இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 166 ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழரின் இறைமையை உறுதிப்படுத்துவதே பாதுகாப்பான அமைதிக்கான ஒரே வழி

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 27ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் படுகொலை நாள். இந்நாளை ஆங்கிலத்தில் உலக ‘கொலகோஸ்ட்’ (Holocaust) நாள் என்பர். இந்த ‘கொலகோஸ்ட்’ என்ற ஆங்கிலச் சொல்; தீயினால் சுட்டெரித்துச் சாம்பலாக்குதல் என்ற பொருள் கொண்டது. ஹிட்லரின்  காலத்து ஆறு மில்லியன்  யூத இனப்படுகொலையானது, யூத இனத்தையே சாம்பலாக்கிய வரலாறு என்னும்  பின்னணியில் கட்டமைக்கப்பட்டது. இந்த உலகப்படுகொலை நினைவேந்தல் நாள், 1933க்கும் 1945க்கும் இடையில் உலகில் யூத இனப்படுகொலைகள் நடந்தது போலவே, 1956க்கும் 2009க்கும் இடையில் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஒருமைப்பாட்டுடனும், தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்களில் 176000 பேருக்கு மேல் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் தொடர்ச்சியான திட்டமிட்ட இனஅழிப்பு அரசியல் நடவடிக்கைகளின் வழி இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சமகால மனிதப் படுகொலையை உலகம் நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் மிக அதிகளவில் இனப்படுகொலை செய்யப்பபட்ட, சிறிலங்காவின் இனஅழிப்பின் இறுதி நாளான 19.05.2009 ஐ மையப்படுத்தி மே-19 ஈழத் தமிழினப்படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டுமென உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் உலக நாடுகளிடம் வலியுறுத்த, இந்த உலகப்படுகொலை நாளில் உறுதி பூணல் வேண்டும். யூத இனஅழிப்பு படுகொலையாக அறிவிக்கப்பட்டதே உலகெங்கும் அலைவு உலைவு வாழ்வில் இருந்த யூதர்களுக்கு அவர்கள் இஸ்ரேலில் நிலையான வாழ்வு பெறச் செய்தமை வரலாறு.

அத்துடன் 1வது 2வது உலகப் பெரும்போர்களின் அனுபவத்தில் மீளவும் கொடிய போர்கள் தோன்றி இனப்படுகொலைகள் நிகழ அனுமதிக்கக் கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால் 2009ம் ஆண்டு 21ம் நூற்றாண்டின் முதல் மனிதப்படுகொலை நாளாக சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலை நாளான 19.05. 2009 அமைந்தது என்பது சமகால வரலாறு.  இனப்படுகொலைகள் இனி நடைபெற அனுமதிக்கக் கூடாதென்ற ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புரிமை நாடுகளும் ஈழத்தமிழினம் தங்கள் கண்களுக்கு எதிராகவே இனப்படுகொலை செய்யப்பட்டதை நாள்தோறும் நவீன தகவல் பரிமாற்ற வளர்ச்சி வழியாகத் தெளிவாக அறிந்த நிலையிலேயே அனுமதித்தன என்பது இன்றைய சமகால வரலாறு. இதனை புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் உலக மக்களுக்கு உணர்த்தி, இனிமேலாயினும் உலக நாடுகளும், அமைப்புக்களும் ஈழத்தமிழினத்திற்கான பாதுகாப்பை வழங்கச் செய்தல் அவசியம்.

இந்த ஆண்டு உலக இனப்படுகொலை நாளில் ‘நினைவு, கண்ணியம், நீதி’ என்ற எண்ணக்கருக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த உலகப் படுகொலை நாளில் 01. இனப்படுகொலைகளால் பாதிப்புற்ற ஒவ்வொருவரையும் நினைத்தல். இந்த நினைத்தலைப் பதிந்து வரலாறாக்குதல், 02 இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனத்தவரின் கண்ணியத்தையும், நீதியையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பில் உலக மக்கள் அனைவரும் உள்ளனர் என்பதை உறுதியுடன் எடுத்துரைத்தல், என்பனவற்றுக்கு  முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகளின் வழி ஈழத்தமிழர்களும் இனப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு நிலைமாற்று நீதியை முன்னெடுக்க இவ்வாண்டில் முயலுதல் அவசியம். இதற்கு ஈழத்தமிழினப் படுகொலைகள் குறித்த கண்காட்சிகள், நூல்கள், வாய்மொழிப் பதிவுகள் ஊடக நிகழ்ச்சிகள் வழி சான்றாதாரப் பலமளிக்கப்பட வேண்டும்.

மேலும் 1944இல் போலந்தினரான யூதவழக்கறிஞரான இரெபெல் லெம்கின் என்பவராலேயே இனப்படுகொலை என்பதன் ஆங்கிலச் சொல்லான ‘ஜெனோசைட்’ (Genocide) உலக அரசியலில் கட்டமைக்கப்பட்டது. கிரேக்கத்தில் இனத்தைக் குறிக்கும் சொல்லான ஜெனோ (Geno) என்பதையும், கொல்லுதல் என்பதைக் குறிக்கும இலத்தீன் சொல்லான “சைட்” (Cide) என்பதையும் இணைத்தே ‘ஜொனோசைட்’ என்ற சொல்லினை உருவாக்கினார். அப்படியாயின் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் தங்களுடைய மக்களுக்கு நடாத்தப்பட்ட இனஅழிப்பு என்பது இறைமையழிப்பு (Sovereign-Cide) எனப் புதுச்சொல்லுருவாக்கத்தை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ‘ஈழத்தமிழ் மக்களின் இறைமை சார்ந்த பிரச்சினை’.

அது வெறுமனே சிறுபான்மையினப் பிரச்சினை அல்ல. பிரிவினைக் கோரிக்கையும் அல்ல. ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த மண்ணில் வாழ்வதற்கான அடிப்படை  உரிமையை நிலைநாட்டல்.  இதனை உலகம் தெளிவாக உணர்ந்து கொள்ள வைத்தல் வேண்டும்.  சிறுபான்மைப் பிரச்சினை உள்ளக பொறிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இறைமைப்பிரச்சினை அனைத்துலக நாடுகளது அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இந்த அரசியல் எதார்த்தத்தை மாற்றக் கூடிய முறையில் ஈழத்தின் இன்றைய சிறிலங்காப் பாராளுமன்றத் தமிழ்தலைமைகள் சில 1949 முதல் 1975 வரை 26 ஆண்டுகள் முன்வைக்கப்பட்டு சிறிலங்காவால் வீசியெறியப்பட்ட சமஸ்டி தீர்வை மீளவும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

இவர்கள் சமஸ்டியைக் கோருவதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு பெறக் கூடிய சிறுபான்மையினத்துக்கான அரசியல் பரவலாக்கல் பிரச்சினையாக்கப்படும். ஆனால் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இன்றைய சிறிலங்கா அரசாங்கம் சமஸ்டியைக் கொடுக்காது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆயினும் இந்த உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு பெறுகிறோம் என்ற இவர்களின் இந்த கேவல அரசியல், ‘முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின் அழிப்பு’க்குப் பொறுப்பான படைத்தலைமைகள் படையினர் மேலான யுத்தக்குற்றச் செயல்கள் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் வன்முறைப்படுத்தல், என்பன குறித்த சான்றாதாரப்படுத்தல் முயற்சிகள் வழி, அனைத்துலக குற்றநீதிமன்ற விசாரணைக்கு அவர்களை நகர்த்த மனித உரிமைகள் ஆணையகம் எடுக்கும் முயற்சிகளையும் இந்த மார்ச்மாத மனித உரிமைகள் ஆணையக அமர்வில் வலுவிழக்க வைக்கச் சிறிலங்காவுக்குப் பெரிதும் உதவும்.  ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பது அவர்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாக அமைந்தாலே அவர்கள் பாதுகாப்பான அமைதியில் வாழ முடியும் என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply