Home Blog Page 1949

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மூடுவிழா? கோட்டா அரசு ஆலோசனை

முன்னைய அரசால் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சின் அதிகாரியயாருவர் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அரசு மீளாய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தை அரசு தொடருமா எனத் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி உரியமுறையில் மீளாய்வை மேற்கொண்ட பின்னர் அது குறித்து தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் முன்னைய அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் காணாமற்போனோர் பணியகத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது.

எனினும் அச்சமயம் எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசில் இடம்பெற்றிருந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

புதிய அரசமைப்பு பணியை முன்னெடுங்கள்: கோட்டாவிடம் சுமந்திரன் கோரிக்கை

“கடந்த அரசின் காலத்தில் இந்த நாடாளுமன்றமே ஏகமனதான தீர்மானம் மூலம் அரசமைப்புப் பேரவையாக மாறி, புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அது கணிசமான அளவு முன்னேறியுள்ளது. அந்தப் பணியை அப்படியே முன்னெடுத்து, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதான புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பூர்த்தி செய்யுங்கள்”

இவ்வாறு புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை நேற்று நாடாளுமன்ற உரை மூலம் கோரியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய அவரது கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எனது இந்த அறிக்கையானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பானதாகும். இக்கொள்கை பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதி னால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி கடந்த நவம்பர் 16, 2019 அன்று மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள,பெளத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி அவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு தயாராக இல்லை என்பதாகும்.

இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டு வரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமன்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.”

அதிரடியாக வந்தார் சந்திரிகா! குழப்பத்துடன் முடிந்த சுதந்திரக் கட்சிக் கூட்டம்

சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது. அப்போது அதற்கு அழைப்பு விடுக்கப்படாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மைத்திரிபால அங்கு வரவில்லை. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றனர் என்றும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்

தன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரணில் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டார். இதன்போதே, மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

நான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன் என்று ரணில் குறிப்பிட்டார். தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சி.டிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது, இந்தப் பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.

அவை ஊடகங்களிலும், எம்.பிக்களின் கைகளிலும் எப்படி சென்றடைந்தன என்பது பெரிய கேள்விக்குறி என ரணில் தெரிவித்தார். அத்துடன், பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராய வேண்டும். எந்த எம்.பியாவது சட்டத்தை மீறியிருந்தால் இந்தச் சபைக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை டில்லி செல்கின்றார் தினேஷ் குணவர்த்தன! முக்கிய விடயங்கள் ஆராயப்படும்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை வியாழக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

வெளிவிகார அமைச்சராக பதவியேற்ற பின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்

சொகுசு பங்களாவிலிருந்து சம்மந்தனை வெளியேற்ற அமைச்சரவைப் பத்திரம் வருகிறது-அகரன்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவினால் எதிர்கட்சி தலைவராக இருந்த சம்பந்தன் அவர்களுக்கு தலைநகரின் முக்கிய பகுதியான கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒன்றரை ஏக்கர் காணியும் சொகுசு பங்களா ஒன்றும் வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஸா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சர்களும் தங்களது  பதவிகளை ராஜினாமா செய்ததுடன் அவர்கள் பாவித்த அரச பங்களாக்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்திருந்தனர்.

இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் மட்டும் எதிர்கட்சி தலைவருக்காக வழங்கப்பட்ட சொகுசு பங்களாவையும் வாகனங்களையும் புதிய அரசாங்கம் மீளக் கையளிக்கும் படி கேட்டும் கையளிக்காது விடாப்பிடியில் இருந்துவருகின்றார். இதனால் அரசு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து சம்பந்தன் அவர்களை அந்த பங்களாவில் இருந்து வெளியேற்றி அரசாங்கம் அதை பொறுப்பெடுக்கும் நிலமைக்கு சம்பந்தன் நடந்து கொண்டமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் பெரிய தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகிந்தராஜபக்ஸ அவர்கள் பராளுமன்றத்தில் உரையாற்றும்போது எதிர்கட்சி தலைவருக்காக வளங்கப்பட்ட பங்களாவை சம்பந்தன் அவர்கள் இன்னும் ஒப்படைக்காமல் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கடந்த எழுபது வருடகாலமாக அகிம்சை வழியிலும் ஆயுதப்போராட்ட வழியிலும் அளப்பரிய தியாகங்களை செய்திருக்கின்ற நிலையில்; சம்பந்தனுடைய நடவடிக்கையானது விடுதலைக்காக தம்மை ஆபுதி ஆக்கிக்கொண்ட போராளிகள் பொதுமக்களினுடைய உயிர் தியாகங்களை கொச்சைப்படுத்தியதற்கு சமனான ஒரு செயலாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக இப்படியான அற்பசொற்ப சலுகைகளுக்காக காலத்திற்கு காலம் தமிழரசுக் கட்சியும் அதனோடு இணைந்திருக்கின்ற பங்காளி கட்சிகளும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து கிடைத்த சந்தர்ப்பங்களையும் மக்கள் நலன்களுக்காக பேரம்பேச வேண்டிய சந்தர்ப்பங்களையும் இப்படியான சலுகைகளை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டிருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் சிறீலங்கா காவல்துறையினர்

யாழ். வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிசார் சிறிய குற்றங்களுக்கும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இலஞ்சம் பெறுவதுடன், வாகனத்தில் வரும் வயது முதிர்ந்தவர்களுக்குக்கூட இலஞ்சம் பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் நெல்லியடி பஸ் நிலையத்தில் நின்ற போக்குவரத்துப் பொலிசார் மூன்று இளைஞர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக கூறி இலஞ்சம் பெற்றுள்ளனர். அத்துடன் அங்குள்ள மலசலகூடப் பகுதிக்கு செல்லுமாறு கூறி அங்கு வைத்தே இலஞ்ச் பெற்றுகொள்கின்றனர்.

இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் – யாழ். அரச அதிபர்

கச்சதீவுத திருவிழாவில் இம்முறை இலங்கை மற்றும் இந்தியர்கள் 9ஆயிரம் பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று(07) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு கடற்படையினரின் உதவி மிக முக்கியமான ஒன்றாகும். ஆழ்கடல் போக்குவரத்திற்கு அவர்களின் உதவி இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக திருவிழாவிற்கு முதல் நாளான 6ஆம் திகதி அதிகாலை 5மணியில் இருந்து மதியம் 11மணிவரைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அன்று காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவு நோக்கிய படகு சேவையும் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த முறை திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து மட்டும் 3ஆயிரம் பேரும் இலங்கையில் இருந்து 6ஆயிரம் பேரும் கலந்து கொண்டனர். இதேபோன்று இம்முறையும் 9ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

 

 

 

வங்காலைப் படுகொலை நினைவு

மன்னார்- வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் நினைவுநாள்அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் வங்காலை புனித ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவரோடு மரணித்த பொது மக்களுக்காகவும் பொது வழிபாடு இடம்பெற்றதுடன் அவருடைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொது மக்கள் 10 பேரை சுட்டு படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்

18 வயதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளை சிறைச்சாலைக்குள் தொலைத்துவிட்ட நிலையில் 46 ஆவது வயதில் மரணமடைந்திருக்கின்றார். புதுவருட தினத்தன்று கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் அவர் இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

27 வருடகால சிறைவாசத்தில் பரிசாகக் கிடைத்த நோய்களுக்கு எதிராகப் போராடி அதில்  தோல்வியடைந்த நிலையில் அவர் மரணமடைந்த போது, அவருக்கென யாரும் இருக்கவில்லை. யாருமற்ற ஒரு அனாதையாகவே அவர் மரணமடைந்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோது, கிழக்கில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக 1993 இல் இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு, மொறக்கொட்டான்சோலையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற நபரே இவ்வாறு 27 வருடங்களைச் சிறையில் தொலைத்துவிட்ட நிலையில் உயிரிழந்திருக்கின்றார். இவரது மரணம் சிறைச்சாலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், பலமான செய்தி ஒன்றையும் சொல்லிச் சென்றிருக்கின்றது. இவ்வாறான மரணங்கள் இனியும் தொடருமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த  இவருக்கு சிறைச்சாலையில் சீரான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. பொதுவாக சிறைச்சாலைகளில் காணப்படும் நிலை இதுதான். அதிலும் தமிழ்க் கைதி என்றால், கவனிப்பு எப்படியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் மகசீன் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும், பின்னர்  அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.03 இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்
அதிகளவு காலம் சிறையில் இருந்த மூத்த அரசியல் கைதியாக இவர் இருந்துள்ளார். இவரது பெற்றோர் ஆரம்ப காலங்களில் இவரை வந்து பார்வையிட்டபோதும் பின்னர் அவர்களும் மகனின் நினைவுகளுடன் மரணித்து விட்டனர். அந்த மரணச் சடங்குகளுக்குக் கூட சென்றுவருவதற்கு மகேந்திரனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதன் பின்னர் இவரை எவரும் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிடுவது கிடையாது. நோய்களுடன் தனிமையும் அவரை மோசமாகப் பாதித்திருக்க வேண்டும். பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவருக்கு  ஒரு ஆயுள் தண்டனையும், 50 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளைத் திருத்துவதற்காக வழங்கப்படுவது. புனர்வாழ்வின் மூலம் மறுவாழ்வை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுதான் சிறைத்தண்டனையின் நோக்கம். அவர்களை உடல் – உள ரீதியில் நோயாளிகளாக்கி மரணத்தைக் கொடுப்பதற்காக சிறைத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இலங்கை போன்ற நாடுகளில் சிறைத் தண்டனை என்பது எத்தனை கைதிகளைத் திருத்தியிருக்கின்றது? எத்தனை கைதிகளுக்கு மறுவாழ்வைக் கொடுத்திருக்கின்றது?

பொதுவாக மரண தண்டனைக் கைதிகள் கூட, அது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 20 அல்லது 21 வருடங்களில் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றார்கள். இங்கு 18 வயதில் கைதான மகேந்திரன் 27 வருங்களைச் சிறைக்கூண்டுக்குள் தொலைத்திருக்கின்றார். நான்கு சுவர்களுக்குள் அவரது வாழ்க்கை முடங்கிப் போயிருக்கின்றது. வாழ்க்கையின் முக்கியமான – இளமையான – இனிமையான 27 வருட காலத்தை இழந்த சோகம் கூட அவரது நோய்களுக்குக்  காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இரண்டு விடயங்களை இதில் கவனிக்க வேண்டும். ஒன்று – 18 வயதில் செய்த ஒரு குற்றத்துக்கு இந்தளவு கொடூரமான தண்டனை அவசியமா? என்பது. 18 வயது என்பது மேஜராகும் வயது. அதனால்தான் வழக்கைப் பதிவு செய்யும் போது அவரது வயது 19 எனக் குறிப்பிடப்பட்டதாகத் தெரிகின்றது. 18 வயது என்றால், இந்தளவு கொடூரமான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதால் வயதைக் கூட பொலிஸார் மாற்றியிருக்கின்றார்கள். இந்த வயதில் செய்திருக்கக் கூடிய ஒரு குற்றம் சுய அறிவால் செய்யப்பட்டதா அல்லது தூண்டுதலால் செய்யப்பட்டதா என ஆராயப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாவது – கிழக்கு மாகாணத்தில் அப்போது இடம்பெற்ற அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்ததாகச் சொல்லப்படுபவர் பின்னர் அரசாங்கத்தில் இணைந்து பிரதி அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். பிரதான கட்சி ஒன்றின் பிரதித் தலைவராகவும் இருந்திருக்கின்றார். அவர் ஒரு சுதந்திர புருஷராக இராணுவப் பாதுகாப்புடன் நடமாடித் திரியும் போது, அதில் நேரடியாகச் சம்பந்தப்படாத இளைஞர் ஒருவர் கைதாகி இந்தளவு கொடூர தண்டனையையும் பெற்று சிறைக்குள்ளேயே மரணமடைந்திருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?AFP4619670 Articolo இதுதான் இறுதி மரணமாக இருக்குமா? கொழும்பிலிருந்து அகிலன்போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களும் கடந்துவிட்டது. அரசியல் ரீதியான காரணங்களுக்காக கைதாகி தடுப்பில் உள்ளவர்களின் விவகாரம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் இச்சம்பவத்தினால் மேலும் அழுத்தி உணர்த்தப்பட்டிருக்கின்றது. அரசியல் கைதிகள் பல வகையாக இருக்கின்றார்கள். சிலருக்கு வழக்கோ விசாரணைகளோ இல்லை.

வேறு சிலர் விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள். ஒப்புதல் வாக்குமூலம் கடுமையான சித்திரவதைகளின் மூலம் பெறப்படும் ஒன்று. மரணமடைந்த மகேந்திரனும் அவ்வாறான ஒருவர்தான். அவரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் தண்டனை விதிக்கப்பட்டவர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பல வருட காலமாகவே பேசப்பட்டுவருகின்றது. ஜே.வி.பி. கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும், கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட சிலமாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஜனநாயக அரசியலில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் விடுதலைப் புலிகளைப் போல ஆயுதமேந்தி அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள்தான். தெருத்தெருவாக பலர் கொல்லப்பட்டு வீசப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்கள். பொது மன்னிப்பில் கூட இனவாதம் பார்க்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் இழுபறிப்படுவதற்கு காரணம் யார்? தமிழ் கட்சிகள் இணக்க அரசியலைச் செய்தும், முரண்பாட்டு அரசியல் செய்தும் கைதிகளின் விடுதலை குறித்து பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. கடந்த ஐந்து வருட காலத்தில் மைத்திரி – ரணில் அரசைப் பாதுகாப்பதில் பிரதான பங்கை வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்.

கைதிகளின் விடுதலையைச் சாத்தியமாக்கியிருக்கக்கூடிய பல வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருந்தது. ஆனால், ரணிலுக்கு சங்கடத்தைக் கொடுக்கக்கூடாது என்பதால் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இறுதியில் கம்பரரெலியா அரசியலின் மூலம் மக்கள் மனதை வெல்ல முயன்றார்கள். இறுதியில் அதுவும் தோல்விதான்.

கைதிகள் விவகாரம் கிணற்றில் போட்ட கல்லைப்போல அம்படியேதான் இருக்கின்றது. அதனால், சிறைச்சாலைக்குள்ளேயே 27 வருடங்களைத் தொலைத்த ஒவரை இழக்கவேண்டியதாயிற்று. மனோகரனின் மரணம்தான் சிறைச்சாலையில் இடம்பெற்ற இறுதி மரணமாக இருக்க வேண்டும். இதற்காக தமிழ்த் தரப்பினரிடம் உள்ள உபாயம் என்ன? கோத்தாபய அரசிடமிருந்து இதனை எவ்வாறு அவர்களால் சாதிக்க முடியும்?

தேர்தல் அரசியலையும், போட்டி அரசியலையும் ஓரங்கட்டிவிட்டு இது போன்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் என்பதையிட்டு தமிழ்த் தலைமைகள் இப்போதாவது உருப்படியாக எதனையாவது செய்வது குறித்து ஆராய வேண்டும். இல்லையெனில் மேலும் மரணங்கள் குறித்த செய்திகள் சிறைச்சாலைகளிலிருந்து வருவதைத் தடுக்க முடியாது.