பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள் – துரைசாமி நடராஜா

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்

துரைசாமி நடராஜா

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்: சிறுவர்கள் சமூகச் சக்கரத்தில் மிகவும் முக்கியத்துவம்  மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களைப் புறந்தள்ளும் சமூகங்களோ அல்லது நாடோ எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் சிறுவர்களின் உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்தப்படுவதோடு அபிவிருத்திக்கு வலுசேர்க்க வேண்டிய பொறுப்பும் காணப்படுகின்றது. எனினும் மலையகத்தில் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது கேள்விக்குறியாகும். அண்மையில் ஹட்டனில் நடந்தேறிய சிறுவர் துன்புறுத்தல் சம்பவம் முழு மலையகத்தையும் தலைகுனிய வைத்திருக்கின்றது.

பாதுகாப்பு வழங்க வேண்டிய பெற்றோரே பிள்ளைகளை துன்புறுத்தி அவர்களின் உரிமைகளை பறித்தெடுப்பதென்பது வேலியே பயிரை மேய்ந்த நிலைக்கு ஒப்பானதாகும். இதைப்போன்று மலையகத்தில் இலைமறைகாயாக நிகழும் சிறுவர் மீதான உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் இன்னுமின்னும் அதிகமாகவேயுள்ளன. இவையனைத்தும் வெளிச்சத்துக்குகு கொண்டு வரப்பட்டு  குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பாகும் என்பதனையும் யாரும் மறந்து செயற்படுதல் கூடாது.

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்சிறுவர்கள் சிறப்பு மிக்கவர்கள். நாட்டின் எதிர்காலத்தை செதுக்குகின்ற சிற்பிகளாக அவர்கள் விளங்குகின்றார்கள். நாளைய உலகத்தின் தலைவர்களாக மிளிரப் போகின்றவர்கள் அவர்கள்தான். இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு  மற்றும் அபிவிருத்தி கருதி பல்வேறு ஆவணங்கள் காணப்படுகின்றன. 19 ம் நூற்றாண்டில் இருந்தே சர்வதேச ரீதியாக சிறுவர்கள் தொடர்பான கரிசனை இருந்து வந்துள்ளது. 1924 இல் சிறுவர்களின் நலன்கருதி ஜெனீவாவில் சர்வதேச பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. எனினும் அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமையினால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1948 இல் ஐ.நா. பொதுச்சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இது போதிய சாதக விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில் 1959 இல் ஐ.நா. பொதுச்சபையினால் சிறுவர் நலனைப் பாதுகாக்கும் 10 அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமும் 1924 ம் ஆண்டு பிரகடனத்தைப் போன்றே சட்ட வலுவற்றதாக காணப்பட்டது.

1989 இல் ஐ.நா. பொதுச்சபையினால் சிறுவர் உரிமைப் பிரகடனம் முன்வைக்கப்பட்ட நிலையில், 1991 இல் இலங்கை அரசு அதனை உறுதிப்படுத்தி ஏற்றுக் கொண்டது. சிறுவர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதனையும், அவர்களின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்தும் பிரகடனம் வலியுறுத்துகின்றது. இவ்வுரிமைகளை உறுதிப்படுத்துவது பெரியவர்களினதும், அரசாங்கத்தினதும் கடமையாகும்.

இலங்கையில் சட்டங்கள்

இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கேற்ப 1883 இல் முதல் முறையாக கோவையாக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவை மூலம் சிறுவர்களின் பாதுகாப்புக்கான பழைமை வாய்ந்த சட்டங்களின் ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1939 இல் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் பற்றிய கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. சய்போ (CYPO) என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் இக்கட்டளைச் சட்டம் இன்றும் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. 1956 ம் ஆண்டின் 47 ம் இலக்கம் கொண்ட  பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் சட்டம், 1995 ம் ஆண்டின் 22 ம் இலக்கம் கொண்ட தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 27 ம் இலக்கம் கொண்ட நீதிமன்ற ஒழுங்கமைப்பு (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 28 ம் இலக்கம் கொண்ட குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவை (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 29 ம் இலக்க தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டம் என்பன சிறுவர் தொடர்பில் முக்கிய சட்டங்களாகும்.

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்இவற்றுள் 1998 ம் ஆண்டின் 29 ம் இலக்க தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டத்தின் வாயிலாக சிறுவர் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்டம் சார்ந்த பல ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 1998 ம் ஆண்டின் 50 ம்  இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் மூலமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டது. இச்சபையானது சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய விசாரணை மற்றும் சட்டத்தை செயற்படுத்துதல், சட்டத்தை திருத்தம் செய்தல், ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள், சட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், தேசிய மட்டத்தில் விழிப்புணர்வூட்டல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றது. சிறுவர் நலன் சார்ந்த இன்னும் சில சட்டங்களும் இலங்கையில் காணப்படுகின்றன.

பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெற்றோரின் வகிபாகம் மிகவும் அதிகமாகும். பிள்ளைகளை அவர்களின் சிறந்த நலனை முன்னிட்டு அல்லாமல் மற்றும்படி பெற்றோரிடமிருந்து பிரித்தல் ஆகாது. பெற்றோர் பிரிந்து வாழ முடிவு செய்யும் பட்சத்தில் பிள்ளை இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் பிரிந்து வாழுமானால் இரு பெற்றோருடனும் தொடர்பு வைத்திருக்கும் உரிமை அப்பிள்ளைக்கு உண்டு. தம் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் இருவரும் கூட்டாக பொறுப்பேற்றல் வேண்டும்.பெற்றோர் இதனை நிறைவேற்றுவதற்கு அரசு ஆதரவளித்தல் வேண்டும். பிள்ளையின் பரிணாம வளர்ச்சித் திறனுக்கு ஏற்றவாறான நெறிமுறைகளைப் புகட்டுவதில் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள உரிமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் மதித்தல் வேண்டும் என்றெல்லாம் சிறுவர் உரிமை பற்றிய ஐ.நா. பிரகடனம் வலியுறுத்துகின்றது.

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச, தேசிய சட்டங்கள் பல காணப்படுகின்றபோதும், சிறுவர் உரிமை மீறல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை வருந்தத்தக்க விடயமாகும. மலையகத்திலும் இதனை நாம் நன்கு அவதானிக்க முடிகின்றது. மலையக தோட்டப் புறங்களில் பல சிறுவர்களின் கல்வி உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. பாடசாலைக்கு செல்லாது சில சிறுவர்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. கடந்த 2015 ம் ஆண்டின் தகவலொன்றின்படி பெருந்தோட்டத் துறையில் 06 – 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண் பிள்ளைகளும், 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே சுற்றித் திரிவதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றன. பெருந்தோட்டத் துறையில் தொழில் புரியும் 12.5 வீதமான சிறுவர்களில் 50.5 வீதமான சிறுவர்கள் வீட்டுப் பணியாட்களாகவுள்ளனர்.வர்த்தக நிலையங்களில் தொழில் புரிவோர் 24.8 வீதமாகும். நாட்கூலி வேலையில் 16.8 வீதமான சிறுவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கால்நடை வளர்ப்பில் 2.2 வீதமான சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏனைய தொழிற்றுறைகளில் 5.7 வீதமான சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாக  2015 ம் ஆண்டின் தகவல் மேலும் வலியுறுத்துகின்றது.

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் சிறுவர்களின் தொழில் நிலைமைகள் மிக மோசமாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக அச்சிறுவர்கள் இளம் பராயத்தை அடைகையில் அவர்கள் தரம் குறைந்த சுகாதாரத்தினைக் கொண்டவர்களாகவும், குறைந்த கல்வித் தரத்தினைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய போக்கு அடுத்த தலைமுறையிலும் சிறுவர் தொழிலாளர் உருவாவதற்கு வழிவகுக்கின்றது என்கிறார் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ஆர். சோபனாதேவி.

இதேவேளை பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால், அவர்களது வாழ்க்கையில் சிறந்த பல சந்தர்ப்பங்களை இழக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுகின்றது என்றும் திருமதி சோனாதேவி குறிப்பிடுகின்றார். பெருந்தோட்டங்களில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் ஊடகமாக தரகர்கள், பெற்றோர், ஏனைய உறவினர்கள், தொழில் வழங்குநர் போன்றோர் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு சிறுவர்கள் சில வேளைகளில் தாமாகவே சென்று வேலைக்கு சென்று விடும் ஒரு நிலையும் பெருந்தோட்டப்  பகுதிகளில் காணப்படுகின்றது. சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிந்திருந்தும் சில பெற்றோர்கள் வருமான மார்க்கம் கருதி பிள்ளைகளை தொழிலில் அமர்த்தி வருகின்றனர். இத்தகைய பெற்றோர்களே முதலில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சிறுவர்கள் பொருளாதார ரீதியில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்தும் ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் சிறுவர்களின் சுகாதாரத்திற்கும் உடல், உள, ஆன்மீக, ஒழுக்க அல்லது சமூக விருத்திக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த ஒரு விடயத்திலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சமூக,பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மை யினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூலகாரணமாக உள்ளதாக சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் 2002 ம் ஆண்டு அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை   விசேட தேவையுடைய சிறுவர்கள் பலரின் உரிமைகளும் மலையகத்தில் மீறப்படுகின்ற நிலையில் பெற்றோரின் பாமரத் தன்மையும் இதில் செல்வாக்கு செலுத்துகின்றது. இந்நிலையின் விசேட தேவையுடையோரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.

சிறுவர் உலகம்

பேணப்பட வேண்டிய சிறுவர் உரிமைகள்பெற்றோர் பிள்ளைகளின் காவலர்கள். தமது பிள்ளைகளூக்கு நல்லறிவூட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குள்ளது. எனினும் பெற்றோரே சில வேளைகளில் பிள்ளைகளின் உரிமைகளை வேரறுத்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் நிகழ்வுகளும் இல்லாமலில்லை. அண்மையில் ஹட்டன் பகுதியில் நடந்த சம்பவம் இதற்கொரு உதாரணமாகும். தமது பிள்ளைகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்திய தந்தையின் செயல் மிகவும் இழிவானது. பிள்ளைகளின் கண்ணீரையும் கதறலையும் பொருட்படுத்தாது தனது செயலை நியாயப்படுத்த இவர் முனைந்தாரே தவிர பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்க இவர் தவறியுள்ளார். அவரின் நியாயப்படுத்தலானது மீண்டும் மீண்டும் தவறுகள் இடம்பெறுவதற்கே உந்து சக்தியாகும் என்பதனையும் மறந்துவிடலாகாது. இத்தகைய செயற்பாடுகள் பிள்ளைகளிடத்தே பீதியையும் விரக்தியையும் ஏற்படுத்துவதோடு, நெறிபிறழ்வுத் தன்மைக்கும் இட்டுச் செல்வதாக அமையும். சமூகத்திற்கு நாட்டிற்கு பொருத்தப்பாடு இல்லாதவர்களாக பிள்ளைகள் உருவாவதற்கும் இத்தகைய சம்பவங்கள் வலுசேர்க்கும்.

சிறுவர் உலகம் என்பது வாழ்நாளில் மிகவும் சிறப்பான ஒரு பகுதியாகும். இந்த உலகத்தில் சிறுவர்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்தல் வேண்டும். அத்துமீறிய தலையீடுகள், அடக்குமுறைகள், துஷ்பிரயோகங்கள் போன்றவற்றால் சிறுவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுகின்றது. அவர்களின் இயல்பான திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. சிறுவர்கள் நடைப் பிணமாக வாழும் நிலைமை ஏற்பட்டுகின்றது. எனவே பிஞ்சுகளை சிதைக்காது நாட்டிற்கு பொருத்தப்பாடு உடையவர்களாக, விழுமியங்களை பின்பற்றுபவர்களாக செதுக்குவதே அவசியமான ஒன்றாகும் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Tamil News