையினரின் பிரசன்னத்தையும் அதிகரித்து வருவது தமிழ் மக்கள் மீது ஒரு இராணுவ அழுத்தத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Kili 27 5 2019 வடபகுதியில் சோதனைகளை அதிகரிக்கும் சிறீலங்கா படையினர் - இன்று கிளிநொச்சியில்

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் சங்கிலிய மன்னனின் 400ஆம் ஆண்டு நினைவு

யாழ். முத்திரச்சந்தியிலுள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற சங்கிலி மன்னனின் 400ஆவது ஆண்டு நினைவு தினத்தை, சிவசேனை அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. பிரமுகர், யாழ். இந்தியத் துணைத்தூதல், யாழ். மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் ஆட்சி நிறைவின் பின்னர் ஈழத் தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பிறக்சிற் குழு வெற்றி – ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தண்டனை

கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கடும்போக்கு கொண்ட பெராச் இன் கட்சியின் இந்த வெற்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று (26) இரவு வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பிரக்சிற் கட்சி 28 ஆசனங்களையும், லிபரல் டெமோக்கிரட்டிவ் கட்சி 15 ஆசனங்களையும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 7 ஆசனங்களையும், ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறி;த்த விவாதங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரித்தானியாப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவின் வரலாற்றில் கொன்சவேட்டிவ் கட்சி சந்தித்த மிகப்பெரும் தோல்வி இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பேச்சுக்களில் ஈடுபடும் குழுவில் தனது கட்சிக்கும் இடம் வேண்டும் என பெராச் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெராச் இன் கட்சி 32 விகித வாக்குக்களைப் பெற்றுள்ளது.

இது ஒரு பெரிய வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் வெளியேறுவதற்கான கால எல்லையை நாம் கொண்டுள்ளோம். அந்த நாள் தான் நாம் வெளியேறும் நாளாக இருக்கும் என தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெராச் தெரிவித்துள்ளார்.

எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர், நாமும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறவேண்டும், எதிர்வரும் ஐந்து மாதங்களில் நாம் ஒரு தீர்மானத்தை எட்டுவோம். அதன் மூலம் எந்த நிலை வந்தாலும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரேசா மேயின் பிரக்சிற் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள பிரதம உறுப்பினரான ஒலி றொபின்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதற்குரிய பணிகளை இரகசியமாக செய்வதாக பிரக்சிற் குழுவின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.