இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை அமெரிக்காவுடன் ஆராயும் பிரித்தானியா

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை

இலங்கை படை அதிகாரிகள் மீதான தடை குறித்து அமெரிக்காவுடனும், ஏனைய நாடுகளுடனும் தாம் கலந்துரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி திணைக்கள அமைச்சர் அமந்தா மிலிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியான ஜெனரல் சவீந்திர சில்வா மீது அமெரிக்கா கொண்டுவந்தது போல தடையை கொண்டுவர பிரித்தானியா அரசுக்கு என்ன ஆதாரங்கள் தேவை என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா ஆதாரங்களையும், தகவல்களையும் பிரித்தானியா அரசு சேகரித்து வைத்துள்ளது. பிரித்தானியாவின் அனைத்துல மனித உரிமை ஆய்வுக்குழு அதனை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

எதிர்கால தடை குறித்து நாம் எதிர்வுகூறுவதில்லை அது எமது நடவடிக்கைகளை பாதிக்கும் என அமந்தா மேலும் தெரிவித்துள்ளார்.