தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரமாக மீண்டும் பதவியேற்க்கவுள்ள நநேரந்திர மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் முயற்சியினை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.

தமிழீழ மக்கள் இந்திய மக்களுடன் வரலாற்றுபூர்வமாக நட்புறவைக் கொண்டவர்கள். எமது மக்கள் இந்த நட்புறவு தொடர வேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார்கள் என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தருணத்தில், இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒரு சேரப் பயன்தரக்கூடியது என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழீழ தேசம் என்றும் இந்தியாவின் நட்புசக்தியாகவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவு தொடர்பாக இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தாங்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியானது இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.