அகிலன்
பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து வருகின்றது. உச்சத்தைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த சிங்கள மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். அரசாங்கத்துக்கான செல்வாக்குக் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதை ராஜபக்சக்களின் அடுத்த வாரிசான நாமல் ராஜபக்சவே பத்திரிகைப் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
ஆனால், அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு தீவிரமடைந்து வந்தாலும், அதனை அறுவடை செய்யக்கூடிய நிலையில் எதிரணி இல்லை. எதிரணிகள் பலவீனமாக இருப்பதுதான் ராஜபக்சக்களின் இன்றைய பலம். எதிர்க்கட்சிகளிடம் உறுதியான கட்டமைப்புக்களோ அல்லது, கவர்ச்சிகரமான தலைமையோ இல்லாததுதான் இதற்குக் காரணம்.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க முதலில் சந்திரிகாவுடனும், பின்னர் மஹிந்த ராஜபக்சவுடனும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனவசீகரம் மிக்க கவச்சிகரமான ஒரு தலைவராக அவரால் சாதிக்க முடியவில்லை. ராஜபக்சக்களின் ஆட்சி தொடர்வதற்கும் ரணிலின் பலவீனமான தலைமைதான் காரணமாகச் சொல்லப்பட்டது.
புதிய அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சந்திரிகா குமாரதுங்கா இறங்கி இருக்கின்றார் என வெளிவரும் செய்திகள் கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கி யிருக்கின்றன. முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்தித்து இது குறித்து பேச்சு வார்த்தைகளை அவர் முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2015 இல் இவ்வாறான முயற்சிக்கு சந்திரிகாவுடன் இணைந்து செயற்பட்ட மங்கள சமரவீர இன்றில்லை. ஆனால், சந்திரிகாவின் உறவினரான குமார வெல்கம சந்திரிகாவுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிகின்றது.
2015 இல் ராஜபக்ச அணியிலிருந்தே மைத்திரியை வெளியே எடுத்து எதிர்க்கட்சி களினதும், சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவுடன் களமிறக்கியதால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. அவ்வாறான நிலைமை ஒன்றும் தற்போது இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருந்தாலும் கூட, ராஜபக்சக்களின் குடும்பத்திலிருந்து களமிறங்கக்கூடிய பலமான ஒருவரை எதிர்கொள்ளத்தக்க வகையில் ஒருவரைத் தேடும் முயற்சியில் சந்திரிகா குமாரதுங்க இப்போதே இறங்கியிருக்கின்றார்.
இதற்காக சந்திரிகா எவ்வாறான ஒரு வியூகத்தை வகுக்கப்போகின்றார்? அது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பதைத்தான் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூர்ந்து அவதானிக்கின்றன.
மீண்டும் ஒரு பொதுவேட்பாளரைக் களமிறக்கினால் மட்டும்தான் ராஜபக்சக்களைத் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து தென்னிலங்கையில் வலுவாக உள்ளது. அதற்குப் பொருத்தமான கவர்ச்சிகரமான ஒரு வேட்பாளரைத் தேடும் முயற்சியில் தென்னிலங்கை அரசியல் சக்திகள் இறங்கியுள்ளன. குறிப்பாக சந்திரிகா குமாரதுங்கவை மையப்படுத்தி இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.
மார்ச் 5 ஆம் திகதி குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் திறந்துவைக்கப்படவிருக்கின்றது. குறிப்பிட்ட கட்சி ஏனைய தலைவர்களையும் இணைத்துக்கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்சக்களுடன் அதிருப்தியடைந்திருக்கும் சுசில் பிரேமஜயந்த, அர்ஜூனா ரணதுங்கக, அநுரபிரியதர்சன யாப்பா ஆகியோரையும் இணைத்துக்கொள்வது குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டணியின் சார்பில் பொதுவேட்பாளராக யார் களமிறக்கப்படுவார்கள் என்பதற்கான பதில் உத்தியோகபூர்வமாக இதுவரையில் வெளிவரவில்லை. கருஜயசூரிய, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்கள் இதற்காக முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த இருவரும் பரந்தளவுக்கு ஆதரவைப் பெறக்கூடிய கவர்ச்சிகரமான தலைவர்களாகக் காணப்படவில்லை.
இந்தப் பின்புலத்தில் மற்றொரு பெண்மணியை களமிறக்குவதற்கு சந்திரிகா திட்டமிடுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் – நீதித்துறை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்த நிலையில் துணிச்சலுடன் அதனை எதிர்த்து நின்று – அதற்காக தனது அதி உயர் பதவியையும் பறிகொடுத்த முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கதான் அவர்.
அதன் பின்னர் மைத்திரி – ரணில் ஆட்சியில் பறிக்கப்பட்ட பதவி அவருக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரேயொரு நாள் மட்டும் பதவியிலிருந்துவிட்டு அவர் ஓய்வு பெற்றார்.
அதன்பின்னர் பொது அரங்குகளுக்கு வராதிருந்த அவரை கடந்த வாரம் முக்கிய நிகழ்வு ஒன்றில் சந்திரிகா மேடையேற்றினார்.
கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற சந்திரிகா குறித்த நூல் வெளியீட்டில் பிரதான உரையாற்ற சிரானி அழைக்கப் பட்டிருந்தார். நாடு மிகவும் மோசமான ஒரு நிலையில் இருக்கின்றது என தனது உரையின் போது தெரிவித்த சிரானி பண்டாரநாயக்க, மக்கள் அனைவரும் நாடு எமக்கு என்ன செய்யும் எனச் சிந்திக்கவில்லை. நாட்டுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்பதையிட்டே சிந்திக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார்.
நீண்ட காலத்தின் பின்னர் சிரானி மேடையேற்றப்பட்டமையும், அவர் தனது மௌனத்தை கலைத்திருப்பதும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லி யிருப்பதாகவே கருதப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு முன்னர் காலிமுகத் திடல் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் இடம்பெற்ற பண்டாரநாயக்க நினைவுதின நிகழ்விலும் ஆளும் மொட்டு அணியின் உறுப்பினர்கள் பலரையும் காணமுடிந்தது.
சந்திரிகா மூன்று முனைகளில் காய்நகர்த்துவதாகத் தெரிகின்றது. முதலாவது, ஆளும் கட்சியிலுள்ள ராஜபக்ச அதிருப்தியாளர்களை தன்னுடன் இணைப்பது. இரண்டு எதிரணிகளை ஒன்றிணைப்பது. மூன்றாவது கவர்ச்சிகரமான பொது வேட்பாளர் ஒருவரை கண்டறிவது. இந்த முயற்சியில் சந்திரிகா எந்தளவுக்கு முன்னோக்கிச் செல்கின்றார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேவேளையில், அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக ராஜபக்சக்களும் இதற்கு எதிரான வியூகம் ஒன்றை அமைப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்க முடியும். ஆக, கொழும்பு அரசியல் அடுத்துவரும் வாரங்களில் சுவாரஸ்யமானதாகவே இருக்கப்போகின்றது.
- சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை எதிர்கொள்ளும் இந்தியா – தமிழில்: ஜெயந்திரன்
- பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாது – விரிவுரையாளர் திரு ஆ.நித்திலவர்ணன்
- இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்
[…] பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்துமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/ilakku-weekly-epaper-166-january-22-2022/ https://www.ilakku.org/ […]