இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 167 ஆசிரியர் தலையங்கம்

ஈழமக்களின் சார்பாக ஈழமக்களின் பிரதிநிநிதிகளே பேச வேண்டும்

“எங்கள் சார்பில் இந்தியா அரசிடம் பேச வேண்டும். இது இந்தியாவின் உரித்து” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார். இவ்விடத்தில் இறைமை என்பது எப்பொழுதும் மக்களிடத்திலேயே உண்டு. மக்களின் பிரதிநிதிகள் எனப்படுபவர்கள் தங்களை மக்கள் என்ன கொள்கையின் அடிப்படையில் தெரிந்தெடுத்தார்களோ அந்த மக்களின் விருப்பினை நிறைவு செய்யும் பெரும் பொறுப்பினை உடையவர்கள். ஆதலால் எப்பொழுதும் மக்களின் பிரதிநிதிகளே மக்களின் விருப்பை வெளிப்படுத்திப் பேச வேண்டும். அவர்களுக்குத்தான் அந்த உரித்தும் உண்டு. இவ்வாறு மக்களின் பிரதிநிதிகள் மக்களின் விருப்பை வெளிப்படுத்திப் பேசும் பொழுது, அதற்குப் பக்கதுணையாகப் பிராந்திய மேலாண்மைகளை, உலக வல்லாண்மைகளை இணைத்துக் கொள்ளும் ஆற்றலாளர்களாகத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிக முக்கியம்.

அதுவும் 2009க்குப் பின் சனநாயக வழிமுறைகள் ஊடாக ஈழத்தமிழர்கள், தங்களின் இறைமையை மீள்நிலைநிறுத்தும் நிலை தோன்றியுள்ளதால், இதுவரை ஈழத்தமிழ் மக்கள் தங்கள் இறைமையை நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களை இழக்காத நிலையில் புதிய சூழலுக்கு ஏற்ப ஈழமக்களின் விருப்பினை நடைமுறைப் படுத்துவதற்குப் பலமான கூட்டுத்தலைமை மிக அவசியம். இதற்கு ஈழத்தமிழர் பிரச்சினையின் இன்றைய நிலை என்ன என்ற தெளிவு ஈழமக்களின் பிரதிநிதிகளுக்கு அவசியம்.

ஈழத்தமிழர் பிரச்சினை மொழிப் பிரச்சினையாக, இனப் பிரச்சினையாக இருந்த காலமெல்லாம் மலையேறிப்போய், 22.05.1972 முதல் இன்று வரை ஐம்பது ஆண்டுகள் ஈழமக்கள் அரசற்ற தேசஇனமாகிய தாங்கள் பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்த தங்களுடைய இறைமை தங்களிடமே திரும்பி விட்ட சூழ்நிலையில், அதனைப் பயன்படுத்தித் தங்களுக்கான அரசை நிறுவுவதற்கான தேசநிர்மாணப் பணியிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் ஒரு தீவுக்குள் இரு அரசுகள் என்ற நிலையில் தங்களின் அரசுக்கான அனைத்துலக ஏற்புடைமையை உருவாக்கத்தக்க முறையில் ஈழத்தமிழர்கள் தங்களின் சமகால வரலாற்றைக் கட்டமைத்தனர்.

இந்திரா காந்தி அம்மையாரின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் தலைமைத் துவத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும், அனைத்துலக வலுச்சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சிறிலங்கா ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பிரிவினைப் போராட்டம் எனவும், போராட்ட முறைமைகளைப் பயங்கரவாதம் எனவும் மடைமாற்றம் செய்து, தனது ஈழத்தமிழின அழிப்புக்கான ஊக்கசக்தியாக, எந்த இந்திரா காந்தி அம்மையார் ஈழத்தமிழர் பிரச்சினையை ஆர்ஜன்டினாவின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை வரை கொண்டு சென்று, ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியும், ஆயுத வழங்கல்களும் செய்து, ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆயுத எதிர்ப்புப் போராட்டமாக வளர உதவினாரோ, அந்த இந்திரா காந்தி அம்மையாரின் இந்தியா உட்பட்ட உலகநாடுகளை மாற்றியமைத்துக் கொண்டது.

இந்தப் பின்னணியிலேயே 2009 இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் 31 ஆண்டுகால அரசு நோக்கிய அரசைச் செயலிழக்கச் செய்து, தனது ஆக்கிரமிப்பை மீளவும் ஈழமக்களின் மேலும், ஈழமண்ணின் மேலும் இன்று வரை படைபலத்தின் மூலமான இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி, ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் தனது ஆக்கிரமிப்பு ஆட்சியைத் தொடர்கிறது.

இந்நிலையில் இதனை மாற்றக் கூடிய அனைத்துலக முயற்சிகளுக்கு அடிப்படையாக உள்ள ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமைக் கோரிக்கையை இல்லாதொழிக்க ராசபக்ச குடும்பத்தினர் இலங்கை சிங்கள நாடு சிங்களவர் களுடைய இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பேணும் ஓரே சட்டமுறைமை கொண்டநாடு என அரச கொள்கைகளை வகுத்து, அவற்றை 2022இல் புதிய அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்த மிகவேகமாக முயன்று வருகின்றனர்.

இவ்விடத்தில் அனைத்துலக தலையீடுகளைத் தடுக்க உள்ளகப் பொறிமுறையில் நடமாடும் நீதி விசாரணை என்ற பெயரில் இனஅழிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறிய பண உதவியை வழங்கி, கூடவே நிலைமாற்று நீதியோ பரிகார நீதியோ இன்றி நீதியை விலைக்கு வாங்கி இறப்புச் சான்றிதழையும் வழங்கிட தற்போது சிறிலங்கா முயன்று வருகிறது.

அவ்வாறே அனைத்துலக தராதரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தைத் திருத்துவதாகக் கூறி, அதனை மேற்குலக நாடுகள் உள்ளக பொறிமுறையில் நீதி வழங்குவதற்கான தகுதியாக ஏற்க வைத்து, அனைத்துலக பொறிமுறைகளாலும், ஈழத்தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் இனஅழிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க இயலாது செய்ய முற்பட்டு வருகிறது.

அதே வேளை சீனாவிடம் கட்ட இயலாத அளவிற்குக் கடனை வாங்கி, தனது இறைமையை சீனாவிடம் இழந்து வரும் சிறிலங்கா, சீன இந்திய இந்துமா கடல் சமநிலை வலுவாக்கப் போட்டியை ஈழத்தமிழர்களின் இந்துமா கடல் கரையோரப் பகுதிகளுக்கு நகர்த்தும் முயற்சியில் இவ்வாண்டு ஈடுபடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதில் தனது கையை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை, இந்தியாவிடமே தேசிய நெருக்கடிகள் வருகையில் முதலில் உதவி கேட்க வேண்டும், அதற்கு இந்தியா மறுத்தாலே மற்றைய நாடுகளிடம் உதவி கேட்கலாம் என்னும் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீள்வலுப்படுத்த முயல்கிறது. இதற்காக இந்தியா சிறிலங்கா மாகாணசபைகளை அமைக்கவென சிறிலங்காவின் அரசியலமைப்பில் இணைத்துக் கொண்ட  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தத்தைப் புதிய அரசியலமைப்பிலும் உறுதிப்படுத்த தன்னாலான அழுத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்நேரத்தில் இந்த 13வது திருத்தம் இன்றைய காலகட்டத்தில் தமிழர் தாயகப் பகுதியின் இறைமையை உறுதி செய்யும் வகையிலான மாகாணசபையின் தோற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்று ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் பேச்சுக்களை முன்னெடுத்தாலே அது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உறுதியளிக்கும். நாட்டுக்குள் நாடு என்ற அடிப்படையில் இறைமையுடன், அதே வேளை ஒன்றிய அரசில் ஒரே நாடாக விளங்கும் பலநாடுகள் இன்று இதற்கு உதாரணங்களாக உலகில் உள்ளன. அத்தகைய ஒரு அரசாக சிறிலங்கா மாற்றப்பட்டாலே ஈழத்தமிழர்கள், தங்களுக்கான தனியரசே தங்களின் பாதுகாப்பான அமைதிக்கு ஒரேவழி என்று எடுத்த முடிவினை மாற்றாத ஒன்றிய அரசு ஒன்றின் தோற்றத்திற்கு வழிவகுக்கும். இதற்கு ஈழத்தமிழ் பிரதிநிதிகள் ஈழத்தமிழர் பிரச்சினை இறைமையை மீள்நிறுவும் பிரச்சினை என்று எடுத்துப்பேச வேண்டும். இதற்குத் துணையாக இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம்.